Tamil Nadu local body election results : ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விதிகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா என மாநில தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு விரிவான மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரக உள்ளாட்சிக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களுக்கான தேர்தல் முடிவுகளை வெளியிட கோரி திமுக தொடர்ந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன்,
வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் அல்லாத பல நபர்கள் புகுந்து திமுகவின் முகவர்களை வெளியேற்றி முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு காவல்துறையின் பாதுகாப்பு பல இடங்களில் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
சேலம், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தில் திமுக முன்னிலை வகித்த பல இடங்களில் முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கான காரணத்தையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார். இரவிலும் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறுவதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுகவினரை வெளியேற்ற கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.
மாநில தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ஊரக உள்ளாட்சியில் மொத்தமாக உள்ள 91,975 பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் கிராம பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு தனி தனி அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறுகிறது எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல், வாக்கு சீட்டுகளை எண்ணும் பணியால் முடிவுகள் வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முடிவுகள் உடனுக்குடன் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டு வருவதாகவும், 02/01/2019 அன்று மாலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைய வாய்ப்புள்ளது என்றார். 30,554 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையாத நிலையில் திமுக தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்வது, வீடியோ பதிவு செய்வது, போலீஸ் பாதுகாப்பு வழங்குவது உள்பட விதிகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது குறித்து இன்று (03.01.2020) மாலை 4 மணிக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணைய முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.
மேலும் படிக்க : ஊரக உள்ளாட்சி தேர்தல்… வி.ஐ.பி. வீட்டுப் போட்டியாளர்கள் எத்தனை பேர் வெற்றி?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.