கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பின்னர், சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 18-ம் தேதியான இன்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபான விற்பனை நிலையங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை விற்க அங்கீகாரம் பெற்ற ஒரே சில்லறை விற்பனையாளரான தமிழக டாஸ்மாக்கில், ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபானம் வாங்கும் நபர்கள் சமூக இடைவெளி விதிமுறைகளை கடைபிடிப்பது, மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து விதிகளையும் பின்பற்றுவது கட்டாயமாகும்.
”மதுபானக் கடைகளுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என டாஸ்மாக் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் மால்களில் உள்ள கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
மே 7-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், சென்னை பெருநகர மாநகராட்சி காவல்துறையின் அதிகார எல்லைக்குட்பட்ட சென்னை மற்றும் பிற புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளை தமிழக நிர்வாகம் தடைசெய்தது. கோவிட் -19 தொற்றுகள் அதிகரித்ததால் இந்தப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுகளை சென்னை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. ஆகஸ்ட் 17-ம் தேதி மேலும் 1,185 பேர் இந்த கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது, இதன் மொத்த எண்ணிக்கை தற்போது 1,17,839 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பு: வசந்தகுமார் எம்.பி.க்கு செயற்கை சுவாசம்
ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழ்நாட்டில் 5,890 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மொத்த எண்ணிக்கை தற்போது 343,945 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,667 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் எண்ணிக்கை 2,83,937 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, தமிழகத்தில் 54,122 ஆக்டிவ் தொற்றுகள் உள்ளன. திங்களன்று மேலும் 120 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”