சென்னை ராஜீவ் காந்தி சாலையில் (பழைய மகாபலிபுரம் சாலை) நான்கு மேம்பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.331 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. அதற்கான முதல் தவணையாக ரூ.50 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் செறிந்து உள்ள ஓ.எம்.ஆர் ரோடு எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வந்ததால், சாலையில் வாகனப் போக்குவரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்: மத்திய அமைச்சரை சந்தித்த தி.மு.க எம்.பி கிரிராஜன்: பரந்தூர் விமான நிலையப் பணியை வேகப்படுத்த மனு
குறிப்பாக, தரமணி- எஸ்.ஆர்.பி டூல்ஸ் சந்திப்பு, எம்.ஜி.ஆர் சாலை- பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு, சோழிங்கநல்லூர் சந்திப்பு ஆகிய இடங்களை கடப்பது மிகுந்த சிரமமான விஷயம். அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும். பீக் ஹவர்ஸின் போது இந்த முக்கிய சந்திப்புகளில் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இந்தநிலையில், மேற்கூறிய 4 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC) இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இப்பணியை, இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்களுக்கான செலவு ரூ.459.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு ரூ.331 கோடியை பங்களிக்கும், அதற்கான முதல் தவணையாக தமிழக அரசு ரூ.50 கோடியை வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கும்.
”இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக வேலை செய்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். அதனைத் தவிர்க்க இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட உள்ளன. மெட்ரோ ரயில் கட்டுமானத்துடன் ஒரே நேரத்தில் பணியை மேற்கொண்டால், அதை முடிக்க எடுக்கும் நேரம் குறையும்,” என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெட்ரோ ரயில் பாதையுடன் இணைக்கப்பட உள்ள மேம்பாலங்களுக்கான வடிவமைப்புகளை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. மேம்பாலங்கள் முதல் நிலையிலும், மெட்ரோ ரயில் பாதைகள் இரண்டாவது நிலையிலும் இருக்கும்.
இதற்கிடையில், ”மெட்ரோ ரயில் பணிகளால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். சாலை ஏற்கனவே நெரிசல் மிகுந்து உள்ளது. மேலும் மாற்று வழிகள் இல்லை. இந்த மேம்பாலங்கள் கட்டும் போது, வாகன ஓட்டிகள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்,” என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.