கொலைப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார்

அவரின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு கட்சியின் தலைவர்கள் வேண்டுகோள்...

விடுதலைக் சிறுத்தைக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து.

கர்நாடகவைச் சேர்ந்த ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்தவர்களை விசாரணை செய்ததில் இந்த உண்மை வெளிப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாகவும் பாதுகாப்பு தொடர்பாகவும் ரவிக்குமாரிடம் தமிழக புலனாய்வுத் துறை தொடர்பு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமோல் காலேவின் பட்டியலில் இடம் பெற்ற ரவிக்குமார்

கௌரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரான அமோல் காலேவினை கைது செய்து விசாரணை நடத்தியது கர்நாடகா காவல் துறை. மேலும் அவரிடம் இருந்து கைப்பற்ற நாட்குறிப்பில் 34 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றன.

அந்த பட்டியலில் ரவிக்குமாரும் இடம் பெற்றுள்ளாதாக கர்நாடக காவல்துறை குறிப்பிட்டிருக்கிறது.  அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 34 நபர்களில் 8 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். மீதம் இருக்கும் நபர்கள் அனைவரின் பாதுகாப்பு குறித்தும் அந்தந்த மாநில அரசுகளிடம் பேசியிருக்கிறது கர்நாடக காவல் துறை.

அமோல் காலேவின் பட்டியலில் இடம் பெற்ற 34 நபர்கள் யார் யார் ? 

இதைப் பற்றி ரவிக்குமார் குறிப்பிடுகையில் “இப்படியான மிரட்டலுக்கு நான் ஆளாவது இது தான் முதல் முறை. எதையும் பொறுமையாக அணுகும் முறையையே நான் அதிகம் கடைபிடிக்கிறேன். தமிழகத்தில் இருக்கும் அனைத்து பாஜக தலைவர்களும் என்னை அறிவார்கள். பாஜகவின் சித்தாந்தத்திற்கு தான் நாங்கள் எதிரானவர்கள்.

கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட பாஜக கட்சினருடன் நல்ல முறையில் பழகி வருகிறார். தமிழகத்தில் இருக்கும் இந்து அமைப்புகளுக்கு எதிராக எனக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

கொலையாளிகளின் இலக்கு அரசியல்வாதிகள் இல்லை. எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களையும் மையப்படுத்தியே அவர்களின் நகர்வுகள் இருந்து வந்தது. இவர்களின் இத்தகைய முடிவுகள் பெரிய அளவில் வருத்தப்பட வைக்கிறது.

திராவிடக் கழகம், மார்க்சிஸ்ட் கட்சியினர் ரவிக்குமாருக்கு தகுந்த பாதுகாப்பினை தர வேண்டும் என்று தமிழக அரசினை வலியுறுத்தியுள்ளனர். தன்னாட்சித் தமிழக ஒருங்கிணைப்பாளார் ஆழி செந்தில் நாதன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இது குறித்து சிறப்பு பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

நரேந்திர தோபல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, மற்றும் கௌரி லங்கேஷ் என வரிசையாக எழுத்தாளர்களையும் ஊடகவியலாளர்களையும் கொல்லும் சக்திகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நிதர்சனமான உண்மை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close