scorecardresearch

Tamil Nadu news updates: நீட் தேர்வு விலக்கு – அதிமுக வாக்குறுதி என்ன ஆனது?- ஸ்டாலின்

Tamil Nadu news today live updates: சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.75.60-க்கும், டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.71-க்கும் விற்பனை.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கட்டணத்தை, ரூபாய் 90 வரை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். நதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே தீர்ப்பாய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவை இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

திங்கட்கிழமை காணாமல் போய் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்ட காபி டே-வின் உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் அவரது சொந்த பண்ணையில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of Politics, Entertainment, Sports, weather, traffic, train services and airlines

இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Highlights

  20:22 (IST)01 Aug 2019
  நீட் தேர்வு விலக்கு – அதிமுக வாக்குறுதி என்ன ஆனது?- ஸ்டாலின்

  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து சங்கிலிகுப்பத்தில் பேசிய அவர், நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்ட்டது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 

  19:26 (IST)01 Aug 2019
  அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது

  திமுகவால் மின்தட்டுப்பாட்டை போக்க முடியவில்லை, அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்று வேலூர் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

  100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் அதிமுக அரசு நிறுத்தாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  18:46 (IST)01 Aug 2019
  இந்திய பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது- ராகுல் காந்தி

  இந்திய பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்று திறமையற்ற நிதி அமைச்சர் சொல்கிறார்; வெளிச்சம் இல்லாத சுரங்கப் பாதையில் இந்திய பொருளாதாரம் கவிழ்ந்துள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

  18:02 (IST)01 Aug 2019
  காஞ்சிபுரம் – அத்திவரதர் தரிசன பாதையில் பட்டாக்கத்திகளுடன் 4 பேர் கைது

  காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு விஐபிக்களின் வாகனங்கள் நிற்கும் பகுதியில் பட்டாக்கத்திகளுடன் திரிந்த 4 பேரை , போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  சயன கோலத்தில் இருந்த அத்திவரதர், இன்று ( ஆகஸ்ட் 1 ) முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். முன்பைவிட இப்போது கூட்டம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், ஆயுதங்களுடன் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  17:17 (IST)01 Aug 2019
  ரயில்வே துறை அமைச்சரை சந்தித்த தேனி எம்.பி.

  தேனி எம்.பி. மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகனுமான ரவீந்திரநாத் குமார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியுள்லார். அப்போது மதுரை – போடி மார்க்கத்தில் நடைபெற்று வரும் அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்கவும், திண்டுக்கல் – சபரிமலை இடையே புதிய ரயில் பாதையை உடனே தொடங்கவும் கோரிக்கை வைத்துள்ளார். 

  17:13 (IST)01 Aug 2019
  நீட் மசோதா தீர்மானம் குறித்த வழக்கு – ஆகஸ்ட் 13ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

  நீட் மசோதா தொடர்பான தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரத்தை  சட்டசபைக்கு கூட தெரிவிக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மசோதாவை திருப்பி அனுப்பியது தங்களுக்கு தெரியாது என அமைச்சரோ, செயலாளரோ கூற முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  16:54 (IST)01 Aug 2019
  கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேருக்கு வீடு

  கடந்த வருடம் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களை உலுக்கி எடுத்த கஜா புயலின் கோரத்தில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சம் நபர்களுக்கு வீடுகளுடன் கூடிய வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் 3 செண்ட் வரையில் நிலங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  16:42 (IST)01 Aug 2019
  நீட் விவகாரம் : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதை ஏன் சட்டசபையில் கூட அறிவிக்கவில்லை

  நீட் விலக்கு வேண்டும் என்று தமிழகம் மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பியது தமிழக அரசு. ஆனால் அதனை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனை சட்டமன்றத்தில் கூட ஏன் விவாதிக்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக தங்களுக்கு தெரியாது என அமைச்சரோ, செயலாளரோ கூற இயலாது என்று நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார்.

  16:32 (IST)01 Aug 2019
  மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் தூத்துக்குடியில் கைது

  மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். சரக்கு கப்பல் வழியாக அந்நாட்டில் இருந்து வெளியேறி தூத்துக்குடி துறைமுகத்தில் கரையிறங்கியுள்ளார். கரையிறங்கிய அவரை இந்திய உளவுத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

  16:24 (IST)01 Aug 2019
  அயோத்தி விவகாரம்

  அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விவகாரத்தில் சமரசக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மூடி, முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இவ்வறிக்கையின் மீதான விசாரணை நாளையில் இருந்து துவங்குகிறது.

  16:22 (IST)01 Aug 2019
  பத்மஸ்ரீ விருதுகள் : தகுதியானவர்களை மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்

  பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காண மாநில அரசுகள் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும், பெண்கள், ஏழைகள், தலித்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

  16:00 (IST)01 Aug 2019
  தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது குறித்து 9, 10 தேதிகளில் ஆலோசனை கூட்டம்

  திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் நெல்லை மற்றும் தென்காசியில் வருகின்ற 9 மற்றும் 10 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  15:57 (IST)01 Aug 2019
  குழந்தைகள் விற்பனை வழக்கு : அமுதவள்ளிக்கு ஜாமின்

  ராசிபுரத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்து வந்த அமுதவள்ளி, அவருடைய கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 4 பேர் ஜாமீன் கேட்டு நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், 4 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நீதிமன்றம்.

  15:52 (IST)01 Aug 2019
  டெல்லியில் முதல் 200 யூனிட் மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை

  டெல்லியில் முதல் 200 யூனிட் மின்சார பயன்பாட்டிக்கு கட்டணம் ஏதும் இல்லை என்று அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளார்.   250 யூனிட் வரையான பயன்பாட்டிற்கு மின்சார கட்டணம் ரூ. 252 மட்டுமே. 300 யூனிட் மின்சார பயன்பாட்டிற்கு ரூ. 526 செலுத்தினால் போதும். அதே போன்று 400 யூனிட் வரையான மின்சார பயன்பாட்டுக்கு ரூ. 1075 – ஐ கட்டணமாக செலுத்தினால் போதும் என்று அவர் அறிவித்துள்ளார்.

  15:05 (IST)01 Aug 2019
  வேலூர் தேர்தல் : மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்

  வேலூரில் வருகின்ற திங்கள் கிழமையன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார் முக ஸ்டாலின். அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது என்று வந்த புகாரின் அடிப்படையில்  தேர்தல் நடத்தும் அதிகாரி சுஜாதா தலைமையிலான அதிகாரிகள் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். 

  14:50 (IST)01 Aug 2019
  உன்னாவ் பாலியல் வழக்கு விவகாரம்

  உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தையும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் அனைத்து வழக்குகளையும் 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதிரடியாய் அறிவித்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

  14:47 (IST)01 Aug 2019
  நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிட தடை

  ஜூன் மாதம் பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் நடிகர் சங்க தேர்தல்கள் நடைபெற்றன. பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகள் களம் இறங்க கடைசி நிமிடம் வரை பரபரப்பாகவே இருந்தது இந்த தேர்தல். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின் நடிகர் சங்க தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரனை செய்த சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

  14:27 (IST)01 Aug 2019
  முஸ்கான் – ரித்திக் கொலை வழக்கு

  2010ம் ஆண்டு கோவையின் முஸ்கான் மற்றும் அவருடைய தம்பி ரித்திக் ஆகியோரை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்தி கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கின் விசாரணையின் போது முக்கிய குற்றவாளியான மோகன கிருஷ்ணன் காவல்துறையிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்த போது என்கௌண்டரில் கொல்லப்பட்டார். மற்றொருவரான மனோகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் மனோகரன். குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக ஒரே வாக்கியத்தில் என்று ஒற்றை வரியில் தீர்ப்பினை வெளியிட்டுள்ளனர் நீதிபதிகள்.

  14:02 (IST)01 Aug 2019
  நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த உடன் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும்

  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில் அடுத்த தலைவர் யார் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்க நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன. இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த உடன் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். அதில் தலைவராக யார் செயல்படுவார் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

  13:53 (IST)01 Aug 2019
  சித்தார்த்தா தற்கொலை : மக்களவையில் விவாதிக்க கோரிக்கை வைத்த திரிணாமுல் காங்கிரஸ்

  கஃபே காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலையை உருவாக்கிய நிலையில், அவரின் தற்கொலை குறித்து விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. 

  13:43 (IST)01 Aug 2019
  ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா

  ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பெண்கள், முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

  13:08 (IST)01 Aug 2019
  3 காவலர்கள் சஸ்பெண்ட்

  உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு இந்த வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிஐ விடுத்த 30 நாள் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

  12:24 (IST)01 Aug 2019
  தமிழக அரசு ஆணை வெளியீடு

  சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள், 100 தரைப்பாலங்கள் கட்டப்பட உள்ளன.

  12:19 (IST)01 Aug 2019
  கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

  12:11 (IST)01 Aug 2019
  குழந்தைகள் விற்பனை வழக்கில் 4 பேருக்கு ஜாமின்

  ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் 4 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதில், செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, இவரின் கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் லீலாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இவர்களுக்கு ஜாமின் வழங்கி, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லதா உத்தரவிட்டுள்ளார். 

  11:42 (IST)01 Aug 2019
  உனாவ் வழக்கு

  உனாவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லக்னோவில் இருந்து பகல் 12-க்குள் வர இயலாது என்ற அரசு தலைமை வழக்கறிஞரின் விளக்கத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

  11:07 (IST)01 Aug 2019
  ரவிக்குமார் எம்.பி-யின் கோரிக்கை

  ரூபாய் நோட்டில் இந்தியாவின் முதல் ஆசிரியை  சாவித்ரிபாய் புலேவின் உருவத்தை ரூபாய் நோட்டில் அச்சிட ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்

  10:50 (IST)01 Aug 2019
  கோவை சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமை வழக்கு

  கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் முஸ்கான் என்ற சிறுமியும், அவளது தம்பியும் கடந்தப்பட்டனர். சிறுவனை கொலை செய்து விட்டு, சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். இதில் இருவர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு, ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதி மன்றம், மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளி உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி மனோகரனின் மரண தண்டனையை தற்போது உறுதி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்

  10:25 (IST)01 Aug 2019
  கஃபே காஃபி டே-வின் இடைக்கால தலைவர்

  கஃபே காஃபி டே-வின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதைத் தொடர்ந்து, கஃபே காஃபி டே குழுமத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

  10:16 (IST)01 Aug 2019
  பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

  2018-19ம் ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விவரங்களை ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க ஆதி திராவிடர் நல இயக்ககம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

  09:53 (IST)01 Aug 2019
  சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி

  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதற்கான  ஒலிம்பிக் தீபம் இன்று ஏற்றப்பட்டது.

  09:32 (IST)01 Aug 2019
  விஜய் ரசிகர் புழல் சிறையில் அடைப்பு

  தீவிர விஜய் ரசிகரான ரோஷன் மற்றும் தீவிர அஜித் ரசிகரான உமா ஷங்கர், இருவரும் மாறி மாறி நடிகர்களை தரக்குறையாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த ரோ‌ஷன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உமா சங்கரை வெட்டியுள்ளார். இதனையடுத்து உமா சங்கரை முகாமில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ரோஷன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

  09:03 (IST)01 Aug 2019
  சீனியம்மாளை தேடும் பணி தீவிரம்

  நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் கார்த்திக்கேயன் என்பவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கார்த்திகேயனின் தாயாரும், தி.மு.க. பிரமுகருமான சீனியம்மாள் தலைமறைவாகி விட்டார். எனவே, சீனியம்மாளை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். 

  09:00 (IST)01 Aug 2019
  விமானம் ரத்து

  கனமழை காரணமாக குஜராத்தின் வதோதரா விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி வரை வதோதரா விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

  08:44 (IST)01 Aug 2019
  சரத்குமார் மனு

  புதிய கல்வி கொள்கையில் சில மாற்றங்கள் குறித்த கோரிக்கை மனுவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து வழங்கினார்.

  08:32 (IST)01 Aug 2019
  இனி சிலிண்டருக்கு மானியம் கிடைக்குமா?

  வழக்கமாக மானியம், மானியமில்லாத சிலிண்டரின் விலை பற்றி இந்தியன் ஆயில் நிறுவனம் குறிப்பிடும். இந்த முறை இந்தியன் ஆயில் நிறுவன இணையத்தில் மானிய சிலிண்டரின் விலை பற்றி அறிவிப்பு இல்லை. ஆகவே இனி சிலிண்டருக்கு மானியம் வருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

  08:24 (IST)01 Aug 2019
  சென்னையில் தீ விபத்து

  சென்னை மண்ணடியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு. தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். 

  08:18 (IST)01 Aug 2019
  நின்ற கோலத்தில் அத்திவரதர்

  நேற்றுவரை சயன கோலத்தில் காட்சியளித்து வந்த காஞ்சிபுரம் அத்திவரதர், இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். 40 வருடங்களுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதரை காண பக்தர்கள் படையெடுத்துச் செல்கின்றனர். இதுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

  Tamil Nadu news today live updates: பொதுமக்கள் ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. காலி பாக்கெட்டை சில்லறை வணிகர்கள், விற்பனை நிலையங்கள், முகவர்கள், பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து பாக்கெட் ஒன்றுக்கு ரூ.10 பைசா பெற்றுக்கொள்ளலாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இஞ்ஜினியரிங் கவுன்சிலிங்கின் இறுதி நிலவரப்படி இந்த ஆண்டு 82 ஆயிரத்து 595 மாணவர்கள், பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 89 ஆயிரத்து 405 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 82 ஆயிரத்து 595 இடங்கள் நிரம்பி உள்ளன. கடந்த ஆண்டு 82 ஆயிரத்து 249 இடங்கள் நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 346 இடங்கள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

  Web Title: Tamil nadu news today live updates politics entertainment sports bigg boss dmk aiadmk athivaradar