பொங்கல் சிறப்புப் பேருந்துகள் : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. பெரு நகரங்களிலும் நகரங்களிலும் வேலைக்கு செல்பவர்கள், இந்த மூன்று நாள் பண்டிகைக்காக அதிகமாக சொந்த ஊருக்கு செல்வார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கானோர் செல்வார்கள்.
Advertisment
போக்குவரத்து நெரிசல், பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் திண்டாடும் நிலை ஆகியவற்றை தடுக்க தமிழக அரசு ஏற்பாட்டினை மிகவும் தீவிரமாக ஒவ்வொரு வருடமும் செய்து வருவது வழக்கம். இம்முறை சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய சென்னையில் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஜனவரி 9ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும்.
கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம், கே.கே. நகர், பூந்தமல்லி ஆகிய ஐந்து இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் அதில் பங்கேற்றனர்.
ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை சுமார் 14, 263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10,445 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 24ம் தேதியே இந்த அறிவிப்புகள் வெளியானது.
பொங்கல் சிறப்புப் பேருந்துகள் முன் பதிவுகள் எங்கே ?
இதனைத் தொடர்ந்து, டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் இடங்கள், தேதி மற்றும் இதர அறிவுப்புகள் வெளியாகியுள்ளன. 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தினசரி இயங்கக்கூடிய 2,275 பேருந்துகளுடன் தலா 5163 பேருந்துகள் நான்கு நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.
பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை மொத்தம் 3776 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள், மற்றும் தாம்பரம் சானிட்டோரியத்தில் 2 முன்பதிவு மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒன்றும், மாதவரம் பேருந்து நிலையத்தில் ஒன்றும் என 30 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன.
முன்பதிவுகள் வருகின்ற 9ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது. www.tnstc.in www.redbus.in, www.paytm.com www.busindia.com ஆகிய இணையதளங்களின் வழியாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
நெரிசலைத் தவிர்க்க தடங்கள் மாற்றம்
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 11/01/2019 முதல் 14/01/2019 வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத் பேட்டை வழியாக செல்லும்.
தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் பேருந்து நிலையங்கள்ளில் இருந்து புக் செய்தவர்கள், ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று அங்கிருந்து பேருந்துகளில் ஏறிக் கொள்ளலாம்.
கார்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, அல்லது ஸ்ரீபெரம்பதூர் - செங்கல்பட்டு மார்க்கமாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கனரக வாகனங்கள் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை மதிய, 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள மார்க்கத்தினை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.