Advertisment

தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே... சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா

Jaibhim Movie Issue Update : ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே... சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா

Director Bharathiraja Statement For Jaibhim Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடந்த 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கிய இந்த படத்தில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். மேம் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது.

Advertisment

தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெறும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த படத்தில் வன்னியர் சமூதாயம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 9 கேள்விகளுடன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்கு நடிகர் சூர்யா தரப்பில் எழுத்துபூர்வமான பதில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்பீம் படத்தில் தப்பான காவல் அதிகாரியாக வரும் கேரக்டருக்கு குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டுள்ளது வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குருவை நினைவூட்டும் வகையில் உள்ளது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மவுனம் கலைத்த கலையுலகம்: சூர்யாவுக்கு ஆதரவு யார், எதிர்ப்பு யார்?

தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்,

சகோதரர் அன்புமணிக்கு வணக்கம்,

இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமை உங்களுக்கு பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது.

கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம்.

பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது

பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டுள்ளன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகிறார்கள்.

அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே ‘ஜெய்பீம்’. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரித்து தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

இன்றைய எளியோரின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்று பேசியது நாங்கள்தான். அன்று என் படம் ‘வேதம் புதிது’ முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் ‘ஜெய் பீம்’ படமும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும் தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர். அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீதான வன்மத்தையும் வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஒரு படைப்பின் சுதந்திரத்தை ஏற்றவாறு விடுவது இன்னும் நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளன. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே.

நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்கள் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.

இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்? ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துாக்கியது ஏன் எனப் புரியவில்லை. எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணிப்போம். நன்றி!

எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும்

பாரதிராஜா.

என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Surya Anbumani Ramadoss Bharathiraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment