Tamil Nadu Social activist T. Mugilan Arrested Video : பிப்ரவரி மாதம் 15ம் தேதி காணாமல் போனவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி ஸ்டெர்லைட், மணற்கொள்ளை, மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களுக்கு எதிராக பல நாட்களாக குரல் கொடுத்து வந்தவர்.
பிப்ரவரி 15ம் தேதி சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு ரயில் ஏறினார். அதன் பின்பு 6 மாதங்களாக அவர் எங்கே சென்றார், என்ன ஆனார் என்பது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கூறி பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் தமிழக அரசுக்கு அழுத்தம் தந்து வந்தனர். இந்நிலையில் அவரை நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் பார்த்ததாக தகவல் வெளியானது. ஆந்திர காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் துவங்கியது.
மனித உரிமை ஆர்வலரான ஹென்றி திபேன் இந்த தகவலை உடனே தமிழக சி.பி.சி.ஐ,டிக்கு அனுப்பினார். தமிழக காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க காட்பாடியில் முகிலனை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைத்தனர் ஆந்திர காவல்துறையினர்.
முகிலன் மீது, கரூர் குளித்தலையில் இருந்து ஒரு பெண் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (பாலியல் பலாத்காரம்), 417 (ஏமாற்றுதல்), மற்றும் தமிழக அரசின் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுக்கும் சட்டம் 4ன் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்பு அந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : முகிலன் எங்கே? வலுக்கும் கேள்வி… துப்பு துலங்கியதாக சிபிசிஐடி தகவல்!