உள்ளாட்சி தேர்தல் : எந்தெந்த பதவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தலைவர் பதவிகளுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு அறிவித்து 2016ம் ஆண்டு தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டது.

Tamil Nadu Local body elections reservation details : ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தேர்தலுக்கான கால அட்டவணையை அளித்தார். வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சித் தலைவர்கள் மறைமுக தேர்தலில் மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்வார்கள்.

ஜனவரி 11ம் தேதி மறைமுக தேர்தல்கள் நடத்தப்படும். எந்தெந்த பதவிகளுக்கு மறைமுக தேர்தல்கள் நடத்தப்படும் என்பதற்கான பட்டியல் கீழே அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த இந்த மறைமுக தேர்தலை எதிர்த்தும், பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் வார்டுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தலா என்றும் பலரும் தங்களின் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்

மாவட்ட ஊராட்சி தலைவர் -31

மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் – 31

ஊராட்சி ஒன்றியத் தலைவர் – 388

ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் – 388

கிராம ஊராட்சி துணைத்தலைவர் – 12,524

மொத்தம் 13,362 பதவிகளுக்கான உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தலைவர் பதவிகளுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு அறிவித்து 2016ம் ஆண்டு தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : 31 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர்களுக்கான இடஒதுக்கீடு! புதிய மாவட்டங்களின் நிலை என்ன?

இடஒதுக்கீடு விபரம்:

மொத்தம் உள்ள 31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் பொதுப்பிரிவு பெண்களுக்கு 12 மாவட்டங்களும், பட்டியல் இன பெண்களுக்கு 4 மாவட்டங்களும், பட்டியல் இனத்தவருக்கு 4 மாவட்டங்களும், பழங்குடியினருக்கு 1 மாவட்டமும், பொதுப்பிரிவினருக்கு 10 இடமும் வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய தலைவர்

388 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் பொதுப்பிரிவு பெண்களுக்கு 143 இடங்களும், பட்டியல் இன பெண்களுக்கு 48 இடங்களும், பொதுப்பிரிவினருக்கு 48 இடங்களும், பழங்குடியினருக்கு 3 இடங்களும், பழங்குடி பெண்களுக்கு 3 இடங்களும், பொதுப்பிரிவினருக்கு 143 இடங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே தான் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Election News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close