தமிழகத்தில் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்க்-களுக்கு கட்டுப்பாடு: பிற்பகல் 2.30 வரை மட்டுமே அனுமதி

சமைக்க தேவைப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களை சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம்.

By: Updated: March 28, 2020, 07:32:13 AM

கொரோனா நோய்த் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக காய்கறி, மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவு கொண்டுவரும் நிறுவனங்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவளிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு பல கட்டுப்பாடுகளை முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்த்தார். இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை (மார்ச் 29) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பு வருமாறு:

தமிழக அரசு கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இது சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகள் அரசால் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.


தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் போன்ற பொருட்களும் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவும், ஒரு சிலர் கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல், தெருக்களிலும் சாலைகளிலும் தேவையின்றி நடமாடுவதைக் கட்டுப்படுத்தவும், முதல்வர் பழனிசாமி இன்று உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

சென்னையில் உங்கள் ‘ஆல் இன் ஆல்’ தேவைகளுக்கு – இதோ தொலைபேசி எண்கள்

கொரோனா நோய் தொற்று முதலாம் கட்டத்தில் இருந்து, இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் நிலையில், பொது மக்களுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பணிகளை இடையூறின்றி மேற்கொள்ளவும், கொரோனா நோய்த் தொற்று பொது மக்களுக்கு பரவாமல் தடுக்கவும், பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த உத்தரவுகள் மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி, பழ அங்காடிகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும்.

வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் பணியாளர்கள் முறையாக பாதுகாப்பு, சுகாதார முறைகளை கடைபிடித்தல் போன்றவற்றை சென்னையில் மாநகராட்சி ஆணையரும் பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களும் ஒரு சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும், இந்த மார்கெட் பகுதிகளில் பொது சுகாதாரம் பேணப்பட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு, தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும். எனினும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊர்திகள் போன்ற ஊர்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் பங்குகள் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும்.

மருந்தகங்கள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும்.

வயது முதிர்ந்தோர் வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோர், சமைத்த உணவு பொருட்களை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர். இத்தகையோரின் நலன் கருதி “Swiggy, Zomato, Uber Eats” போன்ற நிறுவனங்களின் மூலம், காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச்சென்று வழங்க சிறப்பினமாக அனுமதிக்கப்படுகிறது.

எனினும் இத்தகைய பணியில் ஈடுபடும் நபர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலமாக காவல்துறையிடம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களின் உடல்நிலையை தினந்தோறும் பரிசோதித்து, பின்னர் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இத்தகைய கடுமையான சூழ்நிலையில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

சமைக்க தேவைப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களை சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம். மாவட்ட நிர்வாகம், இவற்றுக்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிரிவைத் தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம்.

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விரும்புவோரும், மருத்துவ உபகரணங்கள் வழங்க விரும்புவோரும், அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தை அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவற்றுக்கென அந்தந்த மாவட்டத்தில் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு உள்ளது என்பது தெளிவு படுத்தப்படுகிறது. எனினும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் போதிய சுகாதார முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பமுடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். மாநிலத்திலிருந்து வெளியேற முடியாத தொழிலாளர்களுக்கு அவசர கால உதவியாக அந்தந்த மாவட்ட நிர்வாகமும், சென்னை மாநகராட்சியும் தேவைக்கு ஏற்ப உரிய வசதிகளை செய்துதர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுகாதார கட்டுப்பாட்டு அறை தவிர மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளையும், சுகாதாரத்துறை அவசர கால கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையம் “தலைமை கட்டுப்பாட்டு மையமாக” வலுப்படுத்தப்படுகிறது.

பிப்ரவரி 15-க்குப் பிறகு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள், தங்களைத் தாங்களே கட்டாயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விபரத்தை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கை, சம்பந்தப்பட்ட நபர்களையும், அவர்களின் குடும்பங்களையும், சமுதாயத்திலுள்ள மற்ற மக்களையும் பாதுகாக்க வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு சிகிச்சையளிக்க மாநிலம் முழுவதும் சுமார் 15,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை 350 படுக்கைகள் கொண்ட COVID–19 சிறப்பு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் – கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிடில் பேரிழப்பு நிச்சயம் : ஆய்வு

சென்னையில் COVID–19 மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மொத்தம் 200 மருத்துவர்கள், 200 செவிலியர்கள், 100 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 180 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 40 பாதுகாவலர்களைப் பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் சார்பில் பத்து கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் இம்மருத்துவமனைக்கு வழங்கவும், 24 மணி நேர காய்ச்சல் புற நோயாளிகள் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளும் செயல்பட அறிவுறுத்தினார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் இத்தருணத்தில் பொது மக்களும் இந்நோய்ப் பரவலின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Time regulations for petrol bunk vegetable shops in tamil nadu corona virus threat cm palaniswamy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X