“நானும் தமிழன் தான்” என்ற ராகுல் காந்திக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்த முதல்வர்
சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களைக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நீண்ட கால வாதங்களுக்கு நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டு தன்னுடைய நன்றியை பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Tamil Nadu CM MK Stalin thanked Rahul Gandhi : புதன்கிழமை இரவில் இருந்து இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய அதிரடி பேச்சு. உங்களால் ஒரு போதும் தமிழக மக்களை ஆளவே முடியாது என்று ஆளும் கட்சியினரை பார்த்து பேசிய அவர் இந்திய கூட்டாட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கினார். பிறகு அமர்வு முடிந்து வெளியேறிய அவரிடம் ஏன் தொடர்ந்து தமிழர்கள் பற்றியே பேசுகின்றீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் தமிழன் தான் என்று கூறிச் சென்றார். இந்த இரண்டு வீடியோக்கள் வைரலாகி வருவது மட்டுமின்றி பல தமிழக அரசியல் தலைவர்கள் ராகுலின் இந்த பேச்சை வரவேற்றுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் கருத்தை அழுத்தமாக தெரிவித்த உங்களின் எழுச்சி மிக்க உரைக்காக தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அவருடைய இந்த ட்விட்டரில் மேலும், சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களைக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நீண்ட கால வாதங்களுக்கு நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டு தன்னுடைய நன்றியை பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
“இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். இங்கு பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல்கள் மூலமே முடிவுகள் எட்டப்பட வேண்டும். நான் தமிழ்நாட்டிற்கு செல்கிறேன். நான் அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்பேன்… பிறகு அவர்கள் என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்பார்கள்.. இப்படித்தான் இந்த உரையாடல்கள் இருக்க வேண்டும். ஒரு போதும் தமிழகத்தின் மக்களை உங்களால் ஆட்சி செய்ய முடியாது.. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்.. இங்கு நீங்கள் மன்னராட்சி முறைப்படி ஆள முடியாது” என்று அவர் நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வில் பேசியது தற்போது இந்திய அரசியலில் புயலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil