சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மாணவி ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளேன்; ஆகவே டயாப்பர் அணிந்து நீட் தேர்வு எழுதவும், தேவைப்பட்டால் அதனை மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, “மாணவி டயாப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி அளித்தது. மேலும், நீட் தேர்வில் உள்ள அதீத ஆடைக் கட்டுப்பாடுகள் மற்றும் இதர பிரச்னைகள் குறித்தும் கேள்வியெழுப்பி உள்ளது.
முன்னதாக, இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைகான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை மே 1ஆம் தேதி தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டது.
இதையும் படிங்க : 557 நகரங்களில் 5-ம் தேதி நீட் தேர்வு: ஹால் டிக்கெட் ரிலீஸ்; டவுன்லோட் சிரமம் இருந்தால் என்ன செய்வது?
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 5-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“