சிலைக் கடத்தல் வழக்கு: சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைகள் வழக்கம்போல் தொடங்கியபோது நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில், டிராபிக் ராமசாமி ஆஜராகி முறையீடு ஒன்றை செய்தார். பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி ஏற்கனவே அரசிடம் அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக கிரானைட் முறைகேடுகள் தொடர்பாகவும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாகவும் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரி அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவும், அது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், இந்த நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை அவசர அவசரமாக தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி இருப்பதாகவும் இது உள் நோக்கம் கொண்டதாகவும், தற்போது சிலை கடந்த தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக விசாரணையை செய்து சிலைகளை மீட்டு வரும் நிலையில், வேண்டுமென்று இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
எனவே சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் முறையிட்டார்.
இந்த முறையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக மனு தாக்கல் செய்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் மனு தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதியளித்தனர்.
மேலும் பல சமீபத்திய செய்திகள் இங்கே