Advertisment

இன்றைய செய்திகள்: சுய ஊரடங்கு: ஆவின் விற்பனை நிலையங்களில் பால், பால் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு

நேற்றைய விலையில் மாற்றமின்றி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.71 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: சுய ஊரடங்கு: ஆவின் விற்பனை நிலையங்களில் பால், பால் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு

Tamil Nadu News Today Updates : உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 தாண்டியுள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு வெளிநாட்டவர் உட்பட இதுவரை 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். அதோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்து வரும் 4 வாரங்களும் மிகவும் முக்கியமானவை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Advertisment

நீடிக்கும் பள்ளித் தேர்வுகள் குழப்பம்: தெளிவுப் படுத்துமா பள்ளிக் கல்வித்துறை?

கோரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். கொரோனாவிலிருந்து தப்ப, புகைப்பிடிப்பது, மது அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்டை மாநிலங்களுடன் தமிழகத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சுய ஊரடங்கு உத்தரவின் பேரில் தமிழகத்தில் எந்த பேருந்துகளும் இயங்காது. இன்று நள்ளிரவு 12 மணி முதல், நாளை இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது, புறநகர் பயணிகளின் ரயில் சேவையும் கணிசமாகக் குறைக்கப்படும், மெட்ரோ சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பாடகி கனிகாவுக்கு கொரோனா உறுதி! தகவலை மறைத்தாரா? – புதிய சர்ச்சை

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

 

Live Blog

Tamil Nadu News Today Updates

தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.














Highlights

    22:12 (IST)21 Mar 2020

    கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

    கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்துக்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கொரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நகர் பகுதிகளுக்கு ரூ.1,629 கோடி, ஊரக பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவுக்கு ரூ.1,301 கோடி, ஒடிசா - ரூ.186 கோடி, அருணாச்சல பிரதேசத்திற்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    21:38 (IST)21 Mar 2020

    சுய ஊரடங்கு: ஆவின் விற்பனை நிலையங்களில் பால், பால் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் பால், பால் பொருட்கள் ஆகியவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    20:29 (IST)21 Mar 2020

    கொரோனாவுக்கு பயந்து நகரங்களை விட்டு வெளியேறாதீர்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

    பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பயந்து, எனது சகோதர, சகோதரிகள் பலர் அவர்கள் வேலை செய்யும் நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி வருகிறார்கள். நெரிசலில் பயணம் செய்வது அதன் பரவலின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் எங்கு சென்றாலும், அது மக்களுக்கும் ஆபத்தாக இருக்கும். உங்கள் கிராமம் மற்றும் குடும்பத்தினரின் சிரமங்களையும் அதிகரிக்கும்.

    நீங்கள் இருக்கும் நகரத்திலேயே தயவுசெய்து சில நாட்கள் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இதன் மூலம், நம் அனைவருக்கும் நோய் பரவாமல் தடுக்க முடியும். ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் நாம் நம்முடைய ஆரோக்கியத்துடன் விளையாடுகிறோம். தயவுசெய்து உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தினரைப் பற்றியும் கவலைப்படுங்கள். அவசியமில்லை என்றால் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.” என்று இந்தியில் டுவிட் செய்துள்ளார்.

    20:21 (IST)21 Mar 2020

    கோவாவுக்கு சுற்றுலாப் பயணிகள் மார்ச் 31-வரை வரக்கூடாது - முதல்வர் பிரமோத் சாவந்த்

    கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்: மார்ச் 31 க்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வரக்கூடாது.COVID-19 ஐத் தொடர்ந்து கடற்கரைகள், உணவகங்கள் மற்றும் பல பொது இடங்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.

    19:21 (IST)21 Mar 2020

    கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

    கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    18:46 (IST)21 Mar 2020

    கொரோனா எதிரொலி: நாளை சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து

    தெற்கு ரயில்வே அறிவிப்பு: சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து.

    சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும். என்று அறிவித்துள்ளது.

    18:22 (IST)21 Mar 2020

    புதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமல் - முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே மாஹேவில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலாகிறது.

    18:20 (IST)21 Mar 2020

    சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்

    மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கொரோனா முன்னெச்சரிக்கையாக மார்ச் 31 வரை கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது.

    18:20 (IST)21 Mar 2020

    குடும்பத்தை சந்திக்க மறுத்ததற்காக கைதிகள், காவலர்கள் மோதல்; மேற்குவங்க சிறையில் மோதல்

    கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31 ஆம் தேதி வரை கைதிகள் அவர்களுடைய குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்ற மாநில அரசின் முடிவு தொடர்பாக மேற்கு வங்காளத்தின் டும்டம் திருத்தம் இல்லத்தில் உள்ள கைதிகள் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். கற்களை வீசி சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். அதிகாலையில், சில கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இருப்பினும், அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் வன்முறை போராட்டத்தைத் தொடங்கினர்.

    17:46 (IST)21 Mar 2020

    பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - ரஜினி வேண்டுகோள்

    பிரதமர் மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள்.

    இதுகுறித்து ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-ம் கட்டத்தில் உள்ளது. வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12-லிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 3-வது நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம். அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவு கொடுத்திருக்கிறார். ஆகவே பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை 22-ம் தேதி பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுபோம். கொரோனா வைரஸைத் தடுக்க, சரிசெய்ய உயிரை பணையம் வைத்து பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை பிரதமர் சொன்னது போல் மனதார பாராட்டுவோம். அவர்களின் குடும்பத்தார் நலமாக வளமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.

    17:14 (IST)21 Mar 2020

    தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி; வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

    தாய்லாந்தில் வந்த 2 பேருக்கும் நியூஸிலாந்தில் வந்த ஒருவருகும் கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    17:06 (IST)21 Mar 2020

    ரயில்களில் கொரோனா பாதிக்கப்பட்ட பயணிகள் சிலரை கண்டறிந்துள்ளது ரயில்வே - அமைச்சகம் டுவிட்

    ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “ரயில்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சிலரை ரயில்வே கண்டறிந்துள்ளது. இது ரயில் பயணத்தை ஆபத்தானதாக ஆக்கியுள்ளது. உங்கள் சக பயணிக்கு கொரோனா வைரஸ் இருந்தால் நீங்கள் கூட பாதிக்கப்படக்கூடும் என்பதால் ரயில் பயணத்தைத் தவிர்க்கவும். எல்லா பயணங்களையும் ஒத்திவைத்து, உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.” என்று அறிவுறுத்தியுள்ளது.

    16:58 (IST)21 Mar 2020

    டெல்லியில் எந்த இடத்திலும் 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் எந்த இடத்திலும் 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது; அப்படியே 5 பேர் கூடினாலும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    16:24 (IST)21 Mar 2020

    நாளை சுய ஊரடங்கு; வீட்டில் இருப்பது மட்டுமல்ல, உங்களது நகரத்திலும் இருப்பது அவசியம் - பிரதமர்

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர் மோடி நாளை (மார்ச் 22) நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி, “சுய ஊரடங்கான நாளை தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது. நாளை சுய ஊரடங்கின்போது வீட்டில் இருப்பது மட்டுமல்ல, உங்களது நகரத்திலும் இருப்பது அவசியம். மருத்துவர்கள், அதிகாரிகளின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

    15:31 (IST)21 Mar 2020

    மூன்று மாநில எல்லைகளை மார்ச் 31 வரை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

    தமிழகத்தில் இன்று (மார்ச் 21) முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூன்று மாநில எல்லைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவருடைய டுவிட்டரில் “எல்லைகளை மூடியதற்காக தமிழக அரசைப் பாராட்டுகிறேன். முதல்வர் பழனிசாமி உடனடியாக பூட்டுவதாக அறிவிக்க வேண்டும். படிப்படியாக நடவடிக்கை எடுப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. மக்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும்” என்று ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    15:14 (IST)21 Mar 2020

    கிருமிநாசினி தெளிப்பதுபோல வந்து வீடுகளில் சமூகவிரோதிகள் கைவரிசை காட்டக்கூடும் கமிஷனர் எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார ஊழியர்கள், கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் செய்து வருகின்றனர். இந்த சூழலில் சிலர்கிருமிநாசினி தெளிப்பதுபோல வந்து வீடுகளில் சமூகவிரோதிகள் கைவரிசை காட்டக்கூடும் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை செய்துள்ளார்.

    14:46 (IST)21 Mar 2020

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு: 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றமில்லை

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

    14:07 (IST)21 Mar 2020

    மெரினா, பெசன்ட் நகர் ‘பீச்’சுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை: மறு உத்தரவு வரும் வரை அமல்

    கொரோனா வைரஸ் தொற்று பரவமால் தடுக்கும் நடவடிக்கையாக,சென்னை கடற்கரைகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரையில்; திருவான்மியூர்,மெரினா, பெசன்ட் நகர் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு, உட்பட பொது விடுமுறை நாட்களில் பொது மக்கள் அதிகமாக கடற்கரைக்கு செல்வது வழக்கம்.  கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    13:53 (IST)21 Mar 2020

    மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் - முதல்வர் அறிவிப்பு

    1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று 108 விதியின் கீழ் பேசிய முதல்வர், " மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டம் விரைவில்  இயற்றப்படும், நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.       

    13:10 (IST)21 Mar 2020

    ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நீதிபதி

    கொரோனா நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.

    12:49 (IST)21 Mar 2020

    சட்டப்பேரவை கூட்டத் தொடர்

    சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இனி வரும் நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறும். ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:34 (IST)21 Mar 2020

    மலேசியாவில் தமிழர்கள் தவிப்பு

    மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 5வது நாட்களாக ஏராளமான தமிழர்கள் தவிப்பு. சுற்றுலா சென்றவர்களும், பணி நிமித்தமாக சென்றவர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

    12:14 (IST)21 Mar 2020

    பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

    கொரோ‌னா வைரஸ் பரவுவதை தடுக்க வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. 

    12:03 (IST)21 Mar 2020

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

    தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, சட்டமன்ற விடுதிக்கு வரும் பார்வையாளர்களை பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    11:29 (IST)21 Mar 2020

    தங்கம் விலை உயர்வு

    தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.31,728க்கு விற்பனை செய்யப்படுகிறது 

    11:02 (IST)21 Mar 2020

    ராமதாஸ் ட்வீட்

    கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். 

    10:40 (IST)21 Mar 2020

    ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    கொரோனா தடுப்பு உபகரணங்களை தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளார். 

    10:23 (IST)21 Mar 2020

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாகவும், சுய ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

    09:50 (IST)21 Mar 2020

    இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 258 ஆக அதிகரித்துள்ளது. 219 இந்தியர்கள் மற்றும் 39 வெளிநாட்டினருக்கு கொரோனா பாதிப்புள்ளது தெரிய வந்துள்ளது. 

    09:32 (IST)21 Mar 2020

    முதல்வருக்கு ப.சிதம்பரம் பாராட்டு

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லைகளை மூட உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். 

    09:13 (IST)21 Mar 2020

    கேரளாவிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா அறிகுறி

    கேரளாவில் இருந்து கன்னியாகுமரி திரும்பிய பெண்ணிற்கு கொரோனா அறிகுறி இருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதாகும் அவர், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    09:04 (IST)21 Mar 2020

    நாளை லாரிகள் ஓடாது

    நாடு முழுவதும் இயங்கும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் தமிழக லாரிகள் நாளை ஒருநாள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள மக்களின் ஊரடங்கு முடிவுக்காகவும், கொரோனா வைரஸ் ஒழிப்பு செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், ஒருநாள் லாரிகள் நிறுத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையம் 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி, சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. இந்நிலையில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    Tamil Nadu Coronavirus Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment