தமிழகத்தில் திருநங்கைகளுக்கான கிடைமட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரி, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநங்கை உரிமை ஆர்வலர்கள், கைது செய்யப்பட்டு கண்ணகி சிலை அருகே உள்ள சமுதாயக் கூடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் திருநங்கைகளுக்கான கிடைமட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திருநங்கைகள் மற்றும் திருநர்கள் போராட்டம் நடத்தினர். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் திங்கள்கிழமை சமூக நலத்துறை சார்பில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும் நிலையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சமூக நலத்துறை என்பது தமிழகத்தில் உள்ள திருநங்கைகளின் நலனைக் கவனிக்கும் முனைப்புத் துறையாகும்.
இதையும் படியுங்கள்: மோசடி புகார் மீது நடவடிக்கை இல்லை :கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து கண்ணகி சிலை அருகே உள்ள சமுதாயக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் வலுகட்டாயமாக திருநங்கைகளை வெளியேற்றியதாக போரட்டம் நடத்தியவர்கள் கூறியுள்ளனர்.
”திருநங்கைகளின் நலனுக்காக பல திட்டங்களைத் தொடங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை போரட்டத்திற்கு தேர்வு செய்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம், ஆனால் போலீசார் எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்,” என்று டிரான்ஸ் ஆர்வலர் மற்றும் டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ் நிறுவனர் கிரேஸ் பானு கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர்த் தகுதித் தேர்வு (TNTET), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) போன்ற போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், தகுதியான பல திருநங்கைகளால் அரசாங்க வேலைகளை பெற இயலவில்லை. எனவே எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை,” என்று கிரேஸ் பானு கூறினார்.
மேலும், ”கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு கிடைமட்ட இடஒதுக்கீடு கோரி ஏற்கனவே மாநில அரசுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியுள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில் நமது அண்டை மாநிலமான கர்நாடகா வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% கிடைமட்ட இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதை இன்று நடைபெறும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் பேசி நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். விதவை மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படுவதுபோல் திருநங்கைகளுக்கு குறைந்தபட்சம் 37 வயது வரை தளர்வு அளிக்க வேண்டும்” என்றும் கிரேஸ் பானு கூறினார்.
திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் தீர்ப்பில், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் போதிய இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விமர்சித்து ஓராண்டு நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இடஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை, இதனால் ஆறு தகுதி வாய்ந்த திருநங்கைகள் ஏமாற்றத்தில் உள்ளனர், அவர்களில் ஐந்து பேர் காவல்துறை பணிக்காகவும், ஒருவர் ஆசிரியர் பணிக்காகவும் போராடி வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil