Tamil Nadu total district counts : இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தில் மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்கும் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் முதல் தனி மாவட்டங்களாக அம்மாவட்டங்கள் செயல்பட துவங்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் என்பதால் அங்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேலும் 3 புதிய மாவட்டங்களை உருவாக்கும் எண்ணத்தில் புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது தமிழக அரசு.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்தது. தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்த்து தற்போது 37 மாவட்டங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் மூன்று புதிய மாவட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டால் தமிழகத்தில் மொத்தம் 40 மாவட்டங்கள் செயல்படும்.
எந்தெந்த பகுதிகள் பிரிக்கப்படுகிறது?
மிகவும் பெரிய மாவட்டங்களாக இருப்பதால் நிர்வாகத்தில் சில நேரங்களில் நெருக்கடிகள் உருவாவதால் இது போன்று புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் சேலத்தில் இருந்து எடப்பாடி ஆகியவை தனி மாவட்டங்களாக பிரித்து அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.