mandous cyclone path and tracking udpdates | Indian Express Tamil

Mandous Cyclone Highlights: மாண்டஸ் புயலுக்கு 5 பேர் உயிரிழப்பு

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் அதிகாலையில் கரையை கடந்தது. தொடர்ந்து நடைபெறும் விவரங்களை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் .

Cyclone Mandous
Cyclone Mandous

Tamil Nadu Weather Updates in Tamil: அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்படவுள்ளது. தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:16 (IST) 9 Dec 2022
மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டள்ளது.

21:34 (IST) 9 Dec 2022
பன்னாட்டு விமான சேவை ரத்து

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து 6 பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 27 உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

20:57 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

20:55 (IST) 9 Dec 2022
மாமல்லபுரத்தை நெருங்கும் புயல் : கடல் சீற்றம் அதிகரிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், மாமல்லபுரத்தை நெருங்கும் நிலையில், நள்ளிரவு கரையை கடக்கிறது. இதனிடையே மாண்டஸ் புயல் காணமாக வட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

20:26 (IST) 9 Dec 2022
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20:21 (IST) 9 Dec 2022
புயல் கரையை கடக்கும் நேரம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் முக்கிய அப்டேட்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “இன்று இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணிக்குள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

20:04 (IST) 9 Dec 2022
மாமல்லபுரத்தை நெருங்கும் ‘மாண்டஸ்’ புயல்

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

20:02 (IST) 9 Dec 2022
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை சார்ந்த பணிகளுக்கு நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

20:01 (IST) 9 Dec 2022
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தம்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை‌சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

19:16 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆய்வு

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

19:04 (IST) 9 Dec 2022
வெளியானது அஜித்தின் துணிவு சில்லா சில்லா பாடல்

அஜித்குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் துணிவு. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் முதல் சிங்கிள் டிராக் பாடல் சில்லா சில்லா வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

18:54 (IST) 9 Dec 2022
பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் மு.க. ஸ்டாலின் ஆய்வு

மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முக. ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

18:52 (IST) 9 Dec 2022
மெரினா கடற்கரையில் கடல்அலை சீற்றம்

மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.

18:26 (IST) 9 Dec 2022
அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெங்கு மழை பெய்யும்?

வண்டலூர், செய்யூர், குண்மிடிப்பூண்டி, திருக்கழுக்குன்றம், உத்தரமேரூர், அமைந்தகரை, அயனாவரம், செங்கல்பட்டு, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

18:12 (IST) 9 Dec 2022
கோடியக்கரையில் 200 அடி கடல் உள்வாங்கியது

மாண்டஸ் புயல் உருவாகியுள்ள நிலையில் நாகப்பட்டினம் கோடியக்கரையில் கிட்டத்தட்ட 200 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

18:01 (IST) 9 Dec 2022
மல்லிபட்டினத்தில் உள்வாங்கிய கடல்

மாண்டஸ் புயல் உருவாகியுள்ள நிலையில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மல்லிபட்டினம் துறைமுகத்தில் கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

17:54 (IST) 9 Dec 2022
சென்னை, மாமல்லபுரத்தில் கடல் அலைகள் சீற்றம்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, மாமல்லபுரத்தில் கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன.

இதுவரை 10-12 கி.லோ மீட்டர் வேகத்தில் மணிக்கு நகர்ந்துவந்த புயல் தற்போது மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது.

17:46 (IST) 9 Dec 2022
கள்ளக் குறிச்சி மாவட்டத்துக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

17:37 (IST) 9 Dec 2022
சென்னையை நெருங்கிய மாண்டஸ் புயல்

மாமல்லபுரத்தில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17:30 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல்.. மின்சாரம் நிறுத்தப்படுமா?

சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். மாண்டஸ் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மின்சார அறிக்கைகள் வெளியாகின. அதில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சார விநியோகம் அளிக்கப்படும்.

காற்று அதிகமாக வீசும் இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

17:05 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல் எதிரொலி: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

16:36 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல் எதிரொலி: அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், வேலூர், நீலகிரி, தென்காசி, விருதுநகர், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

16:33 (IST) 9 Dec 2022
சென்னை புறநகர் ரயில்கள் இயங்கும் – தெற்கு ரயில்வே தகவல்

மாண்டஸ் புயல் இரவு கரையைக் கடக்க உள்ள நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தகவல்

16:29 (IST) 9 Dec 2022
புயல் கரையைக் கடக்கும் வரை மக்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

புயல் கரையைக் கடக்கும் வரை மக்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்வி சான்றிதழ் ஆகிய முக்கியமானவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பால், காய்கறி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். முகாம்களில் பாதுகாப்பாக தங்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும்போது பாதிப்பு வரும்வரை காத்திருக்காமல் முன்கூட்டியே அங்கே போய் தங்கிக்கொள்ள வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் முகநூல், ட்விட்டர் பக்கங்களில் டி.என். ஸ்மார்ட் செயலியின் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி, தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும். எரிவாயு கசியாதபடி சிலிண்டரை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும்போது, ஜன்னல், வாசல் கதவுகள், சரியாக மூடப்பட்டுள்ளதா என உறுதி செய்துகோள்ளுங்கள். வீட்டின் மின் இணைப்பு, சுவிட்சுகள், அணைக்கப்பட்டதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பினிகள் உரிய மருந்துகளை தவறாமல் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட், குடிநீர், மருந்து அடங்கிய அவசர உதவிப் பெட்டகம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் கரையைக் கடக்க உள்ளதால், கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும், தேவையில்லாமல் சாலையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும், புயலை செல்ஃபி எடுப்பது தவிர்க்க வேண்டும்.

16:16 (IST) 9 Dec 2022
சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள புறநகர் ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது, மேலும் சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும்;

ரயில் பயணிகளுக்கான உதவி எண்கள்,

044-25330714; 044-25330952 – தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

16:12 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல்: கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

16:09 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல் காரணமாக வெறிச்சோடிய சென்னை இ.சி.ஆர் சாலை

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து குறைவாக உள்ளது. இதனால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் இ.சி.ஆர் சாலை, தற்போது மாண்டஸ் புயல் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

16:07 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல் எதிரொலி: கடல் கொந்தளிப்பால் கடல் நீரில் மூழ்கிய சாலைகள்

மாண்டஸ் புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரை சாலைகள் கடல் நீரில் மூழ்கி உள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

16:03 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல் எதிரொலி; நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

15:58 (IST) 9 Dec 2022
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

15:56 (IST) 9 Dec 2022
கனமழை: 15 மவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்… 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பொழியும் என தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் என 15 மாவட்டங்களுக்கு 15 மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

15:50 (IST) 9 Dec 2022
வேலூர், செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் ,செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

15:49 (IST) 9 Dec 2022
காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் டிச. 10-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் டிசம்பர் 10-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

15:45 (IST) 9 Dec 2022
சென்னையில் வீசும் பலத்த காற்று; ஜார்ஜ் கோட்டை தேசிய கொடி சேதம்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி சேதம் அடைந்தது.

15:42 (IST) 9 Dec 2022
மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்

மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

14:39 (IST) 9 Dec 2022
மாண்டஸ் புயல் – 25 விமான சேவை ரத்து!

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமானநிலையத்தில் 25 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14:36 (IST) 9 Dec 2022
அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்… எப்போது கரையை கடக்கும்?

நேற்று முதல் மக்களை அச்சுறுத்தி வரும் மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14:26 (IST) 9 Dec 2022
“மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும்”: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!

“மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும்.” என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

14:25 (IST) 9 Dec 2022
‘மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்’ – சென்னை காவல் ஆணையர்!

“மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்; தேவையான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கான குழுக்கள் என அனைவரும் தயாராக உள்ளனர்.

புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்.” என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

14:02 (IST) 9 Dec 2022
புதுச்சேரி – சென்னை இடையே பேருந்து சேவை ரத்து!

புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்காலுக்கு இயக்கப்படும் புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

13:37 (IST) 9 Dec 2022
1 1/2 கிமீ அணிவகுத்த கார்கள்!

சென்னை விமான நிலையத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை கார்கள் அணிவகுத்து நின்று வருகின்றன.

மல்டிலெவல் கார் பார்கிங்கில் செயல்படும் கட்டண சாவடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழையால் விமானத்தை தவறவிடக்கூடாது என முன்கூட்டியே வரும் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.

13:23 (IST) 9 Dec 2022
‘180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது’: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. “இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும். இன்று மதியம் முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். இன்று மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசும்

கரையை கடந்த 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும். இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.” என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

13:01 (IST) 9 Dec 2022
பேருந்துகள் இன்றிரவு இயங்காது

மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

13:01 (IST) 9 Dec 2022
ஆம்னி பேருந்துகள் இயங்கும்

ஆம்னி பேருந்துகள் இன்றிரவு வழக்கம்போல் இயங்கும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளார். “ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், வார இறுதிநாள் என்பதாலும், பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

12:37 (IST) 9 Dec 2022
3 ஏரிகள் திறப்பு

மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய 3 ஏரிகளில் இருந்து தலா 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

12:37 (IST) 9 Dec 2022
தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்கவும்; நீர் நிலைகள் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

12:27 (IST) 9 Dec 2022
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

11:52 (IST) 9 Dec 2022
அதி கனமழை எச்சரிக்கை

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது. இதனால் சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11:52 (IST) 9 Dec 2022
உள்வாங்கிய கடல்

தூத்துக்குடி பீச் ரோட்டில் சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

11:51 (IST) 9 Dec 2022
மயிலாடுதுறையில் கடல் சீற்றம்

மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்த்தில் 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுகிறது. வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Web Title: Tamil nadu weather news live updates on 07th december