Tamil Nadu news today updates : அதிமுக எம்எல்ஏக்கள் அவசரக் கூட்டம்: ஓபிஎஸ், இபிஎஸ் அழைப்பு

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

By: Sep 22, 2019, 9:56:55 PM

Tamil Nadu news updates : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானி ராஜினாமாவை ஏற்று, முறைப்படி மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரது ராஜினாமா, செப்., 6ல் இருந்து அமலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தலைமை நீதிபதியின் பணிகளை கவனிக்க, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை : சென்னை வானிலை மையம்

7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் விமானநிலையம் வந்திறங்கினார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நகரில் நடக்கும் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பார்லி. செனட்டர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:06 (IST)22 Sep 2019
விரைவில் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பேசுகிறார்

ஹூஸ்டனில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி விரைவில் பேச உள்ளார்.

20:19 (IST)22 Sep 2019
நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

19:24 (IST)22 Sep 2019
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை மீனவ கிராமத்தில் இலங்கையில் இருந்து படகில் கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.2.45 கோடி ஆகும்.

19:05 (IST)22 Sep 2019
ஹூஸ்டனில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்ட டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி ஹவ்டி மோடி என்ற நிகழ்வில் இந்திய வம்சாவழி மக்களிடம் பேசுகிறார். அவருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டிரம்ப் ஹூஸ்டனுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

18:52 (IST)22 Sep 2019
உலக மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் வெண்கலப் பதக்கம் வென்றார்

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப்போட்டியின் ஆடவர் 61 கிலோ எடை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ராகுல் அவாரே வெண்கலப் பதக்கம் வென்றார்.

18:14 (IST)22 Sep 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதர்வு - திருமாவளவன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

17:52 (IST)22 Sep 2019
பேனர் விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

சென்னையில் பேனர் விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.

17:49 (IST)22 Sep 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 27 பேர் விருப்ப மனு

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதிமுக தலைமையகத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்பமனு பெறப்படுகிறது; விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை மாலை நேர்காணல் நடைபெற உள்ளது.

17:42 (IST)22 Sep 2019
இந்தி திணிப்பு போராட்ட விவகாரத்தில் ஸ்டாலின் பற்றி குறை கூற அதிமுகவுக்கு தகுதியில்லை - ஜஹிருல்லா

செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. இந்தி திணிப்பு போராட்ட விவகாரத்தில் ஸ்டாலின் பற்றி குறை கூற அதிமுகவுக்கு தகுதியில்லை. நடிகர் விஜய் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

17:29 (IST)22 Sep 2019
இடைத்தேர்தலில் மநீம போட்டியிடாதது பயத்தைக் காட்டுகிறது - அமைச்சர் தங்கமணி

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாதது அவர்களின் பயத்தைக் காட்டுகிறது என்று கூறினார்.

17:10 (IST)22 Sep 2019
கட்சியை நிர்வகிக்க முடியாத ராகுல் காந்தி நாட்டை எப்படி நிர்வகிப்பார்? - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கேள்வி

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே: ஐந்து ஆண்டுகள் நன்றாக ஆட்சி செய்த பிறகும் சிலர் மோடியின் பிம்பத்தை சிதைக்க முயற்சித்தனர். ஆனால், மக்கள் மோடிக்கு மாற்று யாரும் இல்லை என்று முடிவு செய்துவிட்டனர். ராகுல் காந்தி கட்சியை நிர்வகிக்கி முடியவில்லை பிறகு அவர் எப்படி நாட்டை நிர்வகிப்பார்? அதன் விளைவாகத்தான் அவர் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்” என்று கூறினார்.

17:05 (IST)22 Sep 2019
பிரச்சார உரை

வரும் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடக்க விருக்கிறது. இதற்காக அம்மாநிலத்தில் பிரச்சார பயணத்தை தொடங்கிய அமித் ஷா, " 370 வது ரத்து செய்ததிற்கு பின் நடக்கும் முதல் தேர்தல் இது. 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவை எதிர்த்த கட்சிகள் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் .  1947 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அந்த யுத்த நிறுத்தத்தை அறிவிக்காவிட்டால், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் என்ற ஒன்றே இன்று இருக்காது என்றும், தேசத்தைக் காப்பாற்ற நினைக்கும் எங்களோடு நில்லுங்கள்" என்று பிரச்சார உரையில் அறிவித்தார்.

16:54 (IST)22 Sep 2019
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்

சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா 2019-2020-ம் ஆண்டு ‘நீட்’தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.  தமிழக அரசு தனிப்படை அமைத்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது,  தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரால் உதித்சூர்யா  குறித்த முறைகேடு தொடர்பாக நியமிக்கப்பட்ட 4 பேர் கொண்ட பேராசிரியர் குழுவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

16:42 (IST)22 Sep 2019
நெல்லையில் கனமழை:

வெப்பசலனம் மற்றும் வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்  கடந்த  இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை மற்றும் அதன்  சுற்றுவட்டாரப் பகுதிகளும் தற்போது கனமழை பெய்து  வருகிறது.    

16:38 (IST)22 Sep 2019
பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக கட்சி இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

16:18 (IST)22 Sep 2019
ராகுல் - பிஜேபி சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சி (பாஜக)தேசிய  செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று  மூத்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சம்பார்க் பார் சமர்த்தன் (ஆதரவுக்காக  தொடர்புகொள்)  என்பது அமித் ஷா கடந்த தேர்தலின் போது பயன்படுத்திய யுக்தியாகும்.  சமூகத்தில் பிரபலமானவர்கள், சிந்தனையாளர்கள், பணக்காரர்களிடம் தனிப்பட்ட முறையில் பாஜக வின் கொள்கைகளையும் , சிந்தாந்தங்களையும் விளக்குவது. அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது தேசிய செயல் தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா இந்திய கிரிகெட்டின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிடை அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கிறார். 

15:34 (IST)22 Sep 2019
நிக்காப், புர்க்கா தடை நீக்கம்

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, முகத்தை மூடும் வகையில் அணியும் ஆடைகளுக்கு தடை விதித்திருந்தது . அவசரகால சட்டத்தின் கீழ் வந்த இந்த  தடை,  தற்போது அவசார அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் அங்கு   நிக்காப், புர்க்கா ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.   

 
14:51 (IST)22 Sep 2019
வைகோவுடன் கருத்து வேறுபாடு இல்லை - கே.எஸ்.அழகிரி

காஷ்மீர் விவகாரத்தின் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபையில் பாஜகவை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியையும் சாடினார். இதனைத் தொடர்ந்து கூட்டணிக்குள் இருந்து கொண்டே எப்படி காங்கிரஸ் கட்சியை சாடலாம் என்று இரு கட்சியினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வைகோவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அவர் எங்களுடன் எங்களுக்காக நாங்குநேரியில் தொகுதியில் களப்பணியாற்றுவார் என்று நம்புகிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

14:32 (IST)22 Sep 2019
பிகில் இசை வெளியீட்டு விழா : அதிமுகவினர் கருத்து

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் குறித்து தன்னுடைய கருத்தினை பதிவு செய்தார். ஆடியோ வெளியீட்டு விழாவில் திரைப்படம் குறித்தும் பேசலாம். சமூகம் குறித்தும் பேசலாம். விமர்சனங்கள் மூலமாக விளம்பரம் தேட நினைப்பவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என ஆர்.பி. உதயக்குமார் பேச்சு

14:02 (IST)22 Sep 2019
தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பல் கைவரிசை

சென்னை நங்கநல்லூரில் 120 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம். 10 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துவர மும்பை சென்றுள்ளனர் காவல்துறையினர்.

13:41 (IST)22 Sep 2019
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - செல்லூர் ராஜூ

இந்தி திணிப்பு போராட்டத்தை ஒத்தி வைத்ததால் திமுகவுக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்துள்ளது என்றும் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் மக்களிடம் அதிமுகவின் செல்வாக்கு உயர்வுக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. மேலும் இடைத்தேர்தலில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

13:33 (IST)22 Sep 2019
இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என்று கூட்டணி உருவாக்கப்பட்டு அனைவரும் அதில் தோல்வியைத் தழுவிய நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேமுதிக தலைமை விரும்பினால் தேர்தலில் போட்டியிடத் தயார் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி அளித்துள்ளார்.

12:40 (IST)22 Sep 2019
சென்னையின் பலபகுதிகளில் இடியுடன் மழை

சென்னையின் பலபகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, நந்தனம், வண்ணாரப்பேட்டை, ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. விடுமுறை நாள் என்பதால், மக்கள் இந்த மழையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

12:14 (IST)22 Sep 2019
இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் துவங்கியுள்ளது.

11:30 (IST)22 Sep 2019
இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு மதிமுக ஆதரவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10:55 (IST)22 Sep 2019
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு – ஜி.கே.வாசன்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

10:06 (IST)22 Sep 2019
இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்

இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள்நீதி மய்யம் பங்கேற்க விரும்பவில்லை என்று அக்கட்சி நிறுவனர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்பது உறுதியாகியுள்ளன. 

இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

09:38 (IST)22 Sep 2019
தமிழகத்தில் அடுத்த 21 ஆண்டுகளுக்கும் முதல்வர் பழனிசாமி தான் - – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த 21 ஆண்டுகளுக்கும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியே நடைபெறும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

09:01 (IST)22 Sep 2019
அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் மோடி

அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 7 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பயணத்தின் முதற்கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மோடி பேசினார். கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், வெளியுறவு செயலர் விஜய் கோக்லேயும் கலந்து கொண்டனர்.

08:49 (IST)22 Sep 2019
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

08:38 (IST)22 Sep 2019
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து ஒரு லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 76.52 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.70.56 ஆகவும் உள்ளது.

08:34 (IST)22 Sep 2019
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுகோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tamil Nadu news today live updates : வரும் 2021-ல் விண்வெளிக்கு பயணமாகும் இந்தியர் இஸ்ரோவின் சொந்த ராக்கெட்டில் பயணிப்பதாக அமையும் என இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், எச்.ராஜா ஆதரவாளர்கள் இன்று நடத்தும், சமூக வலைதள மாநாடுக்கு போட்டியாக, வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் சார்பில், சமூக வலைதள பயிலரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டி நிகழ்ச்சிகளை தவிர்க்கும் வகையில், டில்லி மேலிட உத்தரவை தொடர்ந்து, 'தேச ஒற்றுமை பிரசாரம் - மக்கள் சந்திப்பு கூட்டம்' என, பா.ஜ., தேசிய பொதுச்செயலர், ராம் மாதவ் தலைமையில், திருவான்மியூரில் நடைபெறுகிறது. காலியாக உள்ள, தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கு, யாரை நியமிக்கலாம் என்பதை, பொறுமையாக முடிவு செய்யலாம் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது

Web Title:Tamil nadu news today live updates chennai weather modi in houston rainfall tn byelection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X