Advertisment

இ.பி- ஆதார் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? எதிர்க்கும் அரசியல் கட்சிகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்காவிட்டால், மின் கட்டணம் செலுத்த அனுமதி மறுக்கக் கூடாது; போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் – தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tneb

தமிழ்நாடு மின்சார வாரியம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது பல்வேறு குழப்பங்களை எழுப்பிய நிலையில், மின்சார வாரியம் அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறது.

Advertisment

இதில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய சந்தேகம், ஒரே ஆதாரில் பல மின் இணைப்புகளை இணைக்க முடியுமா? அப்படி இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்குமா என்பது தான். இதற்கு மின்சார வாரியம், ஒரே ஆதாரில் பல மின் இணைப்புகளை இணைக்க முடியும் என்றும், 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இ.பி- ஆதார் இணைக்க ரெடி ஆகிட்டீங்களா? இன்று முதல் சிறப்பு முகாம்

இந்தநிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவசியம் என்ன என தமிழக அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மின்சார பயனீட்டாளர்களை ஆதார் அட்டையுடன் இணைக்க சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இவர்களை ஆதார் எண்ணுடன் இணைத்து படிப்படியாக 100 யூனிட் இலவச மின்சார சலுகையை பறிப்பதே ஒன்றிய அரசின் நோக்கமாகும். இதனை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த முன்வந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சார சலுகை பறிக்கப்படாது என மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் – ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியிலும் குறிப்பாக, வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மின் கட்டண உயர்வோடு, பொதுப் பயன்பாட்டிற்கான கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் ஆகியவற்றிக்கான மின்கட்டணம் இதுவரையில் 1-A என்ற அடிப்படையில் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1-D-யாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 கட்டணமும், நிலையான கட்டணம் ரூ. 200ம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உபயோக மின் கட்டணத்துடன், பொதுப் பயன்பாட்டிற்கான கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டிய இரட்டைச் சுமை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாத வருமானத்தில் வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மின் கட்டணத்திற்கே என்று பெரும் தொகை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

காலங்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பை தற்போது வணிக பயன்பாடு கட்டணமாக மாற்றியுள்ளது முறையற்றதாகும். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருவதால் இதில் வணிக பயன்பாடு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்து பொதுமக்களும், குடியிருப்பு சங்கங்களும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

சிறு-குறு நிறுனங்களின் உற்பத்தியாளர்களும் மின் கட்டண உயர்வால் தொழில் செய்ய முடியாத அளவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நிரந்தர கட்டணம் (பிக்சட் சார்ஜஸ்) என்பது 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அது தவிர குறைந்த மின் அழுத்த நிறுவனங்களுக்கு 0 முதல் 50 கிலோவாட் உபயோகப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ. 35லிருந்து ரூ. 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 50 முதல் 112 கிலோவாட் வரை உபயோகப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ. 300 என்றும், 112 கிலோ வாட்டுக்கு மேல் எச்.டி. தொழிற்சாலைகளுக்கு ரூ. 35லிருந்து ரூ. 550ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் பீக் ஹவர் சார்ஜஸ் மூலம் 15 விழுக்காடு வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. உயர்வு, கொரோனா தாக்கம் ஆகியவற்றிலிருந்து மீள முடியாத சிறு-குறு நிறுவனங்கள் தற்போது மின் கட்டண உயர்வால் தொழில் நடத்த முடியாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயமும் நேர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையிலும், கோவையிலும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் நவம்பர் 25ந் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பதை கைவிடவும், தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் ஆகியவற்றிற்கு 1-ஏ என்ற அடிப்படையிலேயே கட்டண விகிதம் வசூலிக்க வேண்டும்.

சிறு-குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வையும், பிக்சட் சார்ஜ் மற்றும் பீக் ஹவர் கட்டணத்தையும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து உரிய தீர்வினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், எனக் கடிதம் எழுதியுள்ளார்.

அதேநேரம், ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக! ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதேபோல், பா.ஜ.க.,வும் ஆதார் இணைக்க முடியாதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஆதார் இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த அனுமதி மறுக்க கூடாது. போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க தெரிவித்துள்ளது.

இதேபோல் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்!

மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக் கூடாது!

ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையானோருக்கு தெரியவில்லை. அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்!

ஆதாரை இணைப்பதற்கு குறைந்தது இரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது, பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment