Tamil Nadu news today updates: தமிழகத்தில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும், அரசியல், வானிலை, சினிமா, விளையாட்டு, வர்த்தகம் என பலதரப்பட்ட செய்திகள் குறித்த அப்டேட்டுகளையும் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Tamil Nadu news today live updates: 10% இட ஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
Blog
Tamil Nadu and Chennai news today updates of Politics, Sports, Entertainment, Bigg Boss, weather, traffic, train services and airlines
இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Tamil Nadu news today updates: காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓன்பது நாட்களில் மட்டும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ள நிலையில், இதுவரை தரிசன நேரம் காலை 5 மணி தொடங்கி மாலை 5 மணி வரையாக இருந்தது. இந்நிலையில், பக்தர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, இனி அத்திவரதரை காலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் . 12ஆம் தேதி மாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் குடியரசுத்தலைவர் அத்திவரதரை தரிசிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விழாவான அத்திரவரதர் வழிபாட்டிற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
Highlights
இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான இயக்குனர் அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு அமீர் அணியின் சார்பிலே இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் தாக்கல் செய்த விண்ணப்பமும் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி அணி மற்றும் அமீர் அணி போட்டியிட்ட நிலையில் அமீர் அணியின் 2 விண்ணப்பங்களும் நிராகரிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல, எம்.எல்.ஏக்கள் 10 பேரும் மீண்டும் மும்பை செல்கின்றனர் என எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ள தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை தள்ளிவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிமாறுதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது, யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என அதிருப்தி எம்எல்ஏக்களுடனான சந்திப்புக்கு பின் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி அளித்துள்ளார். மேலும், ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன். இந்த ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா? அல்லது தானாக எடுத்த முடிவா? என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன், ஜனநாயக முறைப்படி செயல்படுவேன். ராஜினாமா குறித்து விளக்கம் அளிக்குமாறு, எம்எல்ஏக்களுக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன், ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள் எனவும் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
குரூப் 3, குரூப் 4 போன்ற அரசுப் பணிகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாகத்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சக்கரைசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்ற நிலையில், தமக்கு கூடுதல் கல்வித் தகுதி என்று கூறி, பணி நிராகரிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம், கூடுதல் கல்வித் தகுதி உடையவர்கள் பணி கிடைத்தவுடன்,முறையாக பணியாற்றுவதில்லை என்று தெரிவித்தார். மேலும் உயர் அதிகாரிகளும், அவர்களை வேலை வாங்க சிரமப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார். இதனால், குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை 12 வாரங்களுக்கு நிர்வாகத்துறை முதன்மை செயலர் நிர்ணயம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு 224 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 119பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், க்றிஸ் வோக்ஸ், அடில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அணுசக்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவிலேயே முதன்முறையாக பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. 2 கி.மீ தூரத்திற்கு மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது" என்று தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் திருடப்படுவதை தடுக்க இதுநாள் வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வருகின்ற ஜூலை 22ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினுடன், திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி வில்சன், எம்.பி. சண்முகம், மற்றும் வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) தற்போது திமுக முன்னாள் தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ப்ளாஸ்டிக் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. ப்ளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழகத்தின் ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களாவை எம்.பிக்கான சான்றிதழை பெற்றபிறகு வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வைகோ அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் எனக்கான வாய்ப்பை பயன்படுத்துவேன் என்றும், மதசார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவாவை எதிர்ப்பேன் என்றும் பேசியுள்ளார்.
ரூ.456 வரை தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.57 உயர்ந்து ரூ. 3,327க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ. 456 அதிகரித்து 26,616க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 5ம் தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின் படி தங்கத்தின் இறக்குமதி வரி 2.5% அதிகரித்து 12.5% ஆக உயர்ந்துள்ளது இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என்று அறிவித்துள்ளனர்.
18ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திமுக சார்பில் தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணி ஒப்பந்தம்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன் வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணி ஒப்பந்தம் படி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். காலியிடமும், வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சரியாக இருப்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன்.
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் நான் என்றும் செயல்படுவேன். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்னை நேரில் சந்தித்து முறையான விளக்கம் அளிக்கட்டும். அதனை கேட்டு அதன் பின்பு நான் முடிவெடுக்கின்றேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ரமேஷ் குமார். இந்நிலையில் தற்போது பெங்களூரு திரும்புவதற்காக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை விமானநிலையம் வந்தடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் ஆளும் மஜத + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களின் ராஜினாமா கடிதங்களாஇ கொடுத்தனர் எம்.எல்.ஏக்கள். இதனால் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் முறையான நேரத்தில் சபாநாயகர் முடிவினை எடுக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் அந்த எம்.எல்.ஏக்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் ராஜினாமா விவகாரத்தில் என்னை நிர்பந்திக்க உச்ச நீதிமன்றத்துக்கு உரிமையில்லை என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள் என்னை சந்திக்காமல் உச்சநீதிமன்றத்தை ஏன் நாடினார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான இந்த ஆட்டத்தில் டாஸை வென்றது ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்திற்கு எதிராக அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த ஆட்டத்தின் லைவ் அப்டேட்களை பெற
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் அவர்களின் பணிக்காலம் வருகின்ற 24ம் தேதியுடன் முடிவடைவதால் மோடியிடம் சென்று வாழ்த்துகளை பெற்றார்.
நாடாளுமன்றத்தில் இன்று பேசிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, மத்திய அரசு ஏன் எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே பெயர் வைக்கின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் PM Sadak Yojana என்று ஆங்கிலத்தில், தமிழாக்கம் இல்லாமல் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார்
ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து திமுக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தினை நடத்த உள்ளது. 15ம் தேதி மாலை 5 மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் இன்று பிற்பகலில் தொடங்கும் என சட்டமன்றத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். ரயில் மூலமாக சென்னை வில்லிவாக்கம் சென்றடையும் குடிநீர் முறையாக விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஏ.சி.சண்முகம். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத் தக்கது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேச துரோக வழக்கில், ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்க கூடாது என சசிகலா புஷ்பா எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ பேசி வருகிறார் என்பதையும் குறிப்பிட்டு, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ 456 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 26,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது..
சென்னைக்கு நாளை முதல் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் என தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பஞ்சத்தையடுத்து, இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29% ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் மகனுடன் காஞ்சிபுரத்திலுள்ள அத்தி வரதரை தரிசித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை - அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு..
அழகுமுத்துகோன் பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை..
மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம். இவரை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு உத்தரவிட்டுள்ளது