அறத்தை சார்ந்த நல்லாட்சி வழங்குக்கூடியவர்களுக்கே ஆட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை இராமாயணம் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது என இலங்கை நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இலங்கை நல்லூரில் நடைபெற்ற யாழ் கம்பன் விழா 2023 நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டு உரையாற்றினார். தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்களின் முன்னிலையில், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையேயான கலாச்சார பிணைப்பை பற்றி அண்ணாமலை உரையாற்றினார்.
இதையும் படியுங்கள்: தனியார் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அசத்தும் கரூர்; மாவட்ட ஆட்சியரின் முன்மாதிரி முயற்சி
அண்ணாமலை தனது உரையில், இலங்கை மற்றும் இந்தியாவை கலாச்சார இரட்டையர் என்று சொல்கிறோம். நமக்கு இடையே ஆழ்ந்த பிணைப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் தலைமன்னாரில் உள்ள ராமர் பாலத்திற்கு சென்றேன். 1983ல் நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவது குறித்து, தூதரக அதிகாரிகளிடம் பேசினேன். பலாலி விமான நிலையம் உள்ள இடத்திற்கு ராமருக்கு பாலாலயம் (திருமுழுக்கு) செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக பெயர் வந்துள்ளது. பிரதமர் மோடி வழங்கிய 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியுடன் கட்டப்பட்ட திருக்கேத்தீஸ்வரம் கோயிலுக்கு சென்றேன். அது ராமன் பிரம்மகஸ்தி தோஷத்தை நீக்குவதற்காக பூஜை செய்த தலம்.
ராமர் பாலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில காலத்திற்கு முன் இராமேஸ்வரம் கோயிலுக்கு அபிஷேகம் செய்யக் கூடிய பால் தினமும் இலங்கையின் நெடுந்தீவில் இருந்து தான் வரும் என்று அங்குள்ள குருக்கள் கூறினார். நெடுந்தீவு என்பது அனுமர் சஞ்சீவினி மலையை தூக்கி வரும்போது அதிலிருந்து வீழ்ந்த ஒரு துகள். அத்தகைய மூலிகைத் தீவில் மேயும் பசுக்களிடமிருந்து மீண்டும் பால் கொண்டு வர வேண்டும் என அந்த குருக்கள் கேட்டுக் கொண்டார். அது விரைவில் நடக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அறத்தை சார்ந்த நல்லாட்சி வழங்குக்கூடியவர்களுக்கே ஆட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை இராமாயணம் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது. இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்குமான பிணைப்பு மேலும் இறுக்கமாக போகிறது. நிச்சயமாக தளர்வடையாது. 11 மாடி கட்டிடம் கொண்ட யாழ்பாண கலாச்சார மையம் போல், இந்தியாவில் எங்குமே கலாச்சார மையங்கள் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழர்களை நெஞ்சத்தில் சுமந்துக் கொண்டிருக்கிறார். அதற்கான நன்மைகளை வரும்காலத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாறு அண்ணாமலை உரையாற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil