Thanjai Police SSI allegedly robbed Rs.46,300 from coconut merchant: வேலியே பயிரை மேய்வது போல வல்லம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) ஒருவர் வாகன சோதனை என்ற பெயரில் தேங்காய் வியாபாரி ஒருவரின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தி அவரிடமிருந்த ரூ.46,300ஐ வழிப்பறி செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னிடம் வழிப்பறி செய்த எஸ்.எஸ்.ஐ மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரக்கோரி வல்லம் டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட தேங்காய் வியாபாரி.
பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஆவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (53). தேங்காய் வியாபாரி. இவர் வியாழக்கிழமை இரவு ஜீவானந்தம் என்ற உதவியாளருடன் தனது மினி லாரியில் திருச்சி மார்க்கெட்டுக்கு தேங்காய் லோடு ஏற்றிச் சென்று விற்றுவிட்டு 46,300 ரூபாயுடன் ஊர் திரும்பியிருக்கிறார். வாகனத்தை அவரே ஓட்டி வந்துள்ளார். வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் அவரிடம் இல்லை.
இதையும் படியுங்கள்: ஒற்றைத் தலைமை பிரச்னை; பா.ஜ.க தலையீடு இல்லை: ஜெயக்குமார் உறுதி
வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வல்லம் அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது அங்கே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வல்லம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு எஸ்ஐ பாண்டியன் என்பவர் கணேசனின் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்திவிட்டு, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.46,300ஐ எடுக்கச் சொல்லி அதை பிடுங்கிக் கொண்டு, அவரை அங்கிருந்த ஒரு கோழி லோடு ஏற்றிய வேனில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒரு சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பி இருக்கிறார்.
தனது பணத்தை திருப்பி கேட்ட கணேசனை, ‘உன் மீது கேஸ் போட்டுருவேன். உனது வண்டியை பறிமுதல் செய்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார் சிறப்பு எஸ்ஐ பாண்டியன்.
இதையடுத்து, பட்டுக்கோட்டை சென்றடைந்த பாதிக்கப்பட்ட தேங்காய் வியாபாரி தனக்கு பரிச்சயமான வழக்கறிஞர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவரது ஆலோசனையின்பேரில், இச்சம்பவம் குறித்து அவசர உதவி எண் 100ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார் கணேசன். அப்போது மறுமுனையில் பேசிய பெண், இதுகுறித்து உடனடியாக வல்லம் டி.எஸ்.பி அல்லது தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், தேங்காய் வியாபாரி கணேசன் நடந்த சம்பவங்களை புகாராக எழுதி தனது வழக்கறிஞர் ராஜபிரபு மற்றும் உறவினர்கள் ரவி, சிவபாலன் ஆகியோருடன் வல்லம் டி.எஸ்.பி பிருந்தாவை நேரில் சந்தித்து தன்னிடம் பணம் பறித்த சிறப்பு எஸ்.ஐ பாண்டியன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் ரூ.46,300ஐ பெற்று தருமாறு மனு அளித்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர் ராஜபிரபு கூறுகையில், இதுபற்றி இரு தரப்பிலும் டி.எஸ்.பி விசாரணை செய்தார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டை சிறப்பு எஸ்ஐ பாண்டியன் மறுத்தார். கணேசனிடமிருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யவில்லை என பாண்டியன் கூறினார் என்றார்.
“அப்போது, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி கணேசன் சுமார் 70 கி.மீ தாண்டி வல்லத்தில் உள்ள சிறப்பு எஸ்ஐ பாண்டியன் மீது தன்னிடம் பணம் பறித்துக் கொண்டதாக வேண்டுமென்றே பொய் புகார் கொடுப்பதற்கான ‘மோட்டிவ் ‘எதுவும் இல்லை என்பதை டி.எஸ்.பி-யிடம் விளக்கினோம். அதை அவரும் புரிந்து கொண்டார்.
இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு பாண்டியன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருவதாக டி.எஸ்.பி. உறுதி அளித்துள்ளார்,” என்கிறார் வழக்கறிஞர் ராஜ பிரபு.
இக் குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று சம்பந்தப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பாண்டியனின் வீட்டில் போலீஸார் முறைப்படி அதிரடி சோதனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தேங்காய் வியாபாரியிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை பெற்று தருவதுடன், வழிப்பறியில் ஈடுபட்ட பாண்டியன் மீது அதற்குரிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.
வேலியே பயிரை மேய்வது போல போலீஸாரே வழிப்பறியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil