2023 – புத்தாண்டை வரவேற்க உலகமே உற்சாகமாக தயாராகி விட்டது. இதனையடுத்து, தமிழக ஆளுனர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்தில், “அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்! புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் தி.மு.க தனித்து நின்றால் பா.ஜ.க-வும் தனித்துப் போட்டியிடத் தயார்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்தின் அமுதகால பயணத்தில் உலக நாடுகளின் விஸ்வ குரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோர்ப்போம். உலகில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நமது தேசம் 2023-ஆம் புத்தாண்டில் நம்பிக்கையுடனும், அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது. நமது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டிற்கு நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க உறுதியுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். சில நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு நாம் விழிப்புடன் இருந்து கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். புத்தாண்டு-2023 நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சுதந்திரம், சமத்துவம் & சகோதரத்துவம் பாதுகாக்கப்படுவதற்கு சனநாயக சக்திகளை அய்க்கியப்படுத்துவோம்! சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்! இதனை புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்போம்! யாவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மலரும் புத்தாண்டில் அன்பும் அமைதியும் நிலைத்து அகத்தை சூழ்ந்திருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி, அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் இறைவனின் அருளோடு நீங்காத வளமும் நிறைவான நலமும் பெற்று உற்சாகமாக வாழ எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil