Tamil Nadu terror alert : தமிழகம் முழுவதும், தீவிரவாத அச்சுறுத்ததால் பலத்த காவல்த்துறை பாதுகாப்புகள் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறாது. லஷ்கர் - இ -தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 நபர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியானவுடன் மொத்த தமிழகத்துக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இருவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருவர் கைது
ஒருவர் கோவையை சேர்ந்தவர் மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர். இவ்விருவரையும் பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றது காவல்துறை. கேரள மாநிலத்தின் திருச்சூரை சேர்ந்த சந்தேகத்திற்கு இடமான ஒருவரை கேரள காவல்துறை கொச்சியில் கைது செய்தது. அவருடன் இவ்விரு நபர்களுக்கும் சந்தேகத்திற்கு இடமான வகையில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சூரில் கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்பு பஹ்ரைனில் பணியாற்றி வந்தார். தமிழகத்துக்குள் புகுந்த 6 நபர்களுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் மேலும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து கேரளா விரைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். தேசிய விசாரணை முகமை உறுப்பினர்களும் தங்களின் விசாரணையை தொடர்ந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
3 நாட்களாக காவல்துறையினர் மற்றும் கமாண்டோ படை பிரிவினரின் தீவிர முயற்சியால் கோவை மாநகரம் முழுமையாக காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இஸ்லாமிய அமைப்பினர் காவல் ஆணையரை சந்தித்து கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : கோவையில் 6 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவல்: தமிழ்நாட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு