scorecardresearch

ராஜ்யசபாவுக்கு திமுக வேட்பாளர்கள் யார், யார்? ஒரு இடத்தைக் கேட்கும் காங்கிரஸ்

Tamil Nadu News: தென் மாவட்டங்களில் திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக யாரும் இல்லை என சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

Tamil Nadu Rajya Sabha Election News: ராஜ்யசபாவுக்கு 3 புதிதாக 3 பேரை அனுப்ப திமுக தயாராகி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒரு இடம் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது. இந்த நெருக்கடியை தவிர்க்க திமுக துரிதமாக வேட்பாளர்களை அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்யசபாவில் தமிழகப் பிரதிநிதிகளாக இருக்கும் 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதிமுக.வின் விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், கே.செல்வராஜ், அண்மையில் பாஜக.வில் இணைந்த சசிகலா புஷ்பா, திமுக.வின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகியோரே அந்த 6 பேர்!


ராஜ்யசபா எம்.பி.க்களை அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள். தமிழகத்தில் இருந்து ஒரு ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு செய்யப்பட 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போதைய தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கைப்படி அதிமுக சுலபமாக 3 எம்.பி.க்களை தேர்வு செய்துவிட முடியும். திமுக.வும் காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்கள், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. ஆகியோர் துணையுடன் 3 எம்.பி.க்களை தேர்வு செய்யலாம்.

எம்.பி. பதவி கேட்கும் தேமுதிக! ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ அரசியலில் நிறைவேறுமா?

இரு தரப்பும் தலா 3 பேரை நிறுத்து போட்டியின்றி 6 எம்.பி.க்களை தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகம். இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 13, வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்!

கடந்த 2019 ஜூலையில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச. சண்முகம், வழக்கறிஞர் வில்சன், தேர்தல் கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் வைகோ ஆகியோர் அறிவிக்கப்பட்டார்கள். தேசத் துரோக வழக்கில் வைகோ ஓராண்டு தண்டனை பெற்றதால் அவரது மனு ஏற்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தபோது, மாற்று வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத் தாக்கல் செய்தார். பின்னர் வைகோ மனு ஏற்கப்பட்டதால், என்.ஆர்.இளங்கோ வாபஸ் பெற்றார்.

அப்போதே என்.ஆர்.இளங்கோவுக்கு வாக்குறுதி கொடுத்த அடிப்படையில், இப்போது அவருக்கு நிச்சயம் எம்.பி. சீட்டை திமுக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் பெற்ற திருச்சி சிவாவையும் மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்க இருக்கிறது திமுக. எனவே மீதமுள்ள ஒரு இடத்திற்குத்தான் திமுக.வில் போட்டி!

இந்த இடத்தை சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாவுக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் வழக்கறிஞர் ஜின்னா பெயரும் அடிபடுகிறது. தென் மாவட்டங்களில் திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக யாரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, சிலர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்கிற குரலும் திமுக.வில் இருக்கிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் இந்த சீட்டைப் பெற போராடுகிறது. ஏற்கனவே 2019 ஜூலையில் காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களும் திமுக.வின் ராஜ்யசபா வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த முறை ஒரு எம்.பி. பதவியை காங்கிரஸுக்கு கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. இதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.

ஆனால் தற்போதைய சூழலில் காங்கிரஸ் திமுக.விடம் அழுத்தம் கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை. எனவே திமுக.வின் முடிவே இறுதியானது. நெருடல்களைத் தவிர்க்கும் விதமாக விரைவிலேயே திமுக தனது வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துவிடும் என்கிறார்கள், அறிவாலயம் வட்டாரத்தில்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu rajya sabha election news dmk candidates