பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisment
தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தருமபுரி வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது காரிமங்கலம் அருகே சென்றபோது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் கார் ஓட்டுனரை அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினார்.
அதன் பின்னர் காரிமங்கலத்தில் உள்ள மருத்துவர் அருண் என்பவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நெஞ்சுவலி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர், மருத்துவரின் பரிந்துரைப்படி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெங்களுவில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு ஆஞ்சியோ சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.
கிருஷ்ணகிரியில் அரசு நிகழ்வில் இருந்த போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்களுடன் தருமபுரி கிருஷ்ணகிரி திமுக நிர்வாகிகள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பெங்களூர் நாராயணா இருதாலயா மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நெல்லை நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் தமக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தால் பள்ளி கல்வித்துறைக்கு பெரும் இழுக்கு ஏற்பட்டிருக்கின்றது. எதிர்கட்சிகள் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இதுதொடர்பான மன அழுத்தத்தால் பள்ளிகல்வித்துறையை நிர்வகிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து நிலவுகின்றது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil