சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் இருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இரு மருத்துவர்களும் தலைமறைவாக உள்ள நிலையில், இருவரையும் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படியுங்கள்: கோவையில் ’அமைதிக்கான பயணம்’ நிகழ்ச்சி; அனைத்து மதத்தினரும் பங்கேற்பு
இந்தநிலையில் மருத்துவர்களை கைது செய்தால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத் தலைவர் கே.செந்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மரணம் தொடர்பாக, சங்கம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, சிகிச்சையின்போது ஏற்படும் இறப்பு தொடர்பாக, துறையைச் சேர்ந்த மூத்த நிபுணர்களின் கருத்துகளைப் காவல்துறையினர் பெற வேண்டும். அதில், சிகிச்சையின்போது கடும் கவனக்குறைவு இருப்பதாக தெரிவித்தால் மட்டுமே, காவல் துறையினர் 304-ஏ பிரிவில் வழக்குத் தொடர வேண்டும். அப்படி வழக்கு தொடர்ந்தாலும், மருத்துவர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவி உயிரிழந்த விவகாரத்தில், கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்துள்ளது. எனவே, ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே எடுக்க வேண்டும். மருத்துவரின் பெயரையோ, புகைப்படத்தையோ கிரிமினல் குற்றவாளிகளைப்போல ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.
இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் அதிகப்படியானது. மருத்துவர், செவிலியர், சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது. எனவே, மருத்துவர் மீது பதியப்பட்ட 304-ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும். அதையும்மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால், உடனடியாக மாநிலம் தழுவிய தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவு கோரி, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவி பிரியா மரணம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. எனினும், விசாரணையை முழுமையாகவும் நடுநிலையோடும் நடத்த வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும். உடற்கூறு ஆய்வு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். முழுமையான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். இதன்மூலம் இதுபோன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும்.
அரசு மருத்துவர்களை சட்டத்துக்கு புறம்பாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் கைதுசெய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும். தமிழக அரசு மருத்துவர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்புக் குறைபாடுகள், ஊழியர், மருத்துவர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்குத் தீர்வு காணாமல், அரசு மருத்துவமனைகளின் குறைபாட்டை மறைக்க, மருத்துவர்களைப் பலிகடா ஆக்குவது சரியா? எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.