ஓ.பி.எஸ். தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட்; முழு விபரம்

TN Budget Live 2020: தமிழக சட்டசபையில், 2020 -2021ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

By: Feb 14, 2020, 8:35:58 PM

Tamil Nadu Budget 2020 Live: தமிழக அரசின் 2020-2021ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மக்களை கவரும் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

நாம் ஏன் காதலர் தினம் கொண்டாடுகின்றோம்? சுவரசியமான வரலாற்று பின்னணி!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று, நாளையுடன் (பிப்ரவரி 15ம் தேதி) 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4வது ஆண்டு தொடங்குகிறது. எனவே, அதன் அடிப்படையிலும், புதிய சலுகைகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், வேளாண் கடன்கள் தள்ளுபடி ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Live Blog
Tamil nadu budget updates : பட்ஜெட் நிகழ்வுகள், முக்கிய அம்சங்கள், சபை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
20:35 (IST)14 Feb 2020
தமிழக வளங்களை வாரி சுருட்டும் பட்ஜெட் - கமல்ஹாசன் விமர்சனம்

தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்ஜெட் அறிவிப்பு தமிழகத்தின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல் உள்ளது. திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால்தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

16:35 (IST)14 Feb 2020
தமிழக மக்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் எல்லா வளங்களும் சென்றடைய வேண்டும் - விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தேவையான எல்லா வளங்களும் இந்த பட்ஜெட் மூலம் நேரடியாக சென்றடைய வெண்டும் என்று பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

15:54 (IST)14 Feb 2020
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20 வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவையில், இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

15:12 (IST)14 Feb 2020
வேளாண்மை, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது." என்று வரவேற்றுள்ளார்.

14:20 (IST)14 Feb 2020
செயல் திட்டமில்லாத பட்ஜெட் - டிடிவி தினகரன்

காற்றில் வரைந்த ஓவியம் போன்று செயல்திட்டம் இல்லாத வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட்டாக இது விளங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

14:17 (IST)14 Feb 2020
எதற்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின்

துணை முதல்வரின் 10வது பட்ஜெட் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது  என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பிட்ட சில அமைச்சர்களின் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அதிமுக ஆட்சியில் கடன் தொகை 3 மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

13:20 (IST)14 Feb 2020
பட்ஜெட் நிறைவு

2020 - 21ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் நிறைவு செய்தார். கூட்டத்தொடர்  17ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

13:07 (IST)14 Feb 2020
மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:33 (IST)14 Feb 2020
தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12:02 (IST)14 Feb 2020
பிற துறைகளில் நிதி ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு.

திருநெல்வேலி, கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும்.

நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்பு பிரிவு அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு 

12:02 (IST)14 Feb 2020
மதிய சத்துணவுத் திட்டத்துக்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:49 (IST)14 Feb 2020
புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. கடலூர் மருத்துவக்கல்லூரி குறித்த அறிவிப்பில், ஏற்கெனவே அறிவித்தபடி கடலூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாக அது செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:33 (IST)14 Feb 2020
அம்மா உணவகத் திட்டம் – 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அம்மா உணவகத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்.

11:18 (IST)14 Feb 2020
நிர்பயா திட்டத்துக்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு

பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71  கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் தெரிவித்தார்.  பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்தார். 

11:03 (IST)14 Feb 2020
21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் பற்றாக்குறை

சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும் என்றும் அவர் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

10:46 (IST)14 Feb 2020
துறைவாரியாக நிதி ஒதுக்கீடு

உயர் கல்வித்துறை - 5,052 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சுகாதாரத்துறை - 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தொழிலாளர் நலத்துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு. 

10:45 (IST)14 Feb 2020
முத்திரைத்தாளுக்கான வரி குறைப்பு

முத்திரைத்தாளுக்கான வரி 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக குறைப்பு

10:32 (IST)14 Feb 2020
அரசு பஸ்களில் சிசிடிவி கேமரா

தமிழ்நாடு அரசு பஸ்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு விரைவில் ஒதுக்கப்படும்.

10:26 (IST)14 Feb 2020
தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி கடன்

2020-21ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:22 (IST)14 Feb 2020
10வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 10வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பன்னீர்செல்வம்  உரையாற்றி வருகிறார். 

10:02 (IST)14 Feb 2020
பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்

2020 -21ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

09:56 (IST)14 Feb 2020
தலைமைச் செயலகத்துக்கு ஸ்டாலின் வருகை

பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி  தலைமைச் செயலகத்துக்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வருகை தந்தார்.

09:45 (IST)14 Feb 2020
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை

பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி தலைமைச் செயலகத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை தந்துள்ளனர்.

09:32 (IST)14 Feb 2020
பட்ஜெட் தாக்கலுக்கு முன் கோயிலில் வழிபாடு

பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார்.

09:01 (IST)14 Feb 2020
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் வர உள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் உட்பட, பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil nadu budget updates : துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும், இன்றைய கூட்டம் முடிவடையும். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது? என்பது குறித்து விவாதிக்கப்படும்.

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சட்டசபையில் பேச திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன. மேலும், குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், காவல் துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் நடந்த முறைகேடு குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்பதால், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.

Web Title:Tamil nadu budget 2020 edappadi palanichami o panneerselvam budget session

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X