திப்பு சுல்தான் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருக்கும்போது பேசிய வீடியோவைப் பகிர்ந்துள்ள ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜூபைர், பா.ஜ.க நிர்வாகி சி.டி ரவி வரலாற்று உண்மைகளை திரித்துக் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
முகமது ஜூபைர் பகிர்ந்துள்ள காணொளியில் அண்ணாமலை பேசியதாவது, நாம் இன்று திப்பு சுல்தான் ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம். அரசியல் ரீதியாக இது பல்வேறு வகைகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. இன்று நான் ஏன் கூறுகிறேன் என்றால்?
இதையும் படியுங்கள்: அம்பேத்கர் சிலை சேதம்: ’யாருக்குமே பாதுகாப்பில்லாத ஆட்சி’; இ.பி.எஸ் கண்டனம்
ஒருமுறை சிருங்கேரி மடத்தை திப்பு சுல்தானின் படைகள் தாக்கின. அங்கு சிறு சேதத்தை ஏற்படுத்தின. இதனால் மடத்தின் குருக்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து திப்பு சுல்தானுக்கு தாக்குதல் குறித்து மடத்தின் குரு செய்தி அனுப்பினார். நீங்கள் எங்கள் மடத்தை தாக்கியது தவறல்லவா? என்று கேட்டார்.
உடனே திப்பு சுல்தான் வருத்தம் தெரிவித்து, எங்களின் ஒரு படைப்பிரிவு, எமது உத்தரவு இல்லாமல் மடத்தை தாக்கியுள்ளது. நானே நேரில் வந்து உங்களைச் சந்தித்து மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார். இது பதிவுச் செய்யப்பட்ட வரலாறு.
பின்னர் திப்பு சுல்தான், மடத்தின் குருவை சந்தித்து சிருங்கேரி மடத்திற்கு 240 கிராமங்களைக் கொடுத்தார். தானும் எனது படையும் செய்த தவறுக்கு இந்த கிராமங்களை மடத்திற்கு அளிக்கிறேன் என்று கூறி, அந்த கிராமங்களில் இருந்து வரும் வருவாயை மடத்திற்கு அளிப்பதாகவும் கூறினார்.
அதுமட்டும் அல்ல, சிருங்கேரி மடத்தில் நவராத்திரி அன்று நடைபெறும் பூஜையில் தெய்வத்திற்கு சாத்தப்படும் கிரீடம் திப்பு சுல்தான் கொடுத்தது. இதனை நீங்கள் இன்று சென்றாலும் காணலாம். அது மிகப் பெரிய கீரிடம், அது மாணிக்கம், மரகதம், வைரம் மற்றும் தங்கத்தால் ஆனது.
அதேபோல், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு திப்புச் சுல்தான் சென்று, தங்கத்தை வாரி வழங்கினார். இப்போதும் மூகாம்பிகை கோயிலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பூஜை திப்பு சுல்தானின் பெயரால் நடைபெறுகிறது. இது திப்பு சுல்தானை கௌரவிக்கும் விதமாக செய்யப்படுகிறது. அந்தப் பூஜை கிட்டதட்ட முஸ்லீம் சடங்குகளைப் போன்றது.
இதையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால், வரலாறு எப்போதும் சிதைக்கப்படக் கூடாது. உண்மை நிலைத்திருக்க வேண்டும். இந்த மாநிலம் (கர்நாடகா) எல்லா காலக்கட்டத்திலும் மதச்சார்ப்பற்ற மாநிலம். மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்பட்டிருந்தாலும், மொழி மிக முக்கியமானதாக இருந்தாலும், இந்த மாநிலம் அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் மதச்சார்ப்பற்ற மாநிலம். இவ்வாறு அதில் அண்ணாமலை பேசியுள்ளார்.
இந்தக் காணொளியை பகிர்ந்துள்ள முகமது ஜூபைர் அதில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவருமான திரு அண்ணாமலை பேசிய திப்பு சுல்தான் பற்றிய பழைய காணொளி. இந்த வீடியோவை அவரது நண்பர் சி.டி ரவிக்கு அனுப்புகிறேன். அவர் அந்த வீடியோவைப் பார்த்து, வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறுவதை நிறுத்த வேண்டும். (வீடியோவில் அண்ணாமலை கூறியது போல). என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil