Ajay Shankar
Tamil Nadu Jawan Subramanian's Village : புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களில் சுப்ரமணியனின் வீடுதான் வெகு தொலைவில் இருக்கிறது புல்வாமாவில் இருந்து. ஆம். 3550 கி.மீ தொலைவிற்கு அப்பால் இருந்து தேசத்தை காக்க வந்த வீரன் சுப்ரமணியன். தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி என்ற கிராமத்தில் இருந்து பணிக்கு வந்தவர் தான் சுப்ரமணியன்.
28 வயதாகும் இவருக்கு மிக சமீபத்தில் தான் திருமணமானது. 21 வயது மனைவி கண்ணில் தேங்கி நிற்கும் கண்ணீருடன் “சுப்ரமணியன் எங்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டார்... எதற்காக 2500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் ஜம்முவிற்கு செல்ல வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன ஆனது?” என்றும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்.
சுப்ரமணியனின் சகவயது நண்பர்களோ, பாகிஸ்தானுடன் இப்போதே போர் புரிய வேண்டும் இந்தியா. மொத்தமாக பாகிஸ்தானை இல்லாமல் நாம் ஆக்க வேண்டும் என்று கோபத்துடன் கருத்து கூறுகிறார்கள்.
நாம் ஏன் காஷ்மீரை விட்டுத் தர வேண்டும். யாருக்கு இங்கு வாழ்வதில் பிரச்சனை இருக்கிறதோ அவர்கள் விருப்பம் போல் நாட்டில் இருந்து வெளியேறலாம் என்றும் கூக்குரல்கள் அங்கு எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
மேலும் படிக்க : காஷ்மீர் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்
இரு பக்கமும் எண்ணற்ற உயிர்களை பறிகொடுக்கவா போர் தொடுக்க வேண்டும் ? - சுப்ரமணியனின் அண்ணன் கேள்வி
ஆனால் சுப்ரமணியனின் அண்ணன் கிருஷ்ணசாமியோ, என்னுடன் பணிபுரியும் ஏனையோர் பாகிஸ்தானியர்கள். அவர்கள் அனைவரும் என் தம்பியின் மரண செய்தி கேட்டு வருத்தத்தில் உள்ளனர் என்று கூறிகிறார். துபாயில் எலக்ட்ரீசியனாக அவர் பணியாற்றி வருகிறார்.
“அவர்கள் அனைவரும், இம்ரான் கான் பிரதமராக வந்ததை மிகவும் கொண்டாடினார்கள். இந்த பிரச்சனைகள்/சச்சரவுகள் எல்லாம் நிச்சயம் இவரின் ஆட்சியில் முடிவிற்கு வரும்” என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையையும் ஆட்டிப்பார்த்திருக்கிறது புல்வாமா தாக்குதல் என்று கூறுகிறார் கிருஷ்ணசாமி.
பாகிஸ்தானை ஏன் தாக்க வேண்டும் ? இருப்பக்கமும் இருக்கும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து இப்படி துக்கம் அனுசரிக்கவா ? என்று கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி, இந்த சமயத்தில் இருநாட்டினரும் அமைதியாக பேச்ச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு முடிவினை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அவர் கூறியதை அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஆதரித்தனர். ஒரு நல்ல மகன், அன்பான கணவன், ஈடு இணையற்ற நல்ல நண்பன், தோள் கொடுத்த தமையன் என அனைவரையும் இழந்து வாடுகிறது சவலப்பேரி.
நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் கடைசி குழந்தையாக பிறந்தவர் சுப்ரமணியன். சிறு வயதில் இருந்தே காவல்துறையில் பணியாற்ற விருப்பம் கொண்டிருந்தார். எதையும் தைரியமாக துடுக்காக பேசும் அவரை ஐ.டி.ஐயில் சேர்த்து படிக்க வைத்தோம். அவரும் அவருடைய அண்ணன் போல் துபாயில் வேலை பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டோம் என்று கூறுகிறார் அவருடைய தந்தை கணபதி.
முதல் முயற்சியிலேயே சி.பி.ஆர்.எஃப்பில் வேலை கிடைத்துவிட்டது சுப்ரமணியனுக்கு. சென்னையில் பயிற்சி முகாமிற்கு 2014ல் அனுப்பப்பட்டார். பின்பு உத்தரப் பிரதேசத்தில் வேலை கிடைத்து. அதன் பின்பு இறுதியாக காஷ்மீருக்கு அனுப்பப்பட்டார் இந்த வீரர்.
அவர் வீட்டு வாசலில் கடலென மக்களும், அரசியல்வாதிகளும், கல்லூரி நண்பர்களும், பள்ளித் தோழர்களும், என அனைவரும் சுப்ரமணியனின் இறுதி அஞ்சலிக்காக காத்துக்கிடந்தனர். இன்று சவலப்பேரியின் ராணுவ வீரர் தேசமெங்கும் நிறைந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.