Surjith Wilson rescue operation : மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்று மடங்கு சக்திவாய்ந்த புதிய ரிக் இயந்திரத்துடன் மழையிலும் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் மாலை குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அப்போதிலிருந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
நடுக்காட்டுப்பட்டியில் தீயணைப்பு படை வீரர்கள் இரண்டு நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மதுரை மணிகண்டன், கோவை ரூபின் டேனியல், ஐ.ஐ.டி குழுவினர், புதுக்கோட்டையைச் சேர்ந்த குழுவினர் என பலரும் குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும், குழந்தையை மீட்க இயலவில்லை.
மேலும் படிக்க : சிறுவன் சுர்ஜித்தினை மீட்பதில் ஏன் இத்தனை தாமதம்?
இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டப்பட்டு பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்டுவிடலாம் என்று செயல்பட்டனர். ஆனால், துளையிடும் ரிக் இயந்திரத்தின் திறன் போதுமானது இல்லை என்பதால் இதைவிட 3 மடங்கு சக்திவாய்ந்த ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டது.
தற்போது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் 80 அடி ஆழத்தில் உள்ளான். அதனால், இந்த புதிய ரிக் இயந்திரம் மூலம் மூன்று மடங்கு திறனுடன் வேகமாக துளையிட்டு குழந்தையை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 35 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
புதியதாக கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு துளையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. 98 அடி ஆழத்துக்கு பள்ளம் தொண்டப்பட்ட பின்னர் பக்கவாட்டில் துளையிடப்பட்டு குழந்தை மீட்கப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணிகள் நடைபெற்றுவரும் போது அங்கே இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மீட்பு பணி தொய்வடையுமோ என்று அச்சப்பட்ட மீட்புக் குழுவினர், மழைநீர் பள்ளத்தில் புகாமல் இருக்க பள்ளத்தைச் சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.
50 மணி நேரங்களைக் கடந்து தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. குழந்தை மீட்கப்படுவான் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பலரும் குழந்தை சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : ”நிச்சயமாக குழந்தையை மீட்போம்” – பெற்றோர்களுக்கு விஜயபாஸ்கர் ஆறுதல்