காவல்துறையில் இருப்பது போன்ற ஒரு கடினம் வேறு எந்தத் துறையிலும் இருக்க முடியாது. அதில் இருந்து அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அந்த நிலைமை புரியும். எத்தனையோ வீர தீர செயல்களையும், தியாகங்களையும் மக்களுக்காக நிறைவேற்றும் காவல்துறையின் நற்பெயர், சாத்தான்குளம் சம்பவத்தில் சின்னாபின்னமானது.
மேலதிகாரிகளின் பேராதரவு, கீழ்நிலையில் பணிபுரிபவர்களுக்கு இருந்ததால் வினை, சாத்தான்குளம் சம்பவம். எவரும் நம்மை கேள்விக் கேட்க முடியாது என்ற தைரியம், மாஜிஸ்திரேட்டையே மிரட்ட வைத்திருக்கிறது என்றால், இந்த நிலைமை எந்தளவுக்கு மோசமானது பாருங்கள்.
சந்தோஷப்படுவதா? இல்லை வருத்தப்படுவதா? சென்னையில் குறையும் கொரோனா.ஆனால்!
ஆனால், சிலர் செய்யும் தவறுகளுக்காக, சமூக பொறுப்பு, குடும்ப சுமை, மேலதிகாரிகளின் பணி உத்தரவுகள், எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் கேள்வியின்றி ஓட வேண்டும் என்று அல்லல்படும் காவலர்களுக்கும் சேர்த்து கெட்ட பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
அதன் எடுத்துக்காட்டே இந்த ஆடியோ பதிவு,
தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக நிருபர்கள் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் பழனி கார்த்திகேயன், தனது நண்பரும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரிடம், போக்குவரத்து காவலர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் தொலைபேசியில் பேசும் பழனி, "நான் தம்பி வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி டூ-வீலரில் வந்து கொண்டிருந்த போது, ஒரு எஸ்ஐ (அ) எஸ்எஸ்ஐ மற்றும் காவலர் ஒருவர் என்னை தடுத்து நிறுத்தினார்கள். நான் ஹெல்மெட்டும் போட்டிருந்தேன். என்னிடம் 'எங்கே போறீங்க'-னு கேட்டாங்க. நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்னு சொன்னேன். அதுக்கு, 'நீ வீட்டுக்காவது போ; எங்கயாவது போ'-ன்னு சொல்றார்" என்று கூறுகிறார்.
அதற்கு போக்குவரத்து ஆய்வாளர், 'நீ இன்ஸ்பெக்டர்-னு சொன்னியா?' என்று கேட்டதற்கு, 'நா இறங்கி போய் இன்ஸ்பெக்டர்-னு சொன்னேன். நான் இன்ஸ்பெக்டரா இருக்கட்டும்; யாரா இருக்கட்டும். பப்ளிக் கிட்ட இப்படியா பேசுறது?' என்று பதிலளிக்க, போக்குவரத்து ஆய்வாளர் அந்த குறிப்பிட்ட காவலரிடம் போனை கொடுக்கச் சொல்லி பேசுகிறார்.
3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்
அந்த காவலரிடம் 'உங்ககிட்ட எத்தனை தடவை தான் சொல்றது, பப்ளிக் கிட்ட இப்படி பேசாதீங்கன்னு? நமக்கு கிரைம் அங்கிள்-ல குற்றம் நடக்காம பார்த்தக்கணும். அதுதான் வேலை. அவரு ஹெல்மெட் போட்ருக்காரு, நின்னு பதில் சொல்றாரு, அவர்ட்ட இப்படி தான் பதில் சொல்றதா? யாரா இருந்தாலும், Polite-ஆ பேசுங்கன்னு தானே சொல்றோம். புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே நீங்க. போய் அவர்ட்ட சாரி கேளுங்க' என்று சொல்ல, சரி சார் என்கிறார் அந்த காவலர் பவ்யமாக.
யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த காவல்துறையும் கெட்ட பெயர் வாங்குகிறது என்று இதற்கு தான் சொல்ல வேண்டியுள்ளது. பொது மக்களிடம் தவறாக பேசும் சில போலீசாருக்கு மத்தியில், பப்ளிக்கிடம் மரியாதையா பேசச் சொல்லும் இவ்விரு இன்ஸ்பெக்டர்களும் நிச்சயம், மக்களின் கோபத்துக்கு அப்பாற்பட்டவர்களே.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil