Tamil Nadu News Today Live Updates : கொரோனா வைரஸை ‘அறிவிக்க வேண்டிய தொற்று நோயாக’ அறிவித்தது தமிழக அரசு. தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இது உயராமல் இருக்க, வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்கிறது மத்திய அரசு. கொரோனாவை தடுக்க அவசர நிதியாக இந்தியா சார்பில் 74 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பிரச்னையால் அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கொரோனா அச்சத்தால், புதுச்சேரியிலும் இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா என்பது இன்று தெரிய வரும். கமல்நாத் அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேல் ரெய்டு இல்லாமல், வாழ்க்கை அமைதியாக இருந்ததாக மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
’ரெய்டும் ஜாலியா தான் இருக்கு’: மாஸ்டர் ஆடியோ லாஞ்சில், கலகல விஜய்!
News in Tamil : திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29-ம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக பொதுக்குழு கூட்டம், மார்ச் 29-ம் தேதி 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Web Title:Tamil nadu news today live coronavirus madhya pradesh floor test
நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்
பல்கலை. தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
- உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள்,பல்கலை.,பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்
கொரோனா எதிரொலியால் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்
அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னையில் பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை திறந்தால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும்
- சென்னை மாநகராட்சி
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி- குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம்
நான் சொன்ன அரசியல் அற்புதம் நிச்சயம் நிகழும். அரசியலில் நான் வைத்த புள்ளி அலையாக மாறியது, தற்போது சுழலாக உள்ளது. விரைவில் சுனாமியாக மாறும் - நடிகர் ரஜினிகாந்த்
யாரேனும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
- முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு.
முப்பத்தி ஒரு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் இன்று இரவுடன் முடித்துக் கொள்ளப் படும் நிலையில் ஸ்டாலின் நேரில் ஆதரவு.
விருது வழங்கும் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வாங்கினார்.
மேலும் ரஜினி பேசுகையில், 'அரசியலில் நேரம் தான் சரியாக வேலை செய்யும். அரசியலில் ஒரு அலை, ஒரு மூவ்மெண்ட் வரவேண்டும். எம் ஜி.ஆர் கணக்கு கேட்டதால் வெளியே தூக்கி எறியப்பட்டார். அவர் மக்களிடம் சென்று விளக்கம் கேட்டார. மக்கள் ஆதரவு அலையால் வெற்றி பெற்றார். தேர்தல் நெருங்க நெருங்க அந்த அலை பெரிய அரசியல் சுனாமியாக மாறும். அது ஆண்டவன் கையில் இருக்கிறது. மக்களாகிய நீங்கள்தான் ஆண்டவன். அந்த அற்புதம், அதிசயம் நிகழும்" என்றார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேதிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தெலங்கானா சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பெட்ரோல் பங்க் இயங்க அனுமதித்த, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக நிலத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் 28-ஆவது பொதுக்குழு 21.03.2020 சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரானா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கழகப் பொதுக்குழு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் திங்கள்கிழமை முதல்வர் கமல்நாதிற்கு எழுதியுள்ள கடிதத்தில், நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆளுநர், அந்த கடிதத்தில், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றால், தற்போதைய அரசாங்கத்திற்கு மாநிலத்தில் பெரும்பான்மை இல்லை என்று கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல, அனைத்து அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவிவருவதால் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் முகக்கவசம், சானிடைசர்களை அதிக விலைக்கு விற்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம், சானிடைசர்கள் அதிகவிலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறித்து TNLMCTSசெயலி, 044-24321438என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். clmchennaitn@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகாரளிக்கலாம்.
கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் மார்ச் 19ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்படும் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சத்தால், அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முகக் கவசம், கை சுத்திகரிப்பான் திரவம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் பலி எண்ணிக்கை 853 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 129 பேர் உயிரிழந்தனர். ஈரான் சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை செய்த டுவிட்டில், ஈரான் முழுவதும் மொத்தம் 14,991 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். “கடந்த 24 மணி நேரத்தில் 1,053 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளனர். மேலும், 129 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன” என்று அலிரெஸா வஹாப்சாதே டுவிட் செய்துள்ளார். சீனாவிற்கு வெளியே மிகப் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அதிகாரிகள் வீட்டிலேயே இருக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். “புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கொரோனா பரவலின் உச்சத்தை நாங்கள் கடந்துவிட்டோம். ஆனால், மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நான் இன்னும் பரிந்துரைக்கிறேன். அவசரநிலை ஏற்பட்டால், அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்” என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே 2 முறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறது.
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். அதில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் முறையீடு செய்துள்ளனர்.
கொரோனா எதிரொலியால் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வழக்கறிஞர்களின் கோரிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ம.பி. முதல்வர் கமல்நாத் "மார்ச் 13, 2020 அன்று நான் உங்களைச் சந்தித்தபோது, பாஜக பல காங்கிரஸ் எம்எல்ஏக்களை கர்நாடக காவல்துறையின் கட்டுப்பாட்டில் சிறைபிடித்து வைத்திருப்பதை அவர்கள் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அவர்கள் பல்வேறு வகையான அறிக்கைகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அத்தகைய சூழ்நிலையில் எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பு சோதனையையும் நடத்துது எந்த அர்த்தமும் இல்லை. அது ஜனநாயக விரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நான் தெளிவுபடுத்தியுள்ளேன்” என்று கமல் நாத் மார்ச் 16 தேதியிட்ட தனது ஆறு பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சிறையிலிருந்து விடுபட்டு, அனைத்து வகையான அழுத்தங்களிலிருந்தும் முற்றிலும் விடுபடும்போதுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்று கமல்நாத் கூறினார்.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் திங்கள்கிழமை மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு கடிதம் எழுதினார். சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது ஜனநாயக விரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று காங்கிரஸின் சில எம்.எல்.ஏக்களை கர்நாடக காவல்துறையின் உதவியுடன் பாஜக சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பாஜக கோரியபடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல், கொரோனா வைரஸ் தொற்று குறித்து மாநில அரசு எழுப்பியுள்ள கவலை எழுப்பியுள்ளது. அதனால், சட்டமன்ற பட்ஜெட் அமர்வின் முதல் நாள் மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாவட்டங்களில் நடைபெற இருந்த திமுக நிகழ்ச்சிகளை மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வேலூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக திருவிழாக்கள், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தடை விதித்துள்ளார்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, “உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும் நம் நாடு இதை தேசிய பேரிடர் என்று அறிவித்திருப்பதாலும் நாட்டு மக்களின் உயிரையும் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து சாஹின் பாக் வழி தொடர் இருப்பு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொதுமக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. நாட்டு மக்கள் மீது அக்கறையும் நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. ஆயினும் வருங்காலத்தில் தமிழகத்தில் என்.பி.ஆர்.-ஐ நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்குமானால், நாம் தொடர் இருப்பு போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம் என்பதையும் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.” என்று அறிவிப்பு.
மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக தலைவர்கள் சற்று நேரத்திற்கு முன்பு அம்மாநில ராஜ் பவனை அடைந்தனர். பாஜகவின் 106 எம்.எல்.ஏ.க்களை ஆளுநர் முன்பு அணிவகுக்கச் செய்து கையொப்பங்களுடன் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர். ஆளுநர் டாண்டன் அவர்களிடம் அவர்கள் தாமாக முன்வந்து வந்திருக்கிறார்களா என்று கேட்டார்கள். ஆளுநர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சில வழிமுறைகளை வழங்கியதாகவும், அவை பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். முன்னாள் முதல்வரும் எம்.எல்.ஏ.வுமான சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், அரசாங்கம் சிறுபான்மையாக இருப்பதால் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் முன் அணிவகுத்தனர். மேலும், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது, அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை. என்று கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்ட ஆட்சியர் எம்.டி.சிங் அம்மாவவட்டத்தில் இருந்து அண்மையில் துபாய் சென்ற ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என்று உறுதியப்படுத்தியுள்ளார். இதன் மூலம் மகாராஷ்ராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா குறித்த தகவல்களை உலக அளவில் தெரிந்துகொள்ள கூகுள் பிரத்யேக இணையப்பக்கம் ஒன்றை உருவாக்கி வருகிறது. கூகுள் இணையப்பக்கம்: https://www.bing.com/covid
கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கு தேவையான சத்துணவை தயாரித்து வீடுகளுக்கு சென்று வழங்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பட்டப்படிப்பு மட்டுமின்றி 10,12-ம் வகுப்புகளிலும் தமிழில் படித்திருத்தல் அவசியம்.
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கு விசாரணயில், உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான மீன்வள துறை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கு ஆறு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கொரோனா அச்சம் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன்; திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மற்றும் 3 சுயேட்சைகள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விரும்புவதால் பொருளாளர்
பதவியிலிருந்து விலகினார்.
மத்தியப் பிரதேசம் சட்டப் பேரவையில் இன்று நடைபெற இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனு பரிசீலனை தொடங்கியது. அதிமுக சார்பாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோரும், திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோவும், இவர்களுடன் 3 சுயேட்சைகளும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கொரொனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக 62 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக வைகை அணை மூடப்பட்டுள்ளது.
"கொரோனா பரவாமல் தடுக்க சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்" என வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குகின்றன எனவும், அதனால் கொரோனா வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடி கொரோனா பாதித்து பலி ஆனவர்களுக்கான இழப்பீட்டை ரூ.10 லட்சமாக அதிகரிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"அம்மா இளைஞர் நலன் விளையாட்டுத் திட்டம் தமிழக அரசின் வரலாற்று திட்டமாகும்! அனைத்து கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகளில் முழுமையாக ஒரு மாதத்திற்குள் கொண்டு வரப்படும்!" என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரம் தொடர்பாக 55 பேர் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தக் கலவரத்தில் உளவுத்துறை போலீஸ் அதிகாரி அங்கித் சர்மா, உட்பட 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இந்த வழக்கில் இதுவரை 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மைக் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் பேட்டி எடுக்கக் கூடாது என கேரள அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தொலைக்கட்சி செய்தியாளர்கள் மைக்கை பயன்படுத்தி பேட்டி எடுப்பதை தவிர்க்குமாறு கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிந்து 32,245இல் வணிகம். நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா பேரவையில் இன்று தாக்கலாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.