2019ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற புதன்கிழமை (ஜனவரி 2, 2019 ) அன்று துவங்க இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் : அறிக்கை அளித்த சட்டப்பேரவை செயலாளர்
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 174 (1)ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தை 2019ம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ம் தேதியன்று காலை 10:00 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் கூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலாளர் அறிக்கை
மேலும் இந்த கூட்டமானது, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெறும் என்றும், வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் பன்வாரிலால் சிறப்புரையாற்ற உள்ளார் என்றும் அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் உரையைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். எத்தனை நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்பதால், கூட்டத் தொடரின் முதல் நாள் அன்று, அது தொடர்பான தகவல்களும் தெரிவிக்கப்படும். தமிழகத்திற்கு கொண்டு வரப்பட இருக்கும் திட்டங்கள், ஏற்கனவே செயல்பட்டு வரும் / நிலுவையில் இருக்கும் நலத்திட்டங்கள் பற்றியும் அறிவிப்புகள் அன்று வழங்கப்படும்.
ஸ்டெர்லைட் மற்றும் இதர பிரச்சனைகள் பற்றி பேச எதிர்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : ஊராட்சி சபைகள் மூலமாக மக்களை சந்திக்க இருக்கும் திமுக