Tamil Nadu news today live updates : வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் இன்று (ஜூலை 10) நடைபெற உள்ளது. ஜோலார் பேட்டையில் இன்று காலை 9 மணிக்கு குடிநீர் அனுப்பும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இந்த சோதனை ஓட்டம் முதலில் நடைபெறுவதாக இருந்தது. மழையின் காரணமாக பின்னர் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதிமுக சார்பில், சந்திரசேகரன் மற்றும் முகமது ஜான், பாமக சார்பில் அன்புமணி ஆகியோரும் தி.மு.க., சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மற்றும் திமுக தொழிற்சங்க தலைவர் சண்முகம் வழக்கறிஞர்கள் வில்சன் , இளங்கோ ஆகிய 7 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.
வேலூர் மக்களவை தேர்தல் மொத்தம் 1553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஆண் வாக்காளர்கள் - 6,98,644, பெண் வாக்காளர்கள் - 7,28,245, மூன்றாம் பாலினத்தவர்கள் - 102, மொத்தம் 14,26,991 வாக்காளர்கள் உள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ விரிவான தகவலை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் . 12ஆம் தேதி மாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் குடியரசுத்தலைவர் அத்திவரதரை தரிசிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள கோயிலிலும் விசேஷ விழாவான அத்திரவரதர் வழிபாட்டிற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார். வரும் 19 ஆம் தேதி நடைபெறும் நடைபெறும் கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க கூடாது எனவும் கடிதத்தில் தகவல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற கிளையில் மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை விரைவில் விசாரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல் பள்ளப்பட்டியில் கடந்த பிப்ரவரி 15 ல் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. கூட்டு குடிநீர் திட்ட தரைதள தொட்டி உள்ள மேட்டு சக்கரகுப்பத்திலிருந்து குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை ரயில் நிலயைத்தை தண்ணீர் வந்தடைந்த பிறகே, சென்னைக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல்
நீட் தேர்வு தொடர்பாக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்கள் குறித்து குடியரசு தலைவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில், தான் எந்தவித உண்மையையும் மறைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா என்று சட்டசபையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது. அமைச்சர் சி.வி. சண்முகம் உண்மையை மறைத்துள்ளார் என்று சட்டசபை எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சட்ட அமைச்சர் சண்முகம் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் திமுக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு அளிக்கப்பட்ட பதில் திருப்தியளிக்காததால், திமுக வெளிநடப்பு செய்தது.
நீட் தேர்வு தொடர்பான விவாதத்தில் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.
இட பற்றாக்குறை, மின் இழப்பு பிரச்சினைகளை தடுக்க, தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தங்கமணி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மின் தடை குறித்த புகார்களை 1912 என்ற எண்ணில் தெரிவித்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேறறு ( ஜூலை 9ம் தேதி) ஒரேநாளில் மட்டும் 960 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
ESI மருத்துவ கல்லூரியில் 9 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 8 இடங்களும் நிரப்பப்பட்டு உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓன்பது நாட்களில் மட்டும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ள நிலையில், இதுவரை தரிசன நேரம் காலை 5 மணி தொடங்கி மாலை 5 மணி வரையாக இருந்தது. இந்நிலையில், பக்தர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, இனி அத்திவரதரை காலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி எம்பிக்களாகின்றனர்.
போட்டியின்றி தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்
வைகோ
சண்முகம்
வில்சன்
போட்டியின்றி தேர்வாகும் அதிமுக வேட்பாளர்கள்
முஹம்மத் ஜான்
சந்திரசேகரன்
அன்புமணி
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். அவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் அளித்தனர். இந்த விவகாரத்தில், சபாநாயகர் இதுவரை எந்தமுடிவும் எடுக்கவில்லை. இதனால், ராஜினாமா செய்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு, நாளை ( 11ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனிதக்கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதால், தமிழகத்தில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது, மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க சில எம்.பிக்கள் கடிதம் எழுதியது தொடர்பான கேள்விக்கு நாத்தீகவாதிகள் தற்போது ஆத்தீகவாதிகளாக மாறி இரட்டை வேடம் போடுகின்றனர் என்று கூறினார்.
மத்திய அரசின் பட்ஜெட் மீதான எம்.பி.,க்களின் விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 10)பதிலளிக்கிறார். பட்ஜெட் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேசியுள்ளனர். இந்த விவாதத்திற்கு, லோக்சபாவில் இன்று நிர்மலா சீதாரமன் பதிலளிக்க உள்ளார்.
தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு! மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights