Tamil nadu news today live updates : மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னாவிஸ். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்கிறார். யார் முட்டுக்கட்டை போட்டாலும், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 33-வது மாவட்டமாக உதயமாகியுள்ள தென்காசி மாவட்ட விழாவில் அவர் இவ்வாறு கூறினார். மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த, நடப்புக் கூட்டத்தொடரிலேயே, சட்டத் திருத்த மசோதா கொண்டு வரவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், பள்ளிக்கரணை, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, எழும்பூர் ஆகிய பகுதிகளில் காலையிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தரமணி, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், அடையாறு, சேப்பாக்கம், மெரினா, பட்டினப்பாக்கம், ஆலந்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தக்கரை, கீழ்பாக்கம், சேத்துப்பட்டு, தேனாம்பேட்டை, மந்தைவெளி, புரசைவாக்கம் போன்ற இடங்களிலும் இன்று காலை நல்ல மழை பெய்தது.
Tamil nadu news today live updates : சட்டவிரோத பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயம்புத்தூரில் இளம்பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் ஏதும் இல்லை எனவும் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த குடும்பதிற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடம் ஏன் வசூலிக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முரசொலி தலைமை அலுவலகம் அமைந்திருக்கக் கூடிய இடம் பஞ்சமி நிலம் என தவறான கருத்தை கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தவறும் பட்சத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இருவர் மீதும் வழக்கு தொடரப்படும் என திமுக அமைப்புச் செயலாளரும் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலருமான ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்.
Web Title:Tamil nadu news today live updates maharashtra govt formation
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, எந்த தொழிலும் ஏளனம் இல்லை. விவசாயிகளை போல விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும். ரிசர்வ் வங்கி மூலம் இங்குள்ள வங்கிகளை உலகத் தரத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் எனவும், வழக்கை நேர்மையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. அதோடு எஸ்.ஐ விபல்குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது மனைவிக்கு அரசுவேலை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதிமுகவினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நடத்தியது திமுக. அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுகத் தேர்தல் நடந்தது " என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குள் வரவே முடியாமல் இருந்த நீட் தேர்வை, அதிமுக ஆட்சியில் முதலமைச்சரால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? எனவும், அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி, மக்கள் முன்னிலையில் பொய்யும், புரட்டும் பேசுவது முதல்வர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்திருக்கும் பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
என மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்திருக்கும் பட்னாவிஸ், அஜித் பாவாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கும் 1-ஆம் தேதி கொடியேற்றம் முதல் மகா தீபம் நடைபெறும் 10-ஆம் தேதி வரை, திருவண்ணாமலையில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதாகவும், மகாராஷ்டிரா சம்பவத்தை அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது? எனவும், அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, குப்பைத் தொட்டியில் வீசி உள்ளனர் எனவும் மகாராஷ்ட்ரா அரசியல் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்துள்ளதை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா வரும் இலங்கை அதிபரிடம், மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
மகாராஷ்டிரா அரசியல் ஜனநாயக நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக திருமாவளவன் எம்.பி கருத்துத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் பாஜக தனது கோரமுகத்தை அரங்கேற்றியுள்ளது எனவும், சரத்பவாரின் முதுகில் குத்திய ரத்தக்கறை அமித்ஷாவின் கைகளில் இருந்து அகலாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், "ஏரி குளங்களில் போதிய பாதுகாப்பு இல்லாமல் குளிக்க வேண்டாம்" என பொது மக்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் கற்கவும் வாரம் ஒரு நாள் வகுப்பு நடத்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
யார் ஆட்சியமைப்பது என்று இழுபறி நீடித்த நிலையில், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் முதல்வர், துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர். https://tamil.indianexpress.com/india/maharashtra-government-formation-live-updates-devendra-fadnavis-takes-oath-as-cm/
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாயாக உள்ளது. அதே போல பெரிய வெங்காயம் ரூபாய் 70-க்கு விற்கப்படுகிறது. திருச்சி, மதுரை காய்கறி மார்க்கெட்டுகளைப் பொறுத்தவரை சின்ன வெங்காயம் 110-க்கும், பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.