தெற்கிலிருந்து ஒரு சூரியன் விழிப்பதற்காக பிரார்த்திக்கும் தமிழ் நெஞ்சங்கள்

மீண்டு வர வேண்டும் சமூக வலைதள பிரார்த்தனைகள்

50 வருட அரசியல் பணி, யாருக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கிய சூரியனிற்கு என்ன ஆகிற்று?  இரண்டு நாட்களாக தொண்டர்கள் மட்டும் அல்லாது அரசியல் ரீதியாகவும் கொள்கைகள் ரீதியாகவும் மாற்றுக் கருத்துகளை கொண்ட மக்களும் தலைவர்களும் கூட பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

திருக்குவளை நாயகன் மீண்டு வந்து மீண்டும் கம்பீரமான குரலில் தமிழ் பேச மாட்டாரா என்று ஏங்கும் உள்ளங்கள் எத்தனையோ. அத்தனை குரல்களின் பதிவுகளையும் ஒரு சேர இங்கே பகிர முடியவில்லை என்றாலும் தமிழ் மக்களின் கட்டுமரமாக இன்று வரை விளங்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆரோக்கியத்தை வேண்டும் நல்லுங்களின் பதிவுகள் சில உங்களுக்காக.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருணாநிதியின் உடல் நலம் தேறி வர வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்ட பதிவு

ஒரு நல்ல பேச்சாளனாக தன்னை எப்போதும் முன்னிறுத்தும் கருணாநிதி தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க இங்கு மீண்டும் ஒரு அரசியல்வாதி பிறந்து வந்தால் அன்றி அது நடவாத காரியம் என்று அவரின் தொண்டர்களும் நலம் விரும்பிகளும் கருத்து பகிர்ந்துள்ளார்கள்.

குடும்ப அரசியல், ஊழல், தமிழ் ஈழ விடுதலைப் போரில் நடந்த குளறுபடிகள் என மக்களின் மனதில் தீராத வடுக்களை கருணாநிதி உருவாக்கியிருந்தாலும் தாய் தமிழ் மொழிக்கு சிறப்பு அங்கீகாரம் பெற்றுத் தந்து செம்மொழி மாநாட்டினை கோவையில் நடத்தி தந்தைத் தமிழின மக்களாக நம்மை பெறுமை அடையச் செய்தவர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது.

இந்த சூரியன் நூறாண்டுகள் தாண்டியும் தமிழ் மண்ணில் உதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் ஆயிரம் நல் உள்ளங்களையும் நற்பதிவுகளையும் தொடர்ந்து காண்பதில் தான் தெரிகிறது கருணாநிதி எனும் ஆளுமை எத்தனை நபர்களின் மனதில் நீடித்து நிலைத்திருக்கிறது என்று.

மாற்றுக் கருத்தினை வைக்கும் பிற கட்சியின் கொள்கைகளை உடையவர்களும் கூட கருணாநிதியின் உடல் நலம் சரியாகி அவர் மீண்டும் கோபால புரம் திரும்ப வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்கிறார்கள்.

தமிழிற்கும் தமிழ் மக்களுக்கும் நீ ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் இருக்கும் தலைவா… காவிரியில் இருந்து எழுந்துவா என்பது அனைவரின் ஒட்டுமொத்த வேண்டுதல்களாகவும் பிரார்த்தனைகளாவும் ஒலிக்கிறது. எழுந்துவா சூரியனே

கருணாநிதியின் உடல் நலம் பற்றிய லைவ் அப்டேட் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close