Tamil Nadu elections 2021 dmk would contest polls without allies : வருகின்ற 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இது என்பதால் யார் ஆட்சியை பிடிக்க உள்ளனர்? யார் மக்கள் மனதில் நீங்காத நல்லாட்சியை தரப் போகின்றார்கள்? என்ற எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடர்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், ஹஜ் பயணிகளுக்கு தங்கும் இடம், அதே போன்று உலமாக்களின் ஓய்வூதிய உயர்வு, ஸ்கூட்டர் மானிய உயர்வு என இதுவரை கண்டு கொள்ளப்படாத பகுதிகளில் களம் ஆடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் வெளியான இந்த அறிவிப்புகள் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. தனக்கான இடத்தினை வலுவாக தக்கவைக்க முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை வாரிக் குவித்தது திமுக. அதே போன்று உள்ளாட்சி தேர்தல்களிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றிகளை கைப்பற்றியது திமுக. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைக் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியோருடன் வைத்த கூட்டணியில் 39 இடங்களில் (புதுவை உட்பட) மகத்தான வெற்றி பெற்றது திமுக கூட்டணி. இதே கூட்டணி மேலும் நீடிக்க வேண்டும் என்றும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க : எம்.பி. பதவி கேட்கும் தேமுதிக! ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ அரசியலில் நிறைவேறுமா?
பிரசாந்த் கிஷோரின் புதிய வியூகம்
கடந்த சில வருடங்கள் இந்தியாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான ஃபேக்டராக இருக்கிறது பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை. மக்களுக்கு என்ன செய்கின்றோம் என்பதையும், என்ன செய்தோம் என்பதையும் கூறி வெற்றி பெற்ற காலங்கள் மலையேற, அரசியல் ஆலோசகர்களின் அறிவுரைகளின் கீழ் தான் தற்போது இந்தியாவில் கட்சிகளும், ஆட்சிகளும் உருவாகிறது. தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பின் படி, ஐபேக் நிறுவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து (234) சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக, உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிட்டாலே வெற்றி பெற முடியும் என்ற ஆலோசனையை வழங்யிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகம் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 ராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதை தொடர்ந்து அப்பதவிகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 6 பேரின் பதவிகாலம் ஏப்ரல் 2ம் தேதி முடிவடைய உள்ளது. அதிமுக தரப்பில் 3 பேரும், திமுக தரப்பில் 3 பேரும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் கூட கூட்டணி உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதால் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தினை திமுக செயல்படுத்தலாம் என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் கசிந்து வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"