Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா?- மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி
வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!
2014, 2019ம் ஆண்டு ஏமாந்ததை போல 2024-ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது.
INDIA கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா? இது தொடர்பாக சிறப்புக் கூட்டத்தில் விவாதித்தீர்களா அல்லது பதில் அளித்தீர்களா? Speaking for India Podcast மூலம் மு.க.ஸ்டாலின் உரை
அறிவுசார் விழாவை மணி அடித்து தொடங்கி வைத்த ரோபோ
வேலூர்: VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அறிவுசார் விழாவை மணி அடித்து தொடங்கி வைத்த ரோபோ! இவ்விழாவில் மாணவர்களே வடிவமைத்து உருவாக்கிய பல்வேறு வகையான ரோபோக்கள்,விண்ணில் ஆராய்ச்சி செய்யும் ரோவர்கள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றது!
அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியா முதலிடம்
ஐசிசி தரவரிசைப் பட்டியலின் ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற அதிமுக கோரிக்கை
தமி்ழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று கூட்டணி கட்சியாக அதிமுக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பின்போது கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! தற்காலிக உறுப்பினர்களுக்கும் மற்றும் இணை உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க உரிமை வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவந்து தீர்மானத்திற்கு சங்கங்களின் பதிவாளரிடம் ஒப்புதல் பெறாத நிலையில் தேர்தலை நடத்த முடியாது - நீதிபதி எம்.தண்டபாணி
பா.ஜ.க எம்.பி.க்கு கனிமொழி கடும் கண்டனம்
பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்கு கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நான் வன்மையாக கண்டிக்கிறேன், பாஜக எம்பி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். மக்களவையில் நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது சக எம்.பி ஒருவரை வெறுப்பூட்டும் வகையில் திட்டியதற்காக ரமேஷ் பிதுரி.
அவரது வார்த்தைகளை வெறும் அன்பார்லிமென்டரி மொழி என்று சிறுமைப்படுத்த முடியாது; அவை பாராளுமன்றத்தின் கண்ணியத்தை மிக மோசமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. மேலும், ஜனநாயகத்திற்கும் நமது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு மோசமான அவமதிப்பை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பழநி முன்னாள் எம்.எல்.ஏ
பழநி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தா. பூவேந்தன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்பு தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
பழநி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் திரு ஆயக்குடி தா. பூவேந்தன் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியாலும், தலைமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட @BJP4Tamilnadu தலைவர் அண்ணன் திரு @Palanikanagaraj… pic.twitter.com/ssI0lSm1t9
— K.Annamalai (@annamalai_k) September 22, 2023
நிலவில் விழித்தெழாத விக்ரம் லேண்டர்
“நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளி பட்ட போதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை. 14 நாள் உறக்கத்துக்கு பின் இன்று விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை” என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கோவையில் ஆதரவு பெருகுவதால் மீண்டும் போட்டியிட உள்ளேன் - கமல்ஹாசன் உறுதி
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: “கோவையில் ஆதரவு பெருகுவதால் அங்கே மீண்டும் போட்டியிட உள்ளேன். விக்ரம் படத்திற்கு வரும் கூட்டம் மக்கள் நீதி மய்யதிற்கு வராதா?” என்று கேட்டுள்ளார்.
அமித்ஷாவை சந்திக்க அ.தி.மு.க தலைவர்கள் டெல்லியில் முகாம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன்,
கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த மதசார்பற்ற ஜனதா தளம்
பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
ஆர்.எஸ். பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர் கோரிக்கை... சவுக்கு சங்கர் மனு நிராகரிப்பு
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தொடர அனுமதி கோரிய சவுக்கு சங்கரின் மனுவை நிராகரித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை ஆர்.எஸ்.பாரதி விமர்சித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகள் நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை எனவும், அது நீதிமன்ற அவமதிப்பு செயல் அல்ல எனவும் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு பேப்பரில் மட்டும் இல்லாமல் நடைமுறைக்கு வர வேண்டும் - லட்சுமி ராமகிருஷ்ணன்
திரைப்பட நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்: “நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வரவேற்க வேண்டிய ஒன்று. இது வெறும் பேப்பரில் மட்டும் இல்லாமல் நடைமுறைக்கு வர வேண்டும். பதவியில் இருக்கும் பெண்களுக்குப் பின்னால் அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு இல்லாமல் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் - ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு
திறன்மேம்பாட்டு நிறுவன முறைகேடு வழக்கில், சந்திரபாபு நாயுடு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி-யை அநாகரிகமாக பேசிய பா.ஜ.க எம்.பி. ரமேஷ் பிதுரி
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி தானிஷ் அலியை நாடாளுமன்றத்தில் மிகவும் மோசமான, இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி பா.ஜ.க எம்.பி, ரமேஷ் பிதுரி அநாகரிகமாக பேசியுள்ளார். பா.ஜ.க எம்.பி.யின் பேச்சு, இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ரமேஷ் பிதுரியைக் கண்டித்து, அப்பேச்சை சபாநாயகர் ஓம் பிர்லா அவைக் குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். பா.ஜ.க தலைமையும் ரமேஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐ போன் 15: இந்தியாவில் விற்பனை தொடக்கம்
இந்தியாவில் ஐ போன் 15 சீரிஸ் மாடல் போன்களின் விற்பனை தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கே ஐ போன் விற்பனையக வாசலில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்: பயனாளிகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து கடிதம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
"இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும். கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.
இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை" என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரும் சந்திரபாபு மனு தள்ளுபடி
திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு மனு அளித்த நிலையில், அவரது மனுவை ஆந்திர விஜயவாடா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதான முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தற்போது சிறையில் உள்ளார். சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு அளித்தனர். இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
புதுச்சேரி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணி
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த நிலையில், மீனவர்களை தடுத்து நிறுத்திய காரைக்கால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீனவ பிரதிநிதிகள் மட்டும் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழக்கினார்கள். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தினார்கள்.
சாலை பணிக்கு தோண்டிய பள்ளம்: ஒருவர் உயிரிழப்பு
நாமக்கல்லில் சாலை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். அறிவிப்பு பலகை இல்லாததால் ஒருவர் உயிரிழக்க நேர்ந்த நிலையில், விபத்து குறித்து சாலை பணி ஒப்பந்ததாரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நடிகர் விஷால் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? என லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டத்தை விட மேலானவர் என நினைக்கிறீர்களா? உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? என்றும் விஷால் மீது நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றக்கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே விஷால் இவ்வாறு செய்கிறார் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் கொசு உற்பத்தி: ரூ. 500 அபராதம்
'டெங்கு காய்ச்சல் கொசு உற்பத்திக்கு காரணமானால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீதும் நடவடிக்கை பாயும்.
முதல்முறை நோட்டீஸ் வழங்கப்படும் - அதனை ஓரிரு நாளில் சரிசெய்ய வேண்டும். சரியாக கடைபிடிக்காவிட்டால், பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்' என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி: போலீசார் வழக்குப்பதிவு
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சம்பந்தப்பட்ட ஏசிடிசி நிறுவனம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த 10 ஆண்டுகளாகும் : ராகுல்
சிறப்பு கூட்டத்தொடரின் முதன்மை நோக்கமே மகளிர் இடஒதுக்கீடு மசோதா தான். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரை செய்ய வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த 10 ஆண்டுகளாகும் - ராகுல்காந்தி
சனாதன மாநாடு வழக்கு: உதயநிதி பதிலளிக்க வேண்டும்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசப்பட்டது என்ன? சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவு,
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது: முதல்வர்
மகளிர் இடஒதுக்கீடு : பிரதமர் பெரும் மிதம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு சிலர் அரசியல் சாயம் பூச முயற்சி செய்கின்றனர் யாருடைய சுயநலமும் மகளிர் இடஒதுக்கீட்டில் தடைகளை ஏற்படுத்த அனுமதித்ததில்லை - பிரதமர் மோடி
சென்னை, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்எல்ஏ-க்கள் சந்திப்பு ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனின் இருக்கைகளை மாற்றி அமைக்க கோரிக்கை எதிர்கட்சி துணை தலைவரை மாற்ற வேண்டும் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தல்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம்
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் மாநில திட்டக்குழு தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்பு காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
டெங்கு ஒழிப்பு பணிகளில் தினசரி 23,717 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 4,227 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்த அளவு தான் உள்ளது- பெசன்ட் நகர் சாலையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னையில் விநாயகர் ஊர்வலம்
சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
முழு செய்திக்கு: சென்னையில் 17 இடங்களில் விநாயகர் ஊர்வலம்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
இம்பால் மேற்கில் உள்ள சிங்ஜமேய் காவல் நிலையத்தில் நிலைமை சூடுபிடித்தது, அங்கு பொறுப்பான அதிகாரியின் இல்லமும் சேதப்படுத்தப்பட்டது. போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்ததில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.
முழு செய்தியும் படிக்க: மணிப்பூரில் மீண்டும் வன்முறை
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது iPhone 15
ஐ- போன் 15 சீரிஸ் போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்தது. ரூ.79,900 முதல் ரூ. 1,59,900 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Group-4 இளநிலை உதவியாளர் பணி: கலந்தாய்வு தேதி அறிவிப்பு
Group-4, இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஃபண்ட் பணிகளை தொடங்கியது ACTC நிறுவனம்
ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, ACTC ஈவண்ட் நிறுவனம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் பணியைத் தொடங்கியது.
உறக்கத்தில் இருந்து விழிக்கும் லேண்டர் மற்றும் ரோவர்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இன்று சூரியன் உதித்ததும் உறக்கத்தில் இருந்து விழிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரிய ஒளி பட்டதும் சோலார் பேனலின் மூலம் ஆற்றலை பெற்று மீண்டும் ஆராய்ச்சில் ஈடுபடும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
இப்போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டனாக விளையாடவுள்ள நிலையில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.
எந்தவித எதிர்ப்புமின்றி 171 வாக்குகளுடன் நிறைவேறியது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் பெண் எம்.பி.க்கள், புகைப்படம் எடுத்து கொண்டாடினர்.
மீண்டும் வெடித்த வன்முறை
மீண்டும் வன்முறை வெடித்ததால் மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.