இன்றைய செய்திகள்: அமைச்சரை விமர்சித்தற்காக திமுகவினர் கைது தொடர்ந்தால், மக்களைத் திரட்டி போராடுவேன் – ஸ்டாலின்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.56க்கும், டீசல் ரூ.70.47க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

By: Jan 27, 2020, 10:54:09 PM

Tamil nadu news today updates Wuhan virus : வுஹானில் பரவி வரும் வைரஸ் நோய் தொற்றினால் இதுவரை 59 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுஹானில் பரவி வரும் கொரோனாவைரஸ் நோய் தொற்று சீனாவில் துவங்கி உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் பீதியை கிளப்பி வருகிறது. விமான நிலையங்களில் கண்காணிப்பு ஏற்பாடுகளும், மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் 2000 பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும், அதில் 59 உயிரிழந்துள்ளனர் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (China’s National Health Commission)  அறிவித்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

இந்தியாவில் நோய் தொற்று இல்லை

137 விமானங்கள் மூலம் சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 29,707 பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 26ம் தேதி சோதனை செய்யப்பட்ட 4359 பயணிகளிடமும் நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்துள்ளது இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

சி.ஏ.ஏவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் தீர்மானம்

இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையின மக்களுக்கு மட்டும் இந்தியாவில் குடியுரிமை வழங்கும் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கேராளாவில் 620 கிலோ மீட்டர் நீளத்திற்கு மனித சங்கிலி ஊர்வலம் நடத்தப்பட்டது. தற்போது ஐரோப்பிய யூனியனில் சில உறுப்பு நாடுகள் சி.ஏ.ஏ மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Live Blog
Tamil nadu news today updates Wuhan virus : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:06 (IST)27 Jan 2020
அமைச்சரை விமர்சித்தற்காக திமுகவினர் கைது தொடர்ந்தால், மக்களைத் திரட்டி போராடுவேன் - ஸ்டாலின்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்ததற்காக திமுகவினர் கைது செய்யப்படுவது தொடர்ந்தால் நானே கோவையில் மக்களைத் திரட்டி போராடுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

21:04 (IST)27 Jan 2020
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த வழக்கில் 8 பேர் கைது

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர்.

20:21 (IST)27 Jan 2020
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 11 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. படகையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

19:48 (IST)27 Jan 2020
சென்னை கிழக்கு கடற்கரையில் விதிமீறல் கட்டிங்கள் எத்தனை? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில், உயரலை எழும்பும் இடங்களில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எத்தனை என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி மற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

19:43 (IST)27 Jan 2020
அழகிரி பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டியில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படம்; திமுக அதிருப்தி

மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற 30-ம் தேதி அவருடைய ஆதரவாளரகளால் கொண்டாடப்படுகிறது. மு.க.அழகிரியை வாழ்த்தி அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள், திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியை மீட்க வா, வெற்றிடத்தை நிரப்பு, சன்னின் சன்னுக்கே தடையா?, ராசியானவர், துரோகம் போன்ற வாசகங்கள் அடங்கிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

19:02 (IST)27 Jan 2020
தற்போதைய பிரச்னைகள் குறித்து ரஜினி கருத்து கூறாதது ஏன்? - கார்த்தி சிதம்பரம் கேள்வி

சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதமபரம் அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்: புகழ்மிக்க தலைவர்களை முழுமையாக அறியாமல், ஓரிரு நிகழ்வுகளை வைத்து, ரஜினிகாந்த் விமர்சிப்பது தவறு. பொது வாழ்க்கைக்கு வர விரும்பும் ரஜினிகாந்த், தற்போதைய குடியுரிமை சட்டம், பாபர் மசூதி குறித்து கருத்து கூறாமல், 50 ஆண்டுகளுக்கு முந்தையை சம்பவத்தை கிளப்பி, சர்ச்சையை ஏற்படுத்துவது பொருத்தமாக தெரியவில்லை என்று கூறினார்.

18:50 (IST)27 Jan 2020
2021 - ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இதையடுத்து, 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கடந்த காலங்களில் காகித முறையில் நடைபெற்று வந்த கணக்கெடுப்பு பணி இந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:47 (IST)27 Jan 2020
திருச்சி பாஜக நிர்வாகி முன்விரோதமாக கொலை; மதத்தின் பெயரால் நடைபெறவில்லை - ஐ.ஜி அமல்ராஜ்

மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ்: திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு தனிப்பட்ட முன்விரோதத்தால் கொலை; மதத்தின் பெயரால் கொலை நடைபெற்றதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

18:18 (IST)27 Jan 2020
யாராவது தூக்கிலிடப்படுகிறார் என்‌றால் அதைவிட அவசர ‌வழக்கு இருக்க முடியாது - தலைமை நீதிபதி

யாராவது ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்‌றால் அதுதொடர்பான வழக்கைவிட வேறு அவசர ‌வழக்கு எதுவும் இருக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பா‌ப்டே தெரிவித்துள்ளார்.

18:12 (IST)27 Jan 2020
பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக மத்திய பாஜக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

17:49 (IST)27 Jan 2020
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைக்கேடுகள்

2017 ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விலும் முறைகேடு...?  ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 6 மையங்களில் 37 பேர் தேர்வு எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள திருக்குமரன் தேர்வானதும் இந்த மையத்தில் தான்

17:15 (IST)27 Jan 2020
பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி புகார்

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவலர்கள் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தேசிய மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

16:50 (IST)27 Jan 2020
பிரக்ஞானந்தா சாதனை

18-ஆவது ஜிப்ரால்தா் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டா் ஆா்.பிரக்ஞானந்தா முன்னாள் உலகச் சாம்பியனான வெஸ்லின் டோபலோவை வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

16:38 (IST)27 Jan 2020
நிர்பயா பாலியல் வழக்கு

நிர்பயா வழக்கு குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம். சாட்சியம் அளித்த நபரின் தகவல் நம்பகத்தன்மையற்றது என பவனின் தந்தை சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

16:29 (IST)27 Jan 2020
தேர்வுத்துறை உத்தரவு

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் உள்ளிட்ட பொருட்களை வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்ப வேண்டும் என மாவட்ட அரசுத் தேர்வு உதவி இயக்குநர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

16:07 (IST)27 Jan 2020
கன்னியாகுமரியில் 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். 

15:33 (IST)27 Jan 2020
பேனர் விவகாரம் - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சட்ட விரோத பேனர் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்? என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. சட்ட விரோத பேனர் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? என்பதை ஆராய்ந்து, உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

15:23 (IST)27 Jan 2020
திமுக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை திமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தஞ்சையிலும் நாளை போராட்டம் நடத்த திமுக அனுமதி கேட்டிருந்தது. 

14:34 (IST)27 Jan 2020
நீட் தேர்விலிருந்து பின் வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள்

"மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு மட்டுமே என்பதிலிருந்து பின்வாங்க போவதில்லை" என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளது. நீ்ட் தேர்வை கட்டாயமாக்கியதை எதிர்த்து வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

14:10 (IST)27 Jan 2020
பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச முயற்சித்த விவகாரத்தில் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

13:51 (IST)27 Jan 2020
பிப்ரவரி மூன்றாம் தேதி ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

அறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினத்தின் போது சென்னையில் அமைதி பேரணி நடைபெறும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளது. அமைதியாக பேரணி சென்று அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13:48 (IST)27 Jan 2020
கொரோனா வைரஸ் தொடர்பான உதவிகளைப் பெற !

கொரோனா வைரஸ் நோய் தொடர்பான உதவிகளை பெற 9111-23978046 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஏதும் இல்லை என அறிகுறி இல்லை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

12:51 (IST)27 Jan 2020
மாநில சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார் கவர்னர் - ரமேஷ் சென்னிதலா

கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, ”கேரள முதல்வர் பினராயி விஜயன், நரேந்திர மோடிக்கும் அமித் ஷாவுக்கு ஏஜெண்ட்டாக பணியாற்றுகிறார் கவர்னர் என்றும், அவர் மாநில சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

12:51 (IST)27 Jan 2020
என்.ஆர்.சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் இடம்பெறவில்லை

அசாம் குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் இடம்பெறவில்லை என புகார்  எழுந்துள்ள நிலையில்  இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

12:40 (IST)27 Jan 2020
தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என முக ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என முக ஸ்டாலின் பேச்சு

11:54 (IST)27 Jan 2020
திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு படுகொலை

மக்கள் நடமாட்டமிக்க காந்தி மார்க்கெட்டில் பாலக்கரை மண்டல பாஜக செயலளார் விஜயரகு படுகொலை செய்யப்பட்டுள்ளார். விஜயரகுவை ஏற்கனவே மிட்டாய்பாபு என்பவர் கொலை செய்ய முயன்று சிறை சென்றார். சமீபத்தில் வெளியே வந்த அவர் விஜயரகுவை கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் ஹெச். ராஜா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். 

11:51 (IST)27 Jan 2020
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மௌனமாக உள்ளது

மாநிலங்களின் உரிமை பறிபோவதை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மௌனமாக உள்ளது என்றும் திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.

11:45 (IST)27 Jan 2020
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் மேல்முறையீடு மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது உச்சநீதிமன்றம். வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் முறையிட முகேஷின் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்.

11:42 (IST)27 Jan 2020
பெரியார் பூமியில் காவி மலராது - கார்த்தி சிதம்பரம்

பெரியார் பூமியான தமிழகத்தில் காவி மலராது என்றும், தமிழகத்தில் காவியை உள்ளே புகுத்துவதற்கு பாஜகவிற்கு அதிமுக உடந்தையாக இருக்கிறது என்றும் கார்த்தி சிதம்பர்ம் கூறியுள்ளார்.

11:22 (IST)27 Jan 2020
மீண்டும் ரூ. 31 ஆயிரத்தை தொட்ட தங்கம்

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ. 31,008க்கு விற்பனையாகி வருகிறது.

11:02 (IST)27 Jan 2020
தஞ்சை பெரியகோவிலில் குடமுழுக்கு நடத்த தடை

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்த தடை கோரி சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் இந்த கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக கூறியுள்ளார்.

10:39 (IST)27 Jan 2020
100% பங்குகள் விற்பனை - கபில் சிபில் கடும் விமர்சனம்

அரசிடம் பணம் இல்லை என்றால் அரசு இப்படி தான் நம்மிடம் இருக்கும் சொத்துகளை எல்லாம் விற்கும்.  வளர்ச்சி 5% க்கும் குறைவாக உள்ளது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிதி இன்னும் சரியாக சேர்க்கப்படவில்லை, நம்முடைய அரசிடம் பணம் இல்லாததால் அரசு இப்படி அனைத்தையும் விற்கிறது என கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வழக்கறிஞர் கபில் சிபில்

10:10 (IST)27 Jan 2020
ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்கப்படுகிறது - மத்திய அரசு

ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் 100%,ம், இணைப்பு நிறுவனமான AISATS-ன் 50% பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

10:08 (IST)27 Jan 2020
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 239 புள்ளிகள் சரிந்து 41,376-ல் வர்த்தகமாகி வருகிறது. மேலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 12,171-ல் வர்த்தகமாகி வருகிறது.

10:02 (IST)27 Jan 2020
வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளை விசாரிக்கும் என்.ஐ.ஏ

களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சமீமிடம் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் சென்னையிலிருந்து வந்துள்ள அதிகாரிகள், நாகர்கோவிலில் உள்ள நேசமணி நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

09:54 (IST)27 Jan 2020
செங்கல்பட்டு சுங்கச் சாவடி - 2வது நாளாக இலவச அனுமதி

நேற்று முன்தினம் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த வன்முறையில் அங்கிருந்த கணினிகள் சேதப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று இலவச அனுமதி வழங்கப்பட்டது. இன்றும் செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் 2வது நாளாக இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

09:50 (IST)27 Jan 2020
வெளியானது ஒமர் அப்துல்லா புகைப்படம் - வேதனையில் முக ஸ்டாலின்

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களில் ஒருவரான ஒமர் அப்துல்லா புகைப்படம் வெளியானது. இதனை பார்த்து வருத்தம் தெரிவித்த முக ஸ்டாலின், மெகபூபா முஃப்தியின் நிலை குறித்தும் அதிக கவலை கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். 

Tamil nadu news today updates Wuhan virus : 71வது குடியரசு தினம் நேற்று வெகு விமர்சையாக டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் கொண்டாடப்பட்டது. நேற்று நடைபெற்ற அணி வகுப்பில் டி.ஆர்.டி.ஓவின் ஏ-சாட் ஏவுகணையும், இந்திய விமானப்படையின் சினூக் கனஎடை தூக்கி ஹெலிகாப்டர்கள் மற்றும் அப்பாச்சி தாக்கும் ஹெலிகாப்டர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. ஏ-சாட் ஏவுகணையுடன் ஏர் டிஃபென்ஸ் டாக்டிக்கல் கன்ட்ரோல் ரேடாரின் (Air Defense Tactical Control Radar (ADTCR)) அணி வகுப்பும் நடைபெற்றது.

TNPSC group 4 malpractice

சென்னையை சேர்ந்த ஓம் காந்தன் என்பவரின் உதவியால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட தேர்வுத்தாள்களில் ஒரே நாள் இரவில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு உணவுக்காக நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து தேர்வுத்தாள்கள் திருடப்பட்டு, திருத்தப்பட்டு, காலை தேநீர் குடிப்பதற்காக  நிறுத்தப்பட்ட வாகனத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க : குரூப் 4 முறைக்கேடு : சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற சதி!

Web Title:Tamil nadu news today live updates wuhan virus kobe bryant tnpsc group 4 malpractice

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X