வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது என்று மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
உதகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ”நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களிடம் கேட்பதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை சிறிய மாநிலமான ஹரியானா ஈர்த்து வருகிறது.
இதையும் படியுங்கள்: “சிறுமியின் படத்தை மதுபாட்டிலில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்” – விஜயகாந்த்
முதலில் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். முதலீடுகளை ஈர்க்கும் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாகும். அப்பொழுதுதான் நாம் இந்த வாய்ப்பினை சரிவர பயன்படுத்திக் கொள்ள முடியும். நமது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 70 விழுக்காடு இந்திய மொழிகள் சார்ந்த துறைகளில் இருந்து வருகிறது. பல்துறை திறன்களை வழங்குவதன் மூலம் காலத்திற்கு பொருத்தமான கல்வியை தருவதே புதிய கல்விக் கொள்கையாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாட்கள் பயணமாக சென்று இருந்தார். மேலும் தமிழக அரசு 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக கவர்னர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil