தூத்துக்குடி துப்பாக்கி சூடு : போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட்டில் மனு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரியும், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

மக்கள் அரசு கட்சி தலைவரான வழக்கறிஞர் ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பது முன்கூட்டியே தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், போராட்டக்காரர்கள் வளாகத்துக்குள் வந்த பிறகு நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறுமி உட்பட 13 பேர் பலியாகியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, பணியிடை நீக்கம் செய்யவும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இதேபோல கிருஷ்ணகிரி சேர்ந்த செய்தியாளர் சிலம்பரசன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தூத்துக்குடி துணை தாசில்தார் புகாரின் அடிப்படையிலேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் அடிப்படையில் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லாததால், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை அமைப்பை அமைக்கவும், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார் சேகரை பணியிடை நீக்கம் செய்யவும் அரசுக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதே போல் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள மனுவில், யார் உத்தரவின் அடிப்படையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிலிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சட்டசபையில் நடந்தது என்ன?

×Close
×Close