Tamil Nadu breaking news today live updates : இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற திங்கள் கிழமையன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் 2ம் தேதி அறிவிக்கப்படும். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,839, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 32,571, கிராம ஊராட்சி தலைவர் 53,133, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 2,00,741 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்
சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் நேற்று தோன்றியது. கேரளாவின் காஸர்கோடு, தலச்சேரி, கோழிக்கோடு, மற்றும் பாலக்காடு பகுதிகளிலும், தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணத்தை மக்களால் பார்க்க இயலும் என்று கூறப்பட்டது. நேற்று தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த அரிய நிகழ்வினை மக்கள் கண்டு ரசித்தனர்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகனின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இரங்கல்.
நடிகர் ரஜினிகாந்தும், தனது மகளும் சந்தித்த புகைப்படத்தை நடிகை குஷ்பு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தம்மை சந்திப்பதற்கு தனது மகளுக்கு வாய்ப்பளித்ததற்காக ரஜினிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது ஐதராபாத்த்தில் நடைபெற்று வரும் ரஜினியின் 168 வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று, நடித்து வருவது குறிப்பிடத்தக்கது
“முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசருமான டாக்டர் திரு எஸ்.மோகன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – மு.க.ஸ்டாலின்
ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற காவலர்களுக்கு ஊதியம் தர ரூ.1.38 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
2019ஆம் ஆண்டில் உள்நாட்டின் வளர்ச்சி குறைந்திருந்தாலும், நிதி அமைப்பு நிலையாக உள்ளது, வங்கிகளின் பின்னடைவு சரிசெய்யப்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி அறிக்கை
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஜன.8-ம் தேதி அமெரிக்காவில் திரையிடப்படுகிறது – தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்
சென்னையில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களின் 74 பேர் கொண்ட பட்டியல் போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் ரவி
* மற்ற மாவட்டங்களில், 56 பேர் கொண்ட பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – ரவி
ஜனார்த்தன சர்மாவின் மகள்களுக்கு அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு
* தங்கி இருக்கும் நாட்டின் இந்திய தூதரகத்தில் நேரில் ஆஜராக உத்தரவு
* அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அகமதாபாத் உயர்நீதிமன்றம் ஆணை
தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அனைத்து துறை முதன்மை செயலர்களுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை.
கோவை சிறுமி கொலை வழக்கில், குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது, தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நன்றி – தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்
சிலியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து கருகின. கடலோர நகரமான வால்ப்பரைசோ நகரிலுள்ள குடிசைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில் 245 வீடுகள் சேதமடைந்தன.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்ட நார்வே நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை : ஆலங்குடியில் 2018 ஆம் ஆண்டு 17 வயது வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரய்யா என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவு. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு
சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பாலி ஹில் பகுதியில் உள்ள குடியிருப்பில் குஷால் பஞ்சாப் வசித்து வந்தார். கிருஸ்துமஸ் விடுமுறை முடிந்து பணிக்கு வந்த ஊழியர்கள் வீட்டில் குஷால் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி , மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குஷால் அமெரிக்க கேம் ஷோ ஒன்றில் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் உடற்கூராய்வின் போது மற்றொரு நபரின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் யார் என்பதை விரைவில் கண்டறிய வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி. இது போன்று வேறெந்த குழந்தைகளுக்கும் நடக்க கூடாது என மரணித்த குழந்தையின் தாய் பேச்சு. இது போன்று எந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் நான் அங்கு போராட செல்வேன் என்றும் உருக்கம்.
கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது கோவை சிறப்பு நீதிமன்றம்.
குடியுரிமையை பறிக்கும் ஏதேனும் ஒரு அம்சமாவது குடியுரிமை சட்டத்தில் இருந்தால் காட்டுங்கள் என்று அமித் ஷா ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜாமா மசூதி அமைக்கப்பட்டிருக்கும் இடம், ஜாமியா பல்கலைக்கழகம், சீலம்பூர், ஜோர்பாக் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அவ்தீப் ரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளம் அணுமின் உலை வளாகத்தில் கூடுதலாக இரண்டு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் அடுத்த 20 ஆண்டுகளில் புதிதாக 12 மின்னுற்பத்தி திட்டங்களை செயல்படுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என்றும் அவ்தீப் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று புதுவை மாநிலத்தில் பேரணியில் ஈடுபட்டிருந்தனர் நாம் தமிழர் கட்சியினர். பின்பு சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களை கைது செய்தது புதுவை காவல்துறை.
மிக் 27 ரக விமானம் ஒன்றுக்கு இன்று ஓய்வளிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் தோஜ்பூரில் விமானப்படை தளத்தில் இந்த போர் விமானத்திற்கு வழியனுப்பு விழா துப்பாக்கி குண்டுகள் முழங்க நடைபெற்றது.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட நல்லாட்சி பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்தது. இதற்கு பல விதமான கருத்துகள் அரசியல் தலைவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 9 துறைகளில் 2 துறைகளில் மட்டுமே முதலிடம் வந்தததிற்கு எந்த விதமான விளக்கமும் இல்லை. இந்த சான்றிதழால் மத்திய அரசு அதிமுக அரசுக்கு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியுள்ளது என்று கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் சிறார்களின் ஆபாச படம் பார்க்கும் 40 நபர்களின் பட்டியலும், கோவை மாவட்டத்தில் 30 பேர் கொண்ட பட்டியலும் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் தகவல் அளித்துள்ளனர்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெற இருப்பதை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நல்லாட்சியில் தமிழகத்திற்கு முதலிடம் என்று நேற்று மத்திய அரசு பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்று டிடிவி தினகரன் இந்த பட்டியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தலை தவறின்றி நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக்கூட்டம் சுனில் அரோரா தலைமையில் தலை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. அப்போது அவர் டெல்லி தேர்தலை தவறின்றி நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் சந்தோஷ் குமார் குற்றவாளி என்று கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விபரங்கள் பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் என்றூ மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள், வாங்காதவர்கள் இந்த திட்டத்தில் இணைவதற்கு முன்பு முறையாக ஆதார் சேர்க்கைக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பலரும் வன்முறையில் இறங்கினர். இதனால் பொதுசொத்திற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பொதுசொத்தை சேதப்படுத்தியதாக 498 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
ஈரான் நாட்டில் இன்று காலை அணுமின் நிலையம் அருமே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக அந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. உயிர் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 104.49 அடியாக உள்ளது. நீர் இருப்பு 32.3 டி.எம்.சியாகவும், நீர் வரத்து 679 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 200 அடியாகவும் உள்ளது.
அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். விடுமுறை முடிந்த பின்பு வகுப்புக்கு வரும் முதல் நாள் அன்றே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகிய சட்டங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு அலைகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் போன்ற எதிர்கட்சியினர் மக்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.