தமிழிசை செளந்தரராஜன் vs அன்புமணி இடையிலான மோதல் அடுத்தகட்டத்தை எட்டுகிறது. நேரடி விவாதத்திற்கு தமிழிசை விடுத்த அழைப்பை அன்புமணி ஏற்றார்.
தமிழிசை செளந்தரராஜன் vs அன்புமணி இடையே ஜூன் 24-ம் தேதி ட்விட்டரில் மோதல் வெடித்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என தமிழிசை கேள்வி எழுப்பினார்.
To Read, தமிழிசை செளந்தரராஜன் vs அன்புமணி: அரசியல் மருத்துவர்களின் ஆவேச மோதல் Click Here
மருத்துவர் அன்புமணி அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘2008-ல் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினேன்’ என்றார். இதைத் தொடர்ந்து தமிழிசை குறித்து, ‘அரசியல் வரலாறு தெரியாதவர், அவரது பொது அறிவை அதிகப்படுத்திக்கொள்ள தகவல்’ என்கிற ரீதியில் விமர்சனங்களுடன் அன்புமணி சில ட்வீட்களை வெளியிட்டார்.
தமிழிசை அதற்கு பதிலடியாக, ‘அன்புமணி ஊழல் வழக்கில் நீதிமன்றம் சென்று கொண்டிருப்பவர், வாரிசு அரசியல் மூலம் பதவியை வாரிச் சுருட்டியவர், சாதியை வைத்து சாதிக்கிறவர்’ என்கிற ரீதியில் சில விமர்சனங்களை முன்வைத்தார்.
இதற்கிடையே சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை போராட்டம் தொடர்பாக டி.வி பேட்டி ஒன்றில் தமிழிசை, ‘மரம் வெட்டுவது பற்றி ராமதாஸ் பேசுகிறார்’ என விமர்சனம் வைத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக.வினர் சென்னையில் பாஜக தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சமூக வலைதளங்களில் தமிழிசை மீது கடுமையான விமர்சனங்களையும் பாமக.வினர் முன் வைக்கிறார்கள். தமிழிசையை கண்டிக்கும் விதமாக பாமக தலைவர் ஜி.கே.மணியும் ஒரு அறிக்கை விட்டார்.
இதற்கிடையே தன்னை பொது அறிவு இல்லாதவர் என்கிற ரீதியின் அன்புமணி விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, ‘யாருக்கு பொது அறிவு இருக்கிறது என்பதை அறிய அன்புமணி நேரடி விவாதத்திற்கு தயாரா?’ என சவால் விட்டார்.
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலை குறித்து இன்று சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திய அன்புமணி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், தமிழிசையின் சவாலை ஏற்றார். ‘ஜூன் 29-ம் தேதிக்கு பிறகு ஒரு தேதியை முடிவு செய்து இடத்தையும் குறிப்பிட்டால், தமிழிசையுடன் நேரடி விவாதத்திற்கு நான் தயார்’ என அன்புமணி அறிவித்தார்.
இதனால் 29-ம் தேதிக்கு பிறகு தமிழிசை-அன்புமணி நேரடி விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அப்படி ஒரு விவாதத்திற்கு போலீஸ் அனுமதி கொடுக்குமா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே பாமக அலுவலகம் முற்றுகை, சமூக வலைதளங்களில் தமிழிசைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் என களம் இறங்கியிருக்கும் பாமக.வினர் மேற்படி விவாத நிகழ்ச்சிக்கும் பெரும் அளவில் திரண்டுவிடும் வாய்ப்பு உண்டு.
அண்மையில் கோவையில் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் நடந்த விவாத மேடை நிகழ்ச்சியில் தமிழிசை, இயக்குனர் அமீர் ஆகியோர் பேசுகையில் சலசலப்பு எழுந்ததும், அது தொடர்பாக வழக்குகள் பதிவானதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை போலீஸ் அனுமதி கொடுத்து, தமிழிசை செளந்தரராஜன் vs அன்புமணி இடையே நேரடி விவாதம் நடந்தால் பரபரப்புக்கும் பதற்றத்திற்கும் பஞ்சம் இருக்காது.