பொறியியல் கலந்தாய்வு; 7 வயது சிறுமி கொலை? இடியுடன் மழை – தமிழ்நாடு ரவுண்ட் அப்

வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக வித்யா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

By: July 15, 2020, 8:20:39 PM

1. பாரத ரத்னா, தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 118-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கர்ம வீரர்’ என்று அன்போடு அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடும் இவ்வேளையில், அவரைப் பற்றி நினைவு கூர்வதை பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

2. உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.பி அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின் பலனாக கேபி அன்பழகன் உடல் நலம் தேறினார். இதையடுத்து, கேபி அன்பழகன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

3. திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக இணையதளத்தில் வரும் விமர்சனங்களில், திமுகவை கோர்த்து விடும் போக்கை ஒரு உத்தியாக சிலர் திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்று குறை கூறி உள்ளார் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சொன்னவர் அண்ணா என்றும் பகுத்தறிவுப் பிரச்சாரம் , ஆன்மீகப் பிரச்சாரத்துக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது’ என்று வழிகாட்டியவர் கருணாநிதி என்றும் நேரு குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 2வது பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து பக்தர்கள் மனம் புண்படும்படி வெளியான ஒரு இணையதளக் காட்சிக்குப் பின்னணியில் தி.மு.க.,வினர் இருப்பது போன்ற தோற்றத்தைச் சில அரசியல் அரைகுறைகள் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

திமுகவிற்கு என தனித்த வெளிப்படையான கொள்கைகள் உண்டு என்றும் யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை, யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார். இத்தகைய அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பும் தீயசக்திகளை இணையதளங்களில் இயங்கும் தி.மு.க.வினர் அடையாளம் கண்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள வடலிவிளையில் உள்ள காட்டுப்பகுதியில் 7-வயது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் டிரம்மில் சிறுமியில் உடல் இருந்ததால் சிறுமி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

5. கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் ராசாமணி. கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியும், கட்டுப்பாடுகளை விதித்தும், அறிக்கைகளை வெளியிட்டும் வந்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு நேற்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

6. நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும் .பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும்.

7. சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் – முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி வழக்கறிஞராக உள்ளார். இவர் சமீபத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில், வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக வித்யா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4, 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 4,496 பேருக்கு கொரோனா தொற்று – 1 லட்சம் பேர் குணம்

சென்னையில் இன்று ஒருநாளில் 1,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் 68 உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,167ஆக உள்ளது.

9. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை பெரம்பலூர், அரியலூர், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ok

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X