கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு அனுமதி கொடுக்காதற்கு அரசியல் காரணமா என்பதை இங்குள்ள ஆளுநரிடம் கேட்டால் தான் அதன் உண்மையான தன்மை தெரியும். இந்த சட்டத்தில் என்ன குறைபாடுகளை பார்த்தார் என்பதை அவரிடம் கேட்டால் தெரியும். எந்த விதததிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு கூடாது என்பதுதான் அனைவரின் நிலைப்பாடு.
இதையும் படியுங்கள்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை திறப்பு; உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து மகிழ்கிறேன் – ஸ்டாலின் ட்வீட்
தெலுங்கானாவில் அரசாங்கம் முரண்பாடாக இருக்கிறது. கவர்னர் முரண்பாடாக இல்லை. என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றது. அவற்றை தாமதப்படுத்த வேண்டும் என்று இல்லை. சில விவரங்களை கேட்டு இருக்கின்றோம்.
தெலுங்கானாவில் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாவில் சில விவரங்களுக்காக நிறுத்தி வைத்து இருக்கின்றோம். அதில் சில மாற்றங்களுடன் கொண்டு வருகின்றனர். இது மக்களுக்கு பலன் கொடுக்கின்றதா என்பதை பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும். இவற்றை தாமதம் என்று எடுத்துகொள்வதை விட கால அவகாசம் என எடுத்து கொள்ள வேண்டும்.
அரசியல் காரணத்திற்காக தெலுங்கானாவில் எனக்கு கவர்னர் உரை மறுக்கப்பட்ட போதும், பட்ஜெட் தாக்கலுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை, மக்கள் நலனை அடிப்படையாக வைத்து நான் இயங்கி வருகின்றேன். ஆனால் என்னை புரிந்து கொள்ளாமல் சிலர் இங்கே விமர்சிக்கின்றனர், என்று கூறினார்.
மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். ஆளுநர்களை சந்திப்பதால் பல பிரச்சினைகள் தீர்ந்து இருக்கின்றது. தமிழக ஆளுநர் ஒருமதத்தை சார்ந்து பேசுகின்றாரா என தெரியவில்லை, மதசார்பற்ற தன்மையை தமிழக முதல்வர் கடைபிடிக்க வேண்டும், முதல்வர் வாழ்த்து சொல்வதில் பாரபட்சம் காட்ட கூடாது. இதற்கு பதில் கிடைப்பதே இல்லை என தமிழிசை குற்றம்சாட்டினார்.
மேலும், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் துணை அரசாங்கம் நடத்ததான் நினைக்கிறோம். இணை அரசாங்கம் நடத்த நினைக்கவில்லை. ஆளுநர் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர் என்றும் தமிழிசை கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil