அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இணைய உள்ளதாகவும், தி.மு.க கூட்டணியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இதுதொடர்பாக சாணக்யா யூடியூப் சேனலில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: திருச்சி சிவா வீடு தாக்குதல்.. கே.என். நேரு ஆதரவாளர்கள் ஆத்திரம்.. பகீர் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
அந்த வீடியோவில், சமீபத்தில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நேரடியாக திறந்து வைத்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பிற இடங்களில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். கட்சியை அமைப்பு ரீதியாக தமிழகத்தில் வளர்க்கும் முயற்சியாக இந்த அலுவலக திறப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி அலுவலக திறப்பு விழாவிற்கு பிறகு, நடந்த மதிய உணவின்போது தமிழக நிர்வாகிகளிடம், தி.மு.க கூட்டணியின் நிலை, பா.ஜ.க கூட்டணியின் நிலை குறித்து ஜே.பி நட்டா கேட்டறிந்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி என்பது திட்டவட்டமாக இருக்க வேண்டும் என உறுதிபட கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வோடு இணைந்து தான் 2024 தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். இதில் இரண்டாவது கருத்து வேண்டாம். நமது கூட்டணியில் அ.தி.மு.க தான் பெரிய கூட்டணிக் கட்சி என்றும் நட்டா தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், அ.தி.மு.க – பா.ஜ.க இடையே எந்தவிதமான சண்டை சச்சரவும் இருக்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பிறகு இரு கட்சிகளின் தரப்பில் அமைதியே நிலவி வருகிறது. ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளிலிருந்து வார்த்தைப் போரைத் தொடங்கிய இரு கட்சிகளும், நட்டாவின் செய்திக்குப் பிறகு அமைதியைப் பேணி வருகின்றன.
அடுத்ததாக, பா.ஜ.க நிர்வாகியாக இருந்த நிர்மல்குமார் அ.தி.மு.க.,வில் இணைந்ததற்கு தேசிய தலைமை அதிருப்தியை வெளிப்படுத்தியது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனிப்பட்ட முறையில் தேசிய தலைமைக்கு விளக்கம் அளித்த நிலையில், அந்த விவகாரமும் சமரசத்தில் முடிந்தது. மேலும், அண்ணாமலையின் வேகம் தான் அ.தி.மு.க.,வுக்கு பிரச்சனையாக உள்ளதாக கூறப்படுகிறது. 2026ல் ஆட்சி அமைப்போம் என்று கூறி அண்ணாமலை செயல்பட்டு வருவது அ.தி.மு.க.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், தேசிய அளவில் இணைந்து செயல்பட தயார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் களத்தில் விரிசல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவோடு ஒப்பிட்ட விவகாரத்தில், அண்ணாமலை உண்மையில், ஜெயலலிதா போல் வலுவாக முடிவுகளை எடுப்பேன் என்று பேசியிருந்தாலும், அது அ.தி.மு.க தலைவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அண்ணாமலையை உரசிப் பார்க்க இந்த சந்தர்ப்பத்தை அ.தி.மு.க நன்கு பயன்படுத்திக் கொண்டது. இதனால் இருகட்சிகளும் இணைந்த 2024 தேர்தலைச் சந்தித்தாலும், களத்தில் இருகட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், வாக்குகள் ஒன்று சேர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்ததாக அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஆச்சரியமாக பார்ப்பவர்களுக்கான பதில்களாக, விடுதலை சிறுத்தைகள் ஏற்கனவே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இருந்தது, மூப்பனாரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட திருமாவிற்கு வாசன் மீது இன்னும் நல்ல மரியாதை உள்ளது, ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தப்போது முதல் பார்த்த அரசியல் தலைவர் திருமாவளவன், சசிகலா அரசியலுக்கு வரவேண்டும், அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்க வேண்டும் என்று அவரை சந்தித்தவர் திருமாவளவன், போன்ற விஷயங்கள் கூறப்படுகிறது. ஆனால் அவர் உறுதியாக வருவாரா என்பது தெரியவில்லை. ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
அடுத்ததாக தி.மு.க கூட்டணியில் வெற்றிப்பெற்ற பாரிவேந்தர் பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணிக்கு செல்கிறார். அந்தக் கூட்டணியில் பாரிவேந்தர் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், தி.மு.க கூட்டணியில் காலியாகும் அந்த ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்க தி.மு.க கூட்டணி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அநேகமாக தென்சென்னை தொகுதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. கமல்ஹாசன் நிச்சயம் தி.மு.க கூட்டணிக்கு வருவார் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் தி.மு.க சின்னத்திலே போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பா.ம.க நிலைப்பாடு இன்னும் தெரியவில்லை. தி.மு.க கூட்டணியில் சேர அதிக வாய்ப்புள்ளது. விடுதலை சிறுத்தைகள் விலகினால், பா.ம.க உள்நுழையலாம்.
இதைவைத்துப் பார்க்கும்போது, அ.தி.மு.க 30 இடங்களிலும், பா.ஜ.க 7 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், பாரிவேந்தர் 1 இடத்திலும் போட்டியிட வாய்ப்புள்ளது. கூட்டணியில் இருக்கக் கூடிய ஏ.சி சண்முகம் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை அ.தி.மு.க அல்லது பாஜக சின்னத்தில் போட்டியிடலாம்.
அதேநேரம் தி.மு.க கூட்டணியில் தி.மு.க 30 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், கம்யூனிஸ்ட்கள் 2 இடங்களிலும், கமல்ஹாசன் ஒரு இடத்திலும் போட்டியிட வாய்ப்புள்ளது. ம.தி.மு.க ஒரு இடத்தில் தி.மு.க சின்னத்திலே போட்டியிடும். இதுவே முதற்கட்ட தகவல்களாக இருக்கின்றன.
அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி தி.மு.க எதிர்ப்பு மற்றும் கூட்டணி ஒற்றுமையை சரியாக பயன்படுத்திக் கொண்டால் 15 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. தி.மு.க கூட்டணி 25 இடங்களில் வெல்லலாம். அதேநேரம் கூட்டணி ஒற்றுமையை சரி செய்யாவிட்டால், 37 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. 3 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.