எம்.ஜி.ஆரால் கட்டமைக்கப்பட்ட ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியை பணபலத்தைப் பயன்படுத்தி கைப்பற்றுவதற்குப் பதிலாக தைரியம் இருந்தால் புதிய கட்சியைத் தொடங்கி அதை நடத்துங்கள் என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க தலைவர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் தனது அணி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பி.எஸ் என்று அழைக்கப்படும் பன்னீர்செல்வம், பழனிசாமியின் சுயமரியாதை இல்லாத சுயபாணி போக்குதான் மாநிலத்தில் அ.தி.மு.க வலுவிழந்ததற்கு காரணம் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: எந்த பாசிச சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது: ஸ்டாலின் முன்னிலையில் சூரியனார் சுவாமிகள் பேச்சு
ஓ.பி.எஸ் அணி அரசியல் ஆலோசகரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆக்ரோஷமாக உரையாற்றினார். தனது வழக்கமான அமைதியான பாணியைப் போலல்லாமல், மோதல் தொனியில் பேசிய முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.ஸ், “எம்.ஜி.ஆர் நிறுவிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த நீங்கள் யார்?” என்று பழனிசாமியிடம் கேட்டார்.
கட்சியின் தலைமைப் பதவிக்காக இ.பி.எஸ்.,ஸுடன் சட்டப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இ.பி.எஸ் தலைமை குறித்து ஓ.பி.எஸ் கடுமையாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், அ.தி.மு.க செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், “ஓ.பி.எஸ் என்றால் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தவிர வேறில்லை” என்றார்.
“இன்று அவர்கள் நடத்துவது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம். அவர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்காக விளம்பரம் வெளியிட்டு அவர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர்... நாங்கள் அதை அரசியல் கட்சியாக கருதவில்லை” என்று ஜெயக்குமார் கூறினார்.
புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பி.எஸ், 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு இ.பி.எஸ்.,ஸின் "எந்தவொரு சுயமரியாதையும் இல்லாத எதேச்சதிகார அணுகுமுறை" தான் காரணம் என்று கூறினார்.
“அம்மா (மறைந்த ஜெ.ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு அவருக்கு ‘நிரந்தர பொதுச் செயலாளர்’ என்ற மரியாதை வழங்கப்பட்டது. அவரது தியாகம் மற்றும் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இது வழங்கப்பட்டது. ஆனால் இந்தத் தலைமை அவருக்கும் துரோகம் செய்கிறது. அவர்களை யாராவது மன்னிப்பார்களா?” என ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
“முன்பு, என்னைப் போன்ற ஒரு சாதாரண தொண்டன் முதல்வராக வருவதற்கு அ.தி.மு.க.,வில் இடம் இருந்தது. ஆனால் அது இப்போது மாறிவிட்டது, பணம் முக்கிய காரணியாக மாறிவிட்டது, பண பலம் பழனிச்சாமியை சக்திவாய்ந்தவராக மாற்றியுள்ளது” என்று ஓ.பி.எஸ் கூறினார்.
வி.கே.சசிகலா அணி பெரும்பான்மையான அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள் நெருக்கடியைக் குறிப்பிட்டு, "இது எல்லாம் கூவத்தூரில் இருந்து தொடங்கியது," என்று ஓ.பி.எஸ் கூறினார், இந்த விஷயம் இறுதியில் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் தோல்விக்கு வழிவகுத்தது.
இது சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இ.பி.எஸ் முதல்வராக வருவதற்கு உதவியது. இருப்பினும், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, சசிகலாவுடன் ஓ.பி.எஸ் கைகோர்த்துள்ளார், அதே நேரத்தில் பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவுடன் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இ.பி.எஸ், அவர்கள் இருவரும் கட்சிக்குள் மீண்டும் நுழைவதை எதிர்த்து வருகிறார்.
இ.பி.எஸ்.,ஸின் சமீபத்திய அறிக்கையை குறிப்பிட்டு பேசிய ஓ.பி.எஸ், “ஒருங்கிணைந்த கட்சியுடன் இருக்க முடியாது என்று ஒருவர் கூறுகிறார்... அப்போ அவருக்கு யாரும் உதவ முடியாது. கட்சி மீண்டும் ஒன்றிணைவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்கிறார். நீங்கள் புதிய கட்சியைத் தொடங்கி, அதை நடத்துங்கள்... உங்களுக்கு தைரியம் இருந்தால், நீங்கள் உங்கள் சொந்த கட்சியை நடத்துங்கள்... களத்திற்கு வாருங்கள், புதிய கட்சி தொடங்குகிறேன் என்று அறிவித்து விடுங்கள்” என்று ஓ.பி.எஸ் தனது போட்டியாளரான இ.பி.எஸ்.,ஸிடம் கூறினார்.
அ.தி.மு.க.வின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட ரூ.256 கோடி இருப்பதாக கூறிய ஓ.பி.எஸ், இது சாதாரண கட்சித் தொண்டர்களிடம் இருந்து வந்துள்ளது. “அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி, கட்சியின் அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அந்த பணத்தை இந்த தலைமை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.