Tamil Nadu News Today Updates : கொரோனா வைரஸ் எதிரொலியால், தற்போது நடைபெற்று வரும் அனைத்து தேர்வுகளையும் 10 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ வாரிய தேர்வு, பல்கலைக்கழக தேர்வு மற்றும் ஜேஇஇ (மெயின்) ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள் வெறிச்சோடின. பாதுகாப்பை பலப்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் சிறாப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க உடனடியாக விமானம் அனுப்பப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவரது ட்விட்டரில் கூறியுள்ளார். பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளை பாதியாகக் குறைக்க வேண்டுமென அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்.
கொரோனா தாக்கம்: சென்னை ஷாகீன் பாக் போராட்டம் தற்காலிக நிறுத்தம்
ரயில் நிலையங்களில் அளவுக்கதிகமான கூட்டத்தைக் குறைக்க, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கொரோனா வைரஸ் பரவுதலை கருத்தில் கொண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்து வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8,000-ஐ நெருங்குகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொடுகிறது.
Live Blog
Tamil Nadu News Today Updates
இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும், உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பும் அதனை எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நாளை இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “சென்னையில் மளிகை, பால், மருந்தகங்கள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகளை மூட எந்த உத்தரவும் மாநகராட்சி பிறப்பிக்கவில்லை. குறிப்பாக கோயம்பேடு காய்கனி அங்காடி வழக்கம் போல் செயல்படும். தவறான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று டுவிட் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் எதிரொலியால், தற்போது நடைபெற்று வரும் அனைத்து தேர்வுகளையும் 10 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ வாரிய தேர்வு, பல்கலைக்கழக தேர்வு மற்றும் ஜேஇஇ (மெயின்) ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டை மார்ச் 31 வரை நிறுத்தி வைக்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், திருமணங்களைத் தவிர குடும்பக் கூட்டங்கள் உட்பட அனைத்து வெகுஜனக் கூட்டங்களையும் அதிகபட்சம் 50 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை செய்துள்ளது. மேலும், “முக்கிய கடைகள் மற்றும் உணவகங்களை” ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமி நீக்கம் செய்வதற்கும், பார்வையாளர்களுக்கு கை சுத்திகரிப்பான்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்கும், “கைகளை சுத்தம் செய்த பின்னரே நுழைவதற்கு” அனுமதிப்பதற்கும் இது அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா எதிரொலியால், மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உட்பட 150 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்பினர். அவர்கள் அணைவரும் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்தடைந்தனர்.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்படுகின்றனர்.” என்று கூறினார்.
ஏ.எஃப்.பி செய்தியின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை ஆசியாவில் இறந்தவர்களை விட ஐரோப்பாவில் அதிக அளவில் உயிரிழந்தனர். ஐரோப்பா குறைந்தபட்சம் 3,421 உயிரிழந்ததாகவும் ஆசியாவில் 3,384 உயிரிழந்ததாகவும் ஒப்பிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோய் உலக அளவில் 1,94,000 க்கும் அதிகமான மக்களைப் பாதித்தது. உலக அளவில் 7,873 பேர் பலியானார்கள். ஐரோப்பாவில் 2,503 பேர் இறந்தனர்.
தமிழகத்தில் ராஜ்யசபா பதவிக்கு போட்டியிட்ட 6 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் நியமனம் செய்யப்பட்டனர். திமுக சார்பில், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.
கொரோனா பாதிப்பு எதிரொலியால் குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் கலந்தாய்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
முதல்வர் பழனிசாமி, “நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன். முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சி. தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம். தருமபுரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.486 கோடி செலவில் நீரேற்று பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்.” என்று கூரினார்.
கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்நாடகாவில் உள்ள மால்கள், தியேட்டர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற பொது இடங்கள் உட்பட அனைத்து பொது இடங்களும் மார்ச் 31 வரை மூடப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த http://tangedco.gov.in அல்லது tneb app மூலம் மின்நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு இருமல், தும்மல் இருந்தால் முகக் கவசம் வழங்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீட்டு பாலிசியும், அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் வழங்குமாறு அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
துபாய், இலங்கை, அபுதாபியில் இருந்து சென்னை வந்த 71 பேர், கொரோனா வைரஸ் சோதனைக்காக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 71 பேரும் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இருந்து பணியாற்றி வந்தவர்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். நடைப்பயிற்சி மேற்கொள்ள பூங்கா மிகவும் உதவியாக இருந்தது என்றும் தற்போது அது மூடப்பட்டிருப்பதால் சற்று சிரமமாக இருப்பதாகவும் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
முட்டை கொள்முதல் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூ.1.95 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது
கொரோனா வைரஸால் சென்னையில் பல வணிக வளாகங்கள், மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்
உத்தர பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 2 வரை அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது. ஆகையால் மாணவர்கள் அனைவரும் ‘பாஸ்’ செய்யப்படுவார்கள் என உ.பி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்தும்,ஏன் உச்சநீதிமன்ற வராண்டாக்களில் கூட்டம் அதிகமாக உள்ளது? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கேள்வி எழுப்பியுள்ளார். சுயகட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், உச்சநீதிமன்றத்தை மூட வேண்டி வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதிய முன்பதிவு இல்லாததால் 11 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மார்க்கத்தில் இருந்து இயக்கப்படும் மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து. கொரோனா அச்சம் காரணமாக போதிய முன்பதிவு இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும் எனவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை பக்தர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பு எனவும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன பேருந்துகளில் திரை துணிகள் மற்றும் போர்வைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தி.நகரில் பெரிய கடைகளுடன், சிறிய கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என தி.நகரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி.
”கொரோனா பற்றி தேவையற்ற அச்சம் வேண்டாம். எனினும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவே பெரிய வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது” என சென்னை தி.நகரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
கொரோனா அச்சத்தையடுத்து, அதனை எதிர்கொள்ள மக்கள் என்னென்னவற்றை பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
கேபினெட் அமைச்சர் டி.வி.சதானந்த கெளடாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, புதுக்கோட்டை கரம்பக்குடி, நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்று வந்த சிஏஏ போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 31-ஆம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. நீலகிரி மலைரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்ளூர் மக்கள் அதிகம் பயணிக்கும் குன்னூர், ஊட்டி ரயில்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பலர் மூடிக்கிடக்கும் தாஜ்மகாலை ஏக்கத்துடன் தூரத்தில் இருந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.