Tamil Nadu News today updates: ‘அரசியல் தொழில் கிடையாது; உடனே பதவிக்கு வந்துவிட முடியாது’ – ரஜினிக்கு முதல்வர் பதில்?

Chennai petrol diesel price : பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ. 75.55க்கு விற்பனையாகி வருகிறது. டீசல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து ரூ.69.59க்கு விற்பனையாகி வருகிறது.

Tamil Nadu News today updates
Tamil Nadu News today updates

Tamil Nadu news today updates ayodhya land dispute final verdict:  அயோத்தி வழக்கின் தீர்ப்பு 15ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி இழுபறி

மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கும் மேல் ஆனது. நிர்வாக பொறுப்புகள் இரண்டாக பங்கிடப்பட வேண்டும் என்ற சிவசேனாவின் வேண்டுகோளை தொடர்ந்து மறுத்து வந்தது பாஜக. இந்நிலையில் முதல்வர் பதவி தரும் எண்ணம் இருந்தால் மட்டும் கூட்டணிக்கு அழைக்கவும் என உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் சிவசேனாவின் 64 எம்.எல்.ஏக்களும் (56 சிவசேனா எம்.எல்.ஏக்கள் + 8 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்) பாந்த்ராவில் இருக்கும் ரங்ஷர்தா சொகுசு விடுதியில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மகாராஷ்ட்ரா ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க : பிரச்சனை என்றால் அது வெளி நபர்களால் தான்: அயோத்தி கள நிலவரம்

Live Blog

Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்


22:54 (IST)08 Nov 2019

உடனே பதவிக்கு வந்துவிட முடியாது – முதல்வர் பழனிசாமி

விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இன்று முதல்வர் மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து முதல்வர் பேசினார். ‘அரசியலை சிலர் தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு, பகல் பார்க்காமல் உழைத்தால் தான் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும். அரசியலில் திடீரென பிரவேசித்து, உடனே பதவிக்கு வந்துவிட முடியாது. மிக கடுமை அரசியலில் மிக கடுமையாக உழைக்க வேண்டும், இல்லையென்றால் முன்னேற முடியாது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உங்களைப்போல வீட்டில் இருந்து பேட்டி கொடுக்கவில்லை, அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்.மக்களுக்கு சேவை செய்த பிறகுதான் எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்’ என்றார்.

22:15 (IST)08 Nov 2019

அயோத்தி தீர்ப்பு – சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

21:36 (IST)08 Nov 2019

அயோத்தி வழக்கு சுருக்கமாக…

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

முதலில் நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்பட்டது.  சமரச பேச்சுவார்த்தை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்து.

21:13 (IST)08 Nov 2019

அயோத்தி வழக்கில் நாளை காலை தீர்ப்பு

பாபர் மசூதி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். 

20:51 (IST)08 Nov 2019

எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி – ராகுல் காந்தி

என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி

உங்கள் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு மற்றும் பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி

உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகள்

– ராகுல் காந்தி

20:51 (IST)08 Nov 2019

செங்கோட்டையன் ட்வீட்

பொதுத்தேர்வு குறித்த மக்களின் கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை- செங்கோட்டையன்

20:14 (IST)08 Nov 2019

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டுவிட்டர் பக்கத்தில், “5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது ” என்று தெரிவித்துள்ளார்.

19:10 (IST)08 Nov 2019

தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை – முதல்வர் பழனிசாமி

விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி: தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக தான் ஆட்சியமைக்கும். அதிமுகவின் கூட்டணி பலம்பொருந்தியது; யாரும் அதனிடம் நெருங்க முடியாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர். உள்ளாட்சி, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு இடைத்தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளர் ஸ்டாலின். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது.

18:52 (IST)08 Nov 2019

சிவசேனாவில் முதல்வர் உருவாவார்; பால் தாக்கரேவுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன் – உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “நிச்சயம் ஒரு நாள் சிவசேனாவில் இருந்து முதல்வர் உருவாவார் என பால் தாக்கரேவிடம் நான் சத்தியம் செய்திருந்தேன்; அந்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன், அதற்கு அமித்ஷாவோ, தேவேந்திர ஃபட்னாவிஸ்சோ தேவையில்லை” என்று கூறினார்.

18:40 (IST)08 Nov 2019

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட மெமோவுக்கு தடை – உயர் நீதிமன்றம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மெமோ நோட்டீசுக்கு தடை. அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

18:29 (IST)08 Nov 2019

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறையின் வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை, ப.சிதம்பரம் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

18:23 (IST)08 Nov 2019

மணல் அள்ள தடை கோரி வழக்கு தொடர்ந்தவர் வாபஸ்; விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மணல் அள்ளுவதற்கு தடை கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தவர், மனுவை வாபஸ் பெற்றது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுநல வழக்கில் இடைக்கால உத்தரவு இருக்கும் நிலையில் அரசு தரப்பில் மனுவை வாபஸ் பெற எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

17:52 (IST)08 Nov 2019

தாமதமாக வந்த 28 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

ஒசூர் அருகே அரசுப்பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் 28 பேர் மீது முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை. முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொண்ட திடீர் ஆய்வில் தாமதமாக வந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

17:17 (IST)08 Nov 2019

சிவசேனா மோடி உள்பட எங்களுடைய மூத்த தலைவர்களுக்கு எதிராக பேசுவதை சகித்துக்கொள்ள முடியாது – தேவேந்திர ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் அனைவரும் தாக்கரே மீது மரியாதை வைத்திருக்கிறோம். உண்மையில் நாங்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக எதையும் கூறவில்லை. ஆனால், தாக்கரே கடந்த 10 நாட்களில், மோடி உள்பட எங்களுடைய மூத்த தலைவர்களுக்கு எதிராக பேசுகிறார். அதை சகித்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

16:39 (IST)08 Nov 2019

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

16:33 (IST)08 Nov 2019

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் – ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சந்திப்பு

மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு

16:12 (IST)08 Nov 2019

சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு

சிலைக்கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு, சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று கூறினர். வழக்கு விசாரணை நம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

16:00 (IST)08 Nov 2019

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் மாணவரின் தந்தை கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மாதம் மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ததால், உயர்நீதிமன்ற மதுரை கிளை மாணவரின் தந்தைக்கு ஜாமீன் அளிக்க மறுத்ததோடு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு.

15:52 (IST)08 Nov 2019

சிறப்புப் பாதுகாப்பு வாபஸ்

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆகியோருக்கான ‘இசட்’ பிரிவை வாபஸ் பெற உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

15:30 (IST)08 Nov 2019

அத்வானிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர்  மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா , குடியரசு துணைத்தலைவர்  வெங்கய்ய நாயுடு ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். 

15:09 (IST)08 Nov 2019

கலைஞர் நினைவிடத்தில் திமுக பிரமுகரின் இல்லத் திருமணம்

திருச்சி மகளிர் அணி நிர்வாகி இல்ல திருமண விழா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். 

15:01 (IST)08 Nov 2019

துரைமுருகன் பதிலடி

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு, ”தொடர்ந்து அரசியல் பயணத்தில் இல்லாததால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார் என,  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

14:48 (IST)08 Nov 2019

வருமான வரித்துறையினர் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த செங்கம், கரியமங்கலம் பகுதியில் உள்ள பால் பண்ணையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். 

14:40 (IST)08 Nov 2019

பிரிபெய்டு மின் மீட்டர்

பிரிபெய்டு மின் மீட்டர் பொருத்தி மின் கட்டணம் நிர்ணயிக்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது, இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். 

14:04 (IST)08 Nov 2019

முரளிதரராவ் கருத்து

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்படுவது போல் எனக்கு பாஜக சாயம் பூச பார்க்கின்றார்கள். வள்ளுவரும் காவிக்குள் சிக்கமாட்டார். நானும் மாட்ட மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறிய நிலையில், “ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. திருவள்ளுவர் ஒன்றும் நாத்திகவாதி அல்ல” என தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியிருக்கிறார். 

13:52 (IST)08 Nov 2019

குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடியாக திகழ வேண்டும்

மாநில அளவில் குழந்தைகளுக்கான குழுவை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களில் முன்னோடியாக திகழ வேண்டும் என ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அவர் துவங்க இருக்கும் தொண்டு அமைப்பு தொடர்பாக முதல்வரை சந்தித்து திரும்பிய போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு பேசினார்.

13:49 (IST)08 Nov 2019

ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது தமிழக அரசு வழக்கு தொடுத்தது. வருகின்ற டிசம்பர் 9ம் தேதி ஸ்டாலின் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

13:47 (IST)08 Nov 2019

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பிவிட்டது

வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும். தமிழகத்தில் உருவான வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிட்டது. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வரும் போது இதனை அவர் உணர்வார் என்றும் திமுக தலைவர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

13:44 (IST)08 Nov 2019

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, தேனி, நெல்லை, கோவை, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:39 (IST)08 Nov 2019

பணமதிப்பிழக்க நடவடிக்கை குறித்து ராகுல் கருத்து

ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை பறித்துக் கொண்ட இந்த நிகழ்வு அரங்கேறி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

11:55 (IST)08 Nov 2019

எனக்கு பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள் – ரஜினிகாந்த்

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்படுவது போல் எனக்கு பாஜக சாயம் பூச பார்க்கின்றார்கள். வள்ளுவரும் காவிக்குள் சிக்கமாட்டார். நானும் மாட்ட மாட்டேன் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்ற இந்த நேரத்தில் திருவள்ளவருக்கு காவி சாயம் பூசிவது தேவையற்றது என்றும் அவர் அறிவித்தார்.

11:35 (IST)08 Nov 2019

மேகதாது அணை மீதான விசாரணை ஒத்திவைப்பு

மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் ஜனவரி 23ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

11:17 (IST)08 Nov 2019

பாலச்சந்திரனின் சிலை திறக்கப்பட்டது

சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபல திரைப்பட இயக்குநர் பாலச்சந்திரன் அவர்களுக்கு இன்று சிலை திறக்கபட்டது. நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்பு

11:09 (IST)08 Nov 2019

தங்கத்தின் விலை குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 184 குறைந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 29,080 ஆகும்.

11:02 (IST)08 Nov 2019

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை நியமித்து அறிவித்திருந்தது தமிழக அரசு. நேற்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

10:41 (IST)08 Nov 2019

அயோத்தி விவகாரம்

உத்திர பிரதேசம் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நவம்பர் 17ம் தேதிக்குள் எந்த நாளில் வேண்டுமானாலும் தீர்ப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

10:28 (IST)08 Nov 2019

ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம்

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதைத் தொடர்ந்து அதனை எதிர்த்து முக ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டார். ஷா கமிஷனில் பெயர் இல்லை என்பதால் என்னுடைய சந்தேகத்தை எழுப்பினேன் என்று கூறிய பாண்டியராஜன் விரைவில் ஸ்டாலின் கைது குறித்து ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும் கூறினார்.

10:12 (IST)08 Nov 2019

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ரேட்டிங்க் “நெகடிவ்”

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ரேட்டிங்கை ஸ்டேபிளில் இருந்து நெகடிவ்விற்கு மாற்றி அறிவித்துள்ளது மூடிஸ் நிறுவனம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்யும் போது யோசனை அவசியம் என்ற எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது இந்நிறுவனத்தின் செயல்பாடு.

09:54 (IST)08 Nov 2019

சென்னையில் காற்று மாசு

டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மோசமான வானிலை நிலவி வருகிறது. காற்றின் மாசு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையிலும் காற்று மாசு பரவி வருகிறது. காற்றின் தரக்குறியீடு சென்னை மணலியில் 320, வேளச்சேரியில் 292, மற்றும் ஆலந்தூரில் 285 என பதிவாகியுள்ளது. புல்புல் புயலால் ஏற்படும் காற்றின் காரணமாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி காற்று மாசு நகர்ந்துள்ளது.

09:51 (IST)08 Nov 2019

ஆலோசனையில் ஈடுபட்டு வரும் தலைமை நீதிபதி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதை ஒட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

09:47 (IST)08 Nov 2019

எல்.கே. அத்வானி பிறந்தநாள்

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

09:32 (IST)08 Nov 2019

மதுரையில் மழை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. மேலூர், அழகர் கோவில், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

09:30 (IST)08 Nov 2019

அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான அரையாண்டு கால அட்டவணையை வெளியிட்டார். இம்மூன்று வகுப்பினருக்கும் டிசம்பர் 13ம் தேதி துவங்கி, டிசம்பர் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு தேர்வுகளை மட்டும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளை தலா 8 ல்ட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

09:17 (IST)08 Nov 2019

அமெரிக்கா புறப்பட்டார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்

செப்டம்பர் மாத இறுதியில் தமிழக முதல்வர் 10 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து ,அமெரிக்கா, மற்றும் அமீரகம் சென்று திரும்பினார். இந்நிலையில் நேற்றிரவு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமெரிக்கா சென்றுள்ளார். அவரை வழியனுப்ப செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் விமான நிலையம் சென்றனர். அவருடன் அவருடைய மகன் ஓ.பி.ரவிந்திரநாத் குமார், முக்கிய நிர்வாகிகளுடன் அமெரிக்கா சென்றார்.

Tamil Nadu news today updates : ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தின் முதல் மோஷன் போஸ்ட்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டர் இந்தி, தெலுங்கும், மலையாளம் மற்றும் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : Darbar Motion Poster Release: ரஜினியின் மாஸான லுக்கில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புல்புல் புயல் 12ம் தேதி கரையை கடக்க உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை, மற்றும் மாசுடன் கூடிய பனி பெய்து வருவது இயல்பு வாழ்க்கைக்கு சற்று மாறாக அமைந்திருக்கிறது. மேலும் படிக்க : ‘புல்புல்’ புயலால் தமிழகத்துக்கு மழையா? எப்போது கரையை கடக்கிறது இந்த புயல்?

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates ayodhya land dispute final verdict delhi pollution ops foreign trip

Next Story
‘புல்புல்’ புயலால் தமிழகத்துக்கு மழையா? எப்போது கரையை கடக்கிறது இந்த புயல்?Chennai weather today cyclone bulbul latest updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com